ஏறுதழுவுதல் போல் மஞ்சுவிரட்டு என்பதும் நம்முடைய பாரம்பரிய மாடுபிடி விளையாட்டுகளுள் ஒன்று.அதை மையமாகக் கொண்டு வந்திருக்கிறது வடம்.

இப்படத்தின் நாயகன் விமல்,நிறைய பஞ்சாயத்துகளுக்குச் சொந்தக்காரர்.அடிதடி,வம்பு வழக்கு என்று இருப்பவர்.இன்னொரு பக்கம் மஞ்சுவிரட்டுக்காளைக்குச் சொந்தக்காரர்.யாராலும் அடக்கமுடியாத காளையை வைத்திருப்பவர் என்கிற பெருமையும் உண்டு.ஒருகட்டத்தில் காளை உடல்நலம்குன்றி சிகிச்சைக்குப் போகிறது.இன்னொரு பக்கம்,இவரைக் கொலை செய்ய முயற்சி நடக்கிறது? இவற்றால் நொந்துபோயிருக்கும் நேரத்தில் நாயகியைச் சந்திக்கிறார்.காதல் கொள்கிறார்.மறுமலர்ச்சி அடைகிறார். ஆனால் அது நீடிக்கவில்லை.ஏன்? எதனால்? அதன்பின் என்ன நடக்கிறது? என்கிற கேள்விகளுக்கான விடைகள்தாம் படம்.

மாடுபிடிவீரராக நடிப்பதற்குத்தான் நிறைய மெனக்கெட வேண்டும் மாடுவளர்க்கும் வீரர் என்பதால் தம் இயல்புக்கு மாறாமல் நடித்திருக்கிறார் விமல்.காதலியின் வருகையில் மகிழ்ச்சியும் அதன்பின் ஏற்படும் அதிர்ச்சியும் அவர் நடிப்பில் நன்றாக வெளிப்படுகிறது.முறுக்குமீசை தோற்றம் அவருக்கு மேலும் பலமாக அமைந்திருக்கிறது.

நாயகியாக நடித்திருக்கும் சனஷ்காஸ்ரீ, அழகான புதுவரவு.முதல்படத்திலேயே கனமான வேடம்.அதற்குத்தக்க நடித்துமிருக்கிறார்.அவருக்கு இன்னும் கூடுதல் வாய்ப்பு கொடுத்திருக்கலாம்.

எதிர்நாயகனாக நடித்திருக்கும் நட்டி, அதற்கு எப்போதுமே பொருத்தமானவர்தான்.இந்தப்படத்திலும் குறை வைக்காமல் நிறைவாக நடித்திருக்கிறார்.

முனீஷ்காந்த்துக்கு இந்தப்படத்தில் மிக முக்கிய வேடம்.அதில் சரியாக நடித்து நல்ல வரவேற்பைப் பெறுகிறார்.

விமலின் அப்பாவாக நடித்திருக்கும் நரேன்,அம்மாவாக நடித்திருக்கும் இந்துமதி,அத்தையாக நடித்திருக்கும் தீபா சங்கர், உறவினராக நடித்திருக்கும் பால சரவணன், பகையாளியாக நடித்திருக்கும் மதுசூதனன் ராவ் ஆகிய அனைவரும் அசல் கிராமத்து மனிதர்களாகவே நடமாடியிருக்கிறார்கள்.

பிரன்னா எஸ்.குமார் ஒளிப்பதிவில் மஞ்சுவிரட்டு காட்சிகள் கண்களில் நிறைகின்றன.கிராமத்து அழகுகளை அப்படியே திரையேற்றி இரசிக்க வைத்திருக்கிறார்.

டி.இமானின் இசை, இந்தப்படத்தில் இன்னொரு நாயகன்போல் இருக்கிறது.பாடல்கள் அனைத்தும் கேட்டு இரசிக்கும் இரகம்.பின்னணி இசையிலும் புகுந்து விளையாடியிருக்கிறார்.

சாபு ஜோசப்.வி.ஜெ,வின் படத்தொகுப்பு, பார்வையாளர்களுக்கு புதியபுதிய விசயங்களைக் கற்றுக் கொடுக்கும் வகையில் அமைந்திருக்கிறது.

எழுதி இயக்கியிருக்கிறார் கேந்திரன்.வி.சவாலான கதைக் களத்தை எடுத்துக்கொண்டு அதைச் சரியாகக் கொடுத்துவிட வேண்டும் என்று மெனக்கெட்டிருப்பது புலனாகிறது.மண்மணமும் ஈரமனிதர்களும் அவருக்குப் பக்கபலமாக இருக்கிறார்கள்.நான்கு ஐந்து கதைகளை வைத்துக் கொண்டு அவற்றைச் சரியான புள்ளியில் இணைத்திருப்பது அவருடைய பலம்.

– இளையவன்

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.