முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை பிரதிபலிக்கும் ஒரு கதாபாத்திரத்தை வைத்துக் கொண்டு தமிழ்நாட்டு அரசியலைப் பற்றிப் பேசியிருக்கும் படம் வெஞ்சன்ஸ்.
இப்படத்தில் நாயகியாக நடித்திருக்கும் அபர்ணதிக்கு, சிறுவயதிலிருந்தே தன்னைப் பற்றி மற்றவர்கள் பேசவேண்டும் என்கிற தீராத ஆசை.அதனாலேயே பத்தாம்வகுப்புப் பொதுத்தேர்வில் மாநிலத்திலேயே முதல்மாணவியாக வருகிறார்.அவர் நினைத்ததுபோல் அவரைப் பற்றி நிறையப் பேசுகிறார்கள்.பாராட்டுகிறார்கள்.ஆனால் அவையெல்லாம் சில நாட்களில் முடிந்துவிடுகிறது.அது அவருக்குப் போதவில்லை.அதனால் தன்னைக் கவனிக்க வைக்க அதிரவைக்கும் செயல்களைச் செய்கிறார்.அப்படிப்பட்டவர் படித்து மாவட்ட ஆட்சியராகிறார்.அப்போது முதலமைச்சரோடு மோதல் வருகிறது.அதன்பின் அவரையே கட்டுப்படுத்துமளவுக்கு உயர்கிறார்.அது எப்படி? என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதுதான் திரைக்கதை.
ஜெயலலிதாவை நினைவுபடுத்தும் வேடத்தில் நடித்திருக்கிறார் நாயகி அபர்ணதி.அதனால் அவரைப் போல் நடை உடை பாவனைகளைச் செய்திருக்கிறார்.தோற்றத்தில் கம்பீரமும் நடிப்பில் ஆழமும் கொண்டு இரசிகர்களை ஈர்க்கிறார்.பல இடங்களில் நடிப்பினால் பயமுறுத்துகிறார்.
முதலமைச்சராக நடித்திருக்கும் இளவரசு,ஒன்றிய அமைச்சராக நடித்திருக்கும் ஜான் விஜய், அபர்ணதியின் தந்தையாக நடித்திருக்கும் காளி வெங்கட், எதிர்க்கட்சித் தலைவராக நடித்திருக்கும் லிவிங்ஸ்டன், முன்னாள் முதலமைச்சராக நடித்திருக்கும் ஒய்.ஜி.மகேந்திரன், அமைச்சராக நடித்திருக்கும் சரவண சுப்பையா,பிரதமராக நடித்திருக்கும் மங்கல் ஆகிய அனைவரும் பொருத்தமாக நடித்திருக்கிறார்கள்.
டி.எம்.கார்த்தி,சுரேஷ் சக்கரவர்த்தி,நோபல் கே.ஜேம்ஸ்,சச்சு,சாய் தன்யா,ரேகா நாயர்,சிறுமி சம்யுக்தா ஆகிய நடிகர்களும் அளவு.
கதைக்களம் அரசியல் என்றாலும் காட்சிகளில் மலர்ச்சி காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் எம்.எஸ்.பிரபு.அவருடைய உழைப்பில் நாயகி அபர்ணதி கூடுதல் அழகாக இருக்கிறார்.
கார்த்திக் ராஜாவின் இசையில் பாடல்கள் கேட்கும் இரகம்.பரபரப்பான திரைக்கதைக்கேற்ப பின்னணி இசையும் அமைந்திருப்பதால் காட்சிகள் பரபரவென இருக்கின்றன.
இம்ரானின் படத்தொகுப்பு படத்தைத் தொய்வின்றி நகர்த்திச் செல்லப் பாடுபட்டிருக்கிறது.
தன்னைப்பற்றி மற்றவர்கள் பேசவேண்டும்,பாராட்டவேண்டும் என்று தீராத ஆசையுடன் ஒரு பெண் இருந்தால் என்னவெல்லாம் நடக்கும்? என்பதையும், அந்தப் பெண் அரசியலில் இருந்தால் நாட்டின் நிலை எப்படி இருக்கும்? என்பதையும் துணிச்சலாக வெளிப்படுத்திப் பதற வைத்திருக்கிறார் இயக்குநர் ராகுல் அசோக்.
தலைப்பிலேயே சில விசயங்களைச் சொன்னதோடு,சமகால அரசியல் நிகழ்வுகளை நினைவுபடுத்தும் விதமாகக் காட்சிகள் அமைத்து காலக்கண்ணாடியாக இந்தப்படத்தை மாற்றியிருக்கிறார் இயக்குநர்.
– இளையவன்

