படத்தின் தலைப்பு நட்புக்கான அடையாளமாகச் சொல்லப்படும் சொல்லான முஸ்தபா முஸ்தபா.அதை வைத்துக் கொண்டு நட்பு,காதல்,நகைச்சுவை ஆகியனவற்றை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்திருக்கும் இந்தப்படத்தில், நாயகனாக நடித்திருக்கும் நகைச்சுவை நடிகர் சதீஷ்,காதலித்துத் திருமணம் செய்து கொள்ளும் நேரத்தில் அந்தத் திருமணத்துக்குத் தடையாக ஒரு சிக்கல் வருகிறது.அது என்ன சிக்கல்? அதிலிருந்து நாயகன் மீண்டாரா? இல்லையா? என்பதைச் சொல்லியிருக்கிறது படம்.
தொலைக்காட்சி ஒன்றில் பணியாற்றும் கதையின் நாயகன் சதீஷ், எந்தக் கதையாக இருந்தாலும் அதில் நம்மிடம் நகைச்சுவையைத்தான் மக்கள் எதிர்பார்ப்பார்கள் என்பதை உணர்ந்து அதற்கேற்ப நடித்திருக்கிறார்.அதற்குத்தக்க அவருடைய கதாபாத்திரத்தையும் வடிவமைத்திருக்கிறார்கள்.இரண்டும் ஒன்றுக்கொன்று இசைந்து அவருக்குப் பலம் சேர்த்திருக்கிறது.
சதீஷின் நண்பராக,இன்னொரு நாயகனாக நடித்திருக்கும் சுரேஷ் ரவி,சதீஷுக்கு ஈடுகொடுத்தால்தான் தப்பிக்க முடியும் என்பதைக் கருத்தில் கொண்டு தன்னைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.
சதீஷ்,சுரேஷ்ரவி ஆகியோரின் நண்பராக நடித்திருக்கும் கருணாகரன்,அவரிடம் மக்கள் எதிர்பார்ப்பதைப் பூர்த்தி செய்திருக்கிறார்.திரைக்கதையிலும் அவருக்குக் கூடுதல் முக்கியத்துவம் இருப்பது அவருக்குச் சாதகமாக அமைந்திருக்கிறது.
சதீஷுக்கு இணையராக நடித்திருக்கும் மோனிகா சின்னகொட்லா, சுரேஷ்ரவிக்கு இணையராக நடித்திருக்கும் மானசா செளத்ரி ஆகியோருக்குப் பெரிய அளவில் திரை இருப்பு இல்லை என்றாலும் வருகிற இடங்களில் நிறைவாகச் செய்து வரவேற்புப் பெறுகிறார்கள்.
நகைச்சுவையை அடிப்படையாகக் கொண்ட படம் என்பதால், சாம்ஸ், லிவிங்ஸ்டன், உமா, புகழ், சூப்பர் குட் சுப்பிரமணி ஆகிய நடிகர்களைத் தேர்ந்தெடுத்து நடிக்க வைத்திருக்கிறார்கள்.அவர்களும் தத்தம் பங்கைச் சரியாகச் செய்து சிரிக்க வைக்கிறார்கள்.
படம் முழுக்க முழுக்க வண்ணமயமாக இருக்கவேண்டும் என்கிற ஒற்றை நோக்கத்துடன் உழைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் கே.எஸ்.விஷ்ணு ஸ்ரீ.நமக்கும் நடிகர்களுக்கும் அது பலன் தருவதாக அமைந்திருக்கிறது.
படத்தில் இருக்கும் துள்ளலை பாடல்களிலும் கொண்டு வந்து இரசிக்கும்படி பாடல்களைக் கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபர்ட்.பின்னணி இசையிலும் காட்சிகளுக்குப் பலம் சேர்த்திருக்கிறார்.
படத்தொகுப்பாளர் தினேஷ் பொன்ராஜ்,இன்னும் கொஞ்சம் கூர்மையாக இருந்திருக்கலாம்.
எழுதி இயக்கியிருக்கிறார் பிரவீன் சரவணன்.ஒரு சின்னசிக்கலை வைத்துக்கொண்டு முழுநீளப் படத்தை அதுவும் நகைச்சுவைப் படத்தைக் கொடுக்கும் சவலான முயற்சியில் இறங்கியிருக்கிறார்.அதில் பாதி வெற்றி பெற்றிருக்கிறார்.
– இளையவன்
