இணையத்தொடரின் தொடக்கத்திலேயே விஜய்சேதுபதியின் தலை மட்டும் ஓரிடத்தில் கிடைக்கிறது.அவருடைய உடல் எங்கே? என்கிற காவல்துறையின் தேடலில் விரிகிறது தொடர்.

முத்து என்கிற அலியாஸ் காட்டான் எனும் வேடத்தை ஏற்றிருக்கிறார் விஜய்சேதுபதி.தொடரின் தலைப்பில் மட்டுமின்றி ஒட்டுமொத்தத் தொடரையும் தன் தலையில் தாங்கியிருக்கிறார்.கடிகாரம் பழுது நீக்கும் கடைப் பணியாளர், யானைப் பாகன், ஆதரவற்றோர் இல்லத்தின் மேலாளர், சரக்கு வாகன ஓட்டுநர், பெண் நடனக் கலைஞர்களின் பாதுகாவலர் எனப் பல வேடங்களை ஏற்றிருக்கிறார்.எல்லா வேடங்களிலும் சிரத்தையாக நடித்திருக்கிறார் என்று தனியாகச் சொல்லத் தேவையில்லை.சாப்பிடப் போன இடத்தில் நடக்கும் நிகழ்வுகள்,அவ்வளவு தங்கத்தைப் பார்த்தும் அலைபாயாத மனம் ஆகியனவற்றால் ஒவ்வொருவர் மனதிலும் உயர்ந்து நிற்கும் அவர் செய்யும் கொலைகளிலும் கவனம் ஈர்க்கிறார்.

சிட்டு எனும் துறுதுறுபெண் வேடத்தில் நடித்து அனைவரையும் ஈர்த்திருக்கிறார் அபி நட்சத்திரா.ரிஷாஜேகப்ஸும் அவருக்கு இணையாக நடித்திருக்கிறார்.

லலிதா எனும் மதுரைப்பெண் வேடமேற்று அதற்குத்தக்க மாறியிருக்கிறார் வி.ஜே.பார்வதி.

மிலிந்த் சோமன்,முத்துக்குமார்,சிங்கம்புலி,வடிவேல் முருகன்,பாலாஜி சக்திவேல்,சிந்து உள்ளிட்டோரும் தொடருக்குப் பலம் சேர்த்திருக்கிறார்கள்.

மது.என் மற்றும் என்.சண்முகசுந்தரம் ஆகியோர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். திரைக்கதையில் இருக்கும் உணர்வுகளுக்கேற்ற ஒளியமைப்பு செய்து இரசிக்க வைத்திருக்கிறார்கள்.

ராஜேஷ் முருகேசனின் பின்னணி இசை தொடரின் வேகத்தைக் கூட்டிக்காட்டப் பயன்பட்டிருக்கிறது.

ஜாக்கி மற்றும் சாபு மோகன் ஆகியோரது கலை இயக்கம் கதைக் களங்களுக்கு வலுச்சேர்த்திருக்கிறது.

கதை எழுதி இயக்கியிருக்கும் மணிகண்டன் மற்றும் படத்தொகுப்பு செய்து இயக்கியிருக்கும் பி.அஜித்குமார் ஆகியோர்,முத்து எப்படி காட்டான் ஆகிறார்? பல கொலைகளைச் செய்தவரைக் கொன்றவர் யார்? தலை மட்டும் இருக்கிறது உடல் எங்கே? ஆகிய கேள்விகளுக்கான விடைகளை யாரும் யூகிக்க முடியாத வண்ணம் அதேசமயம், எதார்த்த வாழ்வியலோடு இணைத்துச் சொல்லி வரவேற்புப் பெறுகிறார்கள்.ஒவ்வொரு அத்தியாயமும் தொடங்குகிற இடமும் முடிகிற இடமும் முக்கியம் என்பதை உணர்ந்து அதற்கேற்ப எழுதியிருக்கிறார்கள்.எழுதியதை விறுவிறுப்பாகக் காட்சிப்படுத்திக் கொண்டுபோயிருப்பது கூடுதல் சிறப்பு.

– கதிரோன்

குறிப்பு – மொத்தம் பத்து பாகங்களைக் கொண்ட இந்த இணையத் தொடர், மார்ச் 27,2026 முதல் ஜியோ ஹாட்ஸ்டார் இணையதளத்தில் காணக்கிடைக்கிறது.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.