டம் முழுக்க வன்முறையைக் காட்சிப்படுத்திவிட்டு கடைசியில் வன்முறை தப்பு என்று கருத்துச் சொல்கிற படங்களைப் பார்த்திருக்கிறோம்.பள்ளி வாழ்க்கையில் படிப்பின் மீது கவனம் செலுத்தாமல் தப்பு செய்யும் கதைநாயகனை வைத்துக் கொண்டு படிப்பு முக்கியம் என்கிற கருத்தைச் சொல்லும் படமாக வந்திருக்கிறது யூத்.
குறைந்த மதிப்பெண் எடுத்த காரணத்தால் 11 ஆம் வகுப்பில் சேரமுடியாத சிக்கலில் இருக்கும் நாயகன் கென்கருணாசை அப்பா சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் அம்மா தேவதர்ஷினி ஆகியோர் மிகவும் போராடி 11 ஆம் வகுப்பில் சேர்க்கிறார்கள்.அப்போதும் படிப்பில் கவனம் செலுத்தாமல் சுற்றுகிறார்.அதனால் என்னவெல்லாம் நடக்கின்றன? இறுதியில் என்ன மாற்றம் நடக்கிறது? என்பதை சுவாரசியமாகச் சொல்லியிருக்கும் படம் யூத்.
பள்ளி மாணவரை கதாநாயகனாக்கியிருப்பது தப்பு என்றாலும் அதிலும் அந்த மாணவன் படிக்காமல் காதல் என்று நினைத்து ஏதேதோ செய்கிறான் என்பதைச் சொல்வது மிகவும் தப்பு என்றாலும், தன்னுடைய துள்ளலான நடிப்பால் அந்தத் தப்பு முன்னால் வராமல் பார்த்துக் கொண்டிருக்கிறார் கென்கருணாஸ்.நகைச்சுவை மற்றும் பாசக் காட்சிகளிலும் பொருத்தமாக நடித்து நல்ல வரவேற்பைப் பெறுகிறார்.
அனிஷ்மா அனில்குமார், மீனாட்சி தினேஷ், பிரியான்ஷி யாதவ் என படத்தில் மூன்று நாயகிகள் இருக்கிறார்கள்.மூவரும் பள்ளி மாணவிகள் என்பது வேதனையான விசயம்.ஆனால், அவர்களுடைய தோற்றப் பொலிவு, துறுதுறுப்பு, நடிப்பு ஆகியன அவர்களையும் படத்தையும் இரசிக்க வைத்திருக்கிறது.
நாயகனின் தந்தையாக நடித்திருக்கும் சுராஜ் வெஞ்சரமுடு,பரிதாபகரமான அப்பாக்களின் பிரதிநிதியாக இருக்கிறார்.மக்ன் மீதான பாசம், கோபம், ஆதங்கம், தவிப்பு ஆகிய உணர்வுகளைச் சிறப்பாக வெளிப்படுத்தும் அவருடைய அனுபவ நடிப்பு அந்த வேடத்தின் தன்மையை பன்மடங்கு உயர்த்திருக்கிறது.
நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் தேவதர்ஷினி,பிள்ளைகள் மீது பெரும்பாசம் காட்டும் அம்மாவாக அழகாக நடித்திருக்கிறார்.அவருடைய அப்பாவித்தனமான நடிப்பு காட்சிகளுக்குக் கூடுதல் சுவை சேர்க்கின்றன.
ஒளிப்பதிவாளர் விக்கி, படத்தை வண்ணமயமாகக் காட்டியிருப்பதோடு, பார்த்தவுடன் பரவசம் கொள்ளும் வகையிலும் காட்சிகளை வடிவமைத்துப் படமாக்கி இரசிக்க வைத்திருக்கிறார்.
படத்தின் இன்னொரு கதாநாயகன் போல் இருக்கிறார் இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ்.பாடல்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தருவதாக அமைந்திருக்கின்றன.திரைக்கதையின் போதாமைகளை பின்னணி இசை மூலம் இட்டுநிரப்பி படத்துக்குப் பலம் சேர்த்திருக்கிறார்.
நாஷின் படத்தொகுப்பு படத்தை வேகமாக நகர்த்திச் செல்லும் முயற்சியில் வென்றிருக்கிறது. ராமு தங்கராஜின் கலை இயக்கம், கதை நடக்கும் காலகட்டத்தைக் கண்முன் நிறுத்தப் பாடுபட்டிருக்கிறது.
பள்ளி மாணவ மாணவியரை நாயகன் நாயகியாக வைத்திருப்பது தவறு என்பதைத் தாண்டி, நாகரிகமான கதாபாத்திர வடிவமைப்புகள் அவற்றை நேர்த்தியாகக் காட்சிப்படுத்தியிருக்கும் பண்பு,எல்லாவற்றையும் நேர்மறையாக அணுகும் போக்கு ஆகியனவற்றின் மூலம் இயக்குநராகவும் கவனம் ஈர்த்திருக்கிறார் கென் கருணாஸ்.எடுத்துக் கொண்ட கதையை திரைமொழியில் சரியாக மொழிபெயர்க்கும் திறமை அவரிடம் இருக்கிறது என்பதற்குச் சான்றாக இந்தப்படம் அமைந்திருக்கிறது.குடும்பமும் படிப்பும்தான் சரியான வாழ்க்கைக்குத் தேவையானவை எனும் கருத்தை அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார்.
– இளையவன்

