காவல்நிலையத்தில் இளைஞரொருவர் தாக்கப்படுகிறார்.அவ்ருடைய தந்தை செல்வாக்கானவர் என்று தெரிந்ததும் அவரை ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் போட்டுவிடுகிறார்கள்.அங்கு அவர் மரணமடைகிறார்.அதனால் வெகுண்டெழுந்த அந்த இளைஞனின் தந்தை,காவலர்களின் குடும்ப உறுப்பினர்களைக் கொலை செய்யத் தொடங்குகிறார்.இதற்கு காவல்துறை என்ன நடவடிக்கை எடுக்கிறது? இளைஞர் இறந்தது எப்படி? என்கிற கேள்விகளுக்கான விடைகள்தாம் போலீஸ் ஃபேமிலி படம்.

இக்கதையில் நாயகனாக நடித்திருக்கிறார் புதுமுகம் ராஜா மலைசாமி.அவர் ஏற்றுக்கொண்டிருக்கும் காவல்துறை உதவிஆய்வாளர் வேடத்துக்கேற்ற மிடுக்குடன் இருக்கிறார்.அதேநேரம் ஒரு பாசமிகு குடும்பத்தலைவனாகவும் கலங்க வைக்கிறார்.

முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் சரவணன், மகன் மீது பேரன்பு கொண்டு அதனாலேயே பெருங்கோபம் கொள்ளும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.அந்த வேடத்துக்கு அவரும் அவருடைய அனுபவமும் மிக உதவியாக அமைந்திருக்கிறது.

திரைக்கதையின் முக்கியமான திருப்பத்திற்கான கதாபாத்திரம் ஏற்றிருக்கிறார் காதல் சுகுமார்.தன் வழக்கமான நடிப்பைக் கைவிட்டு இந்த வேடத்துக்குத் தக்க நடித்திருக்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் நிஷாதுபே வுக்குப் பெரிதாக வேலையில்லை.ஆனாலும், கொடுத்த வேலையைக் குறையில்லாமல் செய்து கவனம் ஈர்த்திருக்கிறார்.

சுரேகா.ஆர்,ரோஜன் லியோன்,ரத்தினம்,தாஸ் சாந்தகுமார்,எம்.எஸ்.செல்வா ஆகிய மற்ற நடிகர்களும் அளவாக நடித்து படத்தை இயல்பாக்கியிருக்கிறார்கள்.

ஜெயகுமார் தங்கவேல் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.இந்தக் கதைக்கு என்ன தேவை? என்பதை உணர்ந்து அதற்கேற்ப காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்.அதனால் படம் மிக இலகுவாகப் பயணிக்கிறது.

ஜெயா கே.தாஸ் இசையில் பாடல்கள் கேட்கும் வண்ணம் இருக்கின்றன.பின்னணி இசை திரைக்கதைக்குக் கூடுதல் அழுத்தம் கொடுக்கும் வண்ணம் அமைந்திருக்கிறது.

படத்தொகுப்பு செய்திருக்கும் எம்.எஸ்.செல்வா, திரைக்கதையை முழுமையாக உள்வாங்கி படத்தைத் தொகுத்திருக்கிறார்.அதனால் திரைக்கதையில் இருக்கும் படபடப்பு திரையிலும் தொடருகிறது.

இன்றைக்கு நாட்டில் இருக்கும் சிக்கல்களில் முக்கியமானது காவல்நிலைய மரணங்கள்.காவல்துறையினரின் அதிகாரத் திமிரில் மட்டும் அப்படிப்பட்ட நிகழ்வுகள் நடக்கின்றன என்கிற ஒற்றைப் பார்வைக்கு மாற்றுப் பார்வையாக இப்படத்தின் கதையை எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர் பாலு.எம்.அதை போரடிக்காத திரைமொழியில் சொல்லியிருப்பதும் நன்று. சிற்சில குறைகள் இருப்பினும் ஒரு நிறைவான அனுபவம் கொடுக்கும் படமாக அமைந்திருக்கிறது.

– இளையவன்

YouTube player

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.