நாயகன் கலையரசன் மற்றும் நாயகி தீபா பாலு ஆகியோர் கைபேசி மூலம் காதலர்களாகிறார்கள்.பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொள்கிறார்கள்.நாயகி கர்ப்பமாகிறார்.அவருக்கு தன்னுடைய ஊர் வழக்கப்படி நிறைசூலி கடவுளுக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்ய நினைக்கிறார் கலையரசன்.நாயகியும் ஒப்புக்கொண்டு உடன் செல்கிறார்.சில தடங்கல்களுடன் நடக்கும் அந்தப்பயணத்தில் எதிர்பாராத அதிர்ச்சியூட்டும் நிகழ்வு நடக்கின்றது. அது என்ன? என்பதை நெஞ்சம் நடுங்கச் சொல்லியிருக்கும் படம் கொலைச்சேவல்.
கதாநாயகனாக நடித்திருக்கும் கலையரசனுக்காகவே இப்படிப்பட்ட கதாபாத்திரங்கள் உருவாக்கப்படுகின்றனவா? என்று கேட்குமளவுக்கு அவர் ஏற்கெனவே நடித்த பல படங்களின் கதாபாத்திரங்களை நினைவுபடுத்தும் வேடம்.அதனால் மிக இயல்பாக நடித்து நற்பெயர் பெறுகிறார் கலையரசன்.
அறிமுக நடிகை தீபா பாலு நாயகியாக நடித்திருக்கிறார்.எளிய அழகு. குடும்பப்பாங்கான தோற்றம்.நிறைமாத கர்ப்பிணி வேடத்துக்கு ஏற்ற பொருத்தமான நடிப்பு ஆகிய எல்லாவற்றிலும் வரவேற்புப் பெறுகிறார்.அவர் தாக்குதலுக்கு உள்ளாகும்போது அனைவரையும் அழ வைத்துவிடுகிறார்.
நகைச்சுவை நடிகர் பால சரவணனுக்கு இந்தப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரம்.வேடத்தின் இயலாமையை நடிப்பில் வெளிப்படுத்தியாக வேண்டும் என்பதை உணர்ந்து அதற்கேற்ப நடித்திருக்கிறார்.
கதையில் மிக முக்கிய வேடமேற்றிருக்கிறார் கஜராஜ்.பேசாமலே கதாபாத்திரத்தின் கொடூர சிந்தையை வெளிப்படுத்தக் கூடிய வேடம்.சரியாகச் செய்திருக்கிறார்.
விஜய் சத்யா, ஆதவ் சந்திரன், அகரன் வெங்கட், விஜலட்சுமி, ஜெயலட்சுமி, ராஜாமணி, தனலட்சுமி, மஞ்சுளா, கயல், மணிமேகலை என படத்தில் நிறைய நடிகர் நடிகைகள்.எல்லோரும் கிராமத்து மனிதர்களாகவே நடமாடிக் கொண்டிருக்கிறார்கள்.
கிராமத்துக் கதைகளின் சிறப்பாளரான பி.ஜி.முத்தையா இந்தப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.அவ்ருடைய உழைப்பில் கிராம அழகுகளும் அதன் உள்ளழுக்குகளும் அப்படியே வெளிப்பட்டிருக்கிறது.காட்சிகளின் துல்லியம் கலங்க வைக்கிறது.
சாந்தன் இசையமைத்திருக்கிறார்.முன்னால் இருக்கும் அழகுகளை அவற்றின் பின்னால் இருக்கும் ஆபத்துகளையும் பாடல்களிலும் வெளிப்படுத்தியிருக்கிறார்.பின்னணி இசையில் இன்னும் கூடுதலாக அவற்றைச் சொல்லி பதற வைக்கிறார்.
படத்தொகுப்பாளர் அஜய் மனோஜ்,எதிர்பார்க்கக் கூடிய விசயங்களை எதிர்பாராத காட்சிகள் மூலம் கொடுக்க எண்ணி படத்தைத் தொகுத்திருக்கிறார்.
எழுதி இயக்கியிருக்கிறார் வி.ஆர்.துதிவாணன்.இன்னமும் இந்தச் சமுதாயத்தில் நிறைந்திருக்கும் சாதிய ஆணவங்களை அதன் கொடூரங்களை அவற்றை மனதில் வைத்திருக்கும் கோரமுகத்தினரை அப்பட்டமாகக் காட்டியிருக்கிறார்.
– இளையவன்

