கொலைகளைப் பற்றித் துப்புதுலக்கும் படங்கள் வரிசையில் வந்திருக்கிறது அனோமி. சமூக விதிமுறைகள் பலவீனமாகி, தனிநபர்கள் சமூகத்தில் தங்களைக் கைவிடப்பட்டவர்களாக உணரும் ஒரு நிலையை அனோமி என்று குறிப்பிடுகிறார்கள்.

இந்தக்கதையிலும் மனதளவில் பலவீனமானவர்கள் தொடர்ந்து மரணமடைகிறார்கள்.அது தற்கொலை என்று சொல்லப்படுகிறது.உண்மையிலேயே தற்கொலைதானா? அல்லது கொலையா? கொலை என்றால் யார் செய்தார்கள்? எதற்காகச் செய்தார்கள்? ஆகிய கேள்விகளுக்கான விடைகள்தாம் படம்.

இந்தக்கதையின் நாயகி பாவனா, தடவியல் நிபுணர்.சாலை விபத்தொன்றில் தனது பெற்றோரை இழக்கிறார்.அந்தவிபத்தில் உயிர் பிழைத்த அவரது தம்பி மனரீதியாகப் பாதிக்கப்பட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறார்.அவரைக் காப்பாற்றி பாதுகாத்து வருகிறார்.

இந்நிலையில்,பாவனாவின் தம்பி போன்ற மனநிலையில் இருக்கும் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார்.சிலதினங்களில் அதேமுறையில் பாவனாவின் தம்பியும் இறக்கிறார்.இவை இரண்டுமே கொலை என்று பாவனா சொல்கிறார்.காவல்துறை மறுக்கிறது.அதன்பொன் தாமே களத்தில் இறங்குகிறார் பாவனா.அதன்பின் என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதை விறுவிறுப்பாகச் சொல்லியிருக்கிறது படம்.

தடவியல் நிபுணராக நடித்திருக்கும் பாவனா,அதற்கேற்ற முதிர்ச்சியைக் கொண்டிருக்கிறார்.ஒவ்வொரு மில்லிமீட்டரையும் துல்லியமாக ஆராய்ந்து அவர் திரட்டும் தடயங்கள், அவற்றின் மூலம் கொலையாளியை அவர் நெருங்கும் விதம் ஆகிய எல்லா இடங்களிலும் மிகப் பொருத்தமாக நடித்து அந்த வேடத்துக்கும் படத்துக்கும் பலம் சேர்த்திருக்கிறார்.இந்த வேகத்துக்கு நீரூற்றுவது பாசம் என்று சொல்லப்பட்டுவிட்டதால் வேடத்தின் அடர்த்தி அதிகமாகியிருக்கிறது.

காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் ரகுமானுக்கு இதுபோன்ற வேடம் அல்வா சாப்பிடுவது போல. அழகாகச் செய்து வரவேற்புப் பெறுகிறார்.

பாவனாவின் தம்பி ஷெபின் பென்சன்,காதலன் அர்ஜுன்லால் மற்றும் பினு பப்பு, விஷ்ணு அகஸ்தியா ஆகிய நடிகர்கள் பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.அவர்கள் நடிப்பும் அளவாக அமைந்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர் சுஜித்சாரங்,திரைக்கதையில் சொல்லப்பட வேண்டிய செய்திகளைக் காட்சியில் சொல்ல நினைத்து வெற்றி பெற்றிருக்கிறார்.கொலையானவர்களின் கண்கள் போலச் செயல்பட்டு இரசிக்க வைத்திருக்கிறார்.

ஹர்ஷவர்தன் இராமேஸ்வரின் இசையில் பாடல்கள் கதையோடு இசைந்திருக்கிறது.கேட்கலாம்.பின்னணி இசையில் நெஞ்சாங்கூட்டை அதிரவைக்கிறார்.

படத்தொகுப்பாளர் கிரியன் தாஸ்,தொடக்கத்திலேயே கதைக்குள் அழைத்துச் சென்று கடைசிவரை படபடப்புடன் பார்க்க வைத்திருக்கிறார்.

எழுதி இயக்கியிருக்கிறார் ரியாஸ் மராத்.இதுபோன்ற கதைகளில் மாறுபட்டிருப்பது கொலைக்கான காரணம் தான்.அதை முற்றிலும் வித்தியாசமாக யோசித்து அதற்கேற்ப திரைக்கதையையும் அமைத்திருக்கிறார்.அவருடைய தொழில்நுட்பக் குழுவினரும் சரியாக ஒத்துழைத்திருப்பதால் ஒரு விறுவிறு த்ரில் அனுபவத்தைப் பார்வையாளர்களுக்குக் கொடுத்திருக்கிறார்கள்.

– இளையவன்

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.