குடிநீர்ப் பஞ்சத்தில் தவிக்கும் இராமநாதபுரம் மாவட்ட கிராமமொன்றில் குடிநீர்ச் சிக்கலைத் தீர்க்க கிணறு வெட்டப்படுகிறது.அந்தக் கிணற்றில் பூதத்துக்குப் பதிலாக பழங்கால உயிரினமான டைனோசர் எலும்புக்கூடு கிடைக்கிறது.அதுவரை யாரும் அறியாமலிருந்த அந்த கிராமம் நாடெங்கும் அறியப்படுகிறது.அதனால் அங்கு வசிக்கும் மக்கள் பல்வேறு சிக்கல்களுக்கு ஆளாகிறார்கள்.அவை என்னென்ன? அவற்றிற்கான எதிர்வினைகள் என்னென்ன? என்பதைச் சொல்லியிருக்கும் படம் கெணத்த காணோம்.

நாயகனாக நடித்திருக்கும் யோகிபாபு,ஊர் நன்மைக்காக தன் வீட்டையே தானமாகக் கொடுக்கும் நல்லமனசுக்காரர்.ஆனால் அதன்பின் நடக்கும் நிகழ்வுகளால் ஊருக்கே ஆபத்து என்றதும் அதற்காகப் போராடும் போராளி ஆகிய பரிமாணங்களைக் கொண்ட வேடமேற்றிருக்கிறார்.அதற்கேற்ப நடித்துமிருக்கிறார்.அவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் வசனங்கள்,அந்த வேடத்தின் கனத்தையும் புலம்பெயர் மக்களின் வலியையும் உணர்த்தக் கூடியவையாக அமைந்திருக்கின்றன.

யோகிபாபுவின் காதலியாக லவ்லின் சந்திரசேகர் நடித்திருக்கிறார்.பாலைவனச் சோலையாக இருக்கிறார்.அவரை இன்னும் கூடுதலாகப் பயன்படுத்தியிருக்கலாம் என்று எண்ண வைத்திருக்கிறார்.

தொல்லியல் துறை அதிகாரியாக வருகிறார் ரேச்சல் ரெபெக்கா.கடைசி விவசாயி படத்தில் நீதிபதியாகவே மாறியிருந்தவர் இந்தப்படத்தில் அதிகாரியாகவே ஆகியிருப்பது அவரது சிறப்பு.அவரது உதவியாளராக நடித்திருக்கும் இராமகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியராக நடித்திருக்கும் ஜார்ஜ் மரியன் ஆகியோர் சரியான தேர்வு.

எல்லாப்படங்களிலும் சிரிக்க வைக்கிற யோகிபாபு இந்தப்படத்தில் நாயகனாகிவிட்டதால் நகைச்சுவைக்குப் பொறுப்பேற்றிருக்கிறார் ஹலோ கந்தசாமி.அந்தப் பொறுப்பைத் தட்டிக்கழிக்காமல் எல்லா இடங்களிலும் வாய்விட்டுச் சிரிக்க வைத்து படத்துக்குப் பெரும் பலமாக இருக்கிறார்.

வறட்சியை வறட்சியின்றிப் பதிவு செய்வது சவாலான செயல்.அதைத் திறம்படச் செய்து பாதிக்கப்படும் மக்களின் உணர்வுகளை பார்க்கும் அனைவருக்கும் கடத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் தியாகராஜன்.

பாடல்களிலும் கதை சொல்லியிருக்கும் இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா, பின்னணி இசை மூலம் வறிய மக்களின் வலிய உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறார்.

கலை இயக்குநர் சுபேனந்தர் கைவண்ணத்தில் வறண்ட கிராமமொன்று அசலாகப் பதிவாகியிருக்கிறது.இந்தப்படத்துக்கு அவர் பெரும் அடையாளமாக இருக்கிறார்.

படத்தொகுப்பாளர் ராமர்,படத்தை சலிப்பின்றி நகர்த்திச் சென்றிருக்கிறார்.

ஒரு கிடாயின் கருணை மனு, சத்திய சோதனை ஆகிய படங்களின் இயக்குநர் சுரேஷ் சங்கையா,இந்தப்படத்தையும் இயக்கியிருக்கிறார்.படம் வெளிவருமுன் அவர் மறைந்துவிட்டார். எளிய மக்களின் அகவலியை எடுத்தியம்பியிருக்கும் அவர்,அவருடைய படைப்புகள் மூலம் உயிர்த்திருப்பார்.

– இளையவன்

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.