ஆங்கிலத்தில் உள்ள ஏ இ ஐ ஓ யு (A, E, I, O, U) ஆகிய ஐந்து எழுத்துகளும் வவ்வல்ஸ் (உயிரெழுத்துகள்) என்று அழைக்கப்படுகின்றன.இந்த வவ்வல்ஸ் எனும் சொல்லை ஒரு திரைப்படத்துக்கு வைத்திருக்கிறார்கள்.அதற்குக் காரணம் இருக்கிறது.இது ஐந்து கதைகளைக் கொண்ட படம்.ஒவ்வொரு கதையையும் வெவ்வேறு இயக்குநர் இயக்கியிருக்கிறார்.இந்த ஐந்தையும் இணைக்கும் ஒற்றைப்புள்ளி காதல்.
1. காதலால் நடக்கும் கொலை.
2. ஆபத்தான பயணத்தின் மீது கொண்டிருக்கும் கண்மூடித்தனமான காதல் மற்றும் அதன் விளைவுகள்.
3. காதல் போயின் சாதல் என்போரைச் சிந்திக்க வைக்கும் உணர்வுப்பூர்வமான காதல்
4.ஐயந்திரிபற செய்யும் காதல்
5.அகத்தில் அறியப்படும் காதலே மெய்
இப்படி வெவ்வேறு விதமான கதைகளைச் சொல்லியிருக்கிறது படம்.
ஐந்து கதைகளிலும், யூகி சேது, சின்னி ஜெயந்த், ராஜ் ஐயப்பா, சம்யுக்தா விஸ்வநாதன், நண்டு, தீபக் ரமேஷ், பரமேஷ், காஜல் செளத்ரி, பீட்டர்.கே, சரத் ரவி, அக்ஷிதா போபையா, பிரியங்கா சந்திரசேகர், பரத் போபண்ணா, விஜிதா வசிதா ஆகிய நடிகர் நடிகையர் நடித்திருக்கிறார்கள்.
யூகி சேது வழக்கம்போல் அமைதியாக அணுகுண்டுகளை வீசிச்செல்கிறார். அவருடைய வேடமும்,பேசும் வசனங்களும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கின்றன.
சின்னி ஜெயந்த்க்கு கல்லூரிப் பேராசிரியாகப் பதவி உய்ர்வு கொடுக்கப்பட்டிருக்கிறது.அவரும் அந்தப் பொறுப்புக்கேற்ற பொறுப்போடு நடித்திருக்கிறார்.
மற்ற நடிகர்களும் ஏற்றுக்கொண்ட பாத்திரங்களுக்கேற்ப நடித்திருக்கிறார்கள்.
ஐந்து இயக்குநர்களுக்கு இரண்டு ஒளிப்பதிவாளர்கள். கீர்தன் பூஜாரி மற்றும் சந்தீப் அல்லூரி ஆகியோர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள்.ஒவ்வொரு கதையும் காட்சிகள் மற்றும் வண்ணங்களில் மாறுபட்டுத் தெரியவேண்டுமென மெனக்கெட்டிருக்கிறார்கள்.
ஐந்து கதைகளுக்கு ஒரே இசையமைப்பாளர்.சரவண சுப்பிரமணியம் இசைத்திருக்கிறார்.பாரம்பரிய இசை,மேற்கத்திய இசை உட்பட பல வகைகளையும் தேவைக்கேற்ப பயன்படுத்தியிருக்கிறார்.அது காட்சிகளுக்குப் பலம் சேர்த்து இரசிக்க வைத்திருக்கிறது.
ஹரீஷ் கோம்மே படத்தொகுப்பு செய்திருக்கிறார்.கதைகளை வரிசைப்படுத்திய விதம், ஒவ்வொரு கதைக்கும் தொடக்கம் உள்ளடக்கம் முடிவு எனப் பிரித்துப்பிரித்து தொகுத்திருப்பது ஆகியன படத்தோடு சேர்ந்து பயணிக்க உதவியிருக்கிறது.
திலீப் குமார், ஹேமந்த் குமார், சங்கீத், சந்தோஷ் ரவி, ஜெகன் ராஜேந்திரன் ஆகிய ஐந்துபேர்தாம் இயக்குநர்கள்.இது தனி ஓட்டமல்ல தொடர் ஓட்டம் என்பதை உணர்ந்து உழைத்திருக்கிறார்கள்.எந்தக்கதையாக இருந்தாலும் அதைச் சுவையாகச் சொல்லவேண்டியது அவசியம் என்கிற பாலபாடத்தைச் சரியாகப் பயின்றிருக்கிறார்கள்.சிற்சில குறைகளைத் தாண்டி இரசிக்க வைத்திருக்கும் புதிய முயற்சி
– இளையவன்
