படம் ஒரு பரபரப்பான புகாருடன் தொடங்குகிறது. ஒரு இளம் பெண் இனியா (கவிதா விஜயன்), தனது தந்தையைக் காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார். தந்தை எங்கே சென்றார்? அவர் கடத்தப்பட்டாரா அல்லது திட்டமிட்டு மறைக்கப்பட்டாரா? என்ற கேள்விகளுடன் காவல்துறை விசாரணை தொடங்குகிறது. இந்தத் தேடல் ஒரு கட்டத்தில் ஏலகிரியின் இயற்கை எழில் கொஞ்சும் மலைப் பகுதியில் இயங்கி வரும் ஒரு மர்மமான சொகுசு விடுதி நோக்கி நகர்கிறது. வெளியுலகிற்கு அது ஆடம்பரமான இடமாகத் தெரிந்தாலும், அதன் உள்ளே ஊழியர்கள் கொத்தடிமைகளாக நடத்தப்படுகிறார்கள். தப்பிக்க முயற்சிக்கும் ஊழியர்கள் மீது விடுதி நிர்வாகம் கொடூரமான வன்முறையை ஏவி வருகிறது. பண பலமும், அதிகார பலமும் கொண்ட அந்த நிர்வாகம், ஊழியர்களின் சுதந்திரத்தைப் பறித்து அவர்களை சித்திரவதை செய்வதுடன் அவர்களை கொல்லவும் செய்கிறது.
இந்நிலையில், சிறார் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து வெளியே வருகிறார் நிகில் (சஞ்சய்). அங்கிருந்து தனது சித்தப்பா இருக்கும் ஏலகிரிக்கு செல்லும் அவர், தனது பின்னணியை மறைத்து அங்கிருக்கும் சன்னி ஃபன்னி அண்ணாச்சியின் (இமான் அண்ணாச்சி) ஹோட்டலில் வேலைக்கு சேர்கிறார். அங்கு அவருக்கு பிச்சாண்டி (காத்து கருப்பு கலை) நட்பு கிடைக்கிறது. ஒரு எதிர்பாராத சம்பவத்தினால், இமான் சன்னி ஃபன்னி அண்ணாச்சி பிச்சாண்டியை வேலையை விட்டு நீக்குகிறார். இதையடுத்து, நிகில் மற்றும் பிச்சாண்டி இருவரும் திட்டமிட்டு இந்த சர்ச்சைக்குரிய சொகுசு விடுதியில் வேலைக்கு சேர்கிறார்கள்.
அந்த ஹோட்டலில் மேலாளர் ஊழியர்களை அடிமைப்படுத்தி வைத்திருப்பது ஒருபுறம் இருக்க, மறுபுறம் ஒரு மிகப்பெரிய மாஃபியா கும்பல் இயங்கி வருகிறது. அங்கு வரும் இளம் ஜோடிகள் தங்கும் அறைகளில் ‘ஹிடன் கேமரா’ மூலம் அவர்கள் அந்தரங்கத்தை படம் பிடித்து, அதை வைத்து மிரட்டி பணம் பறிக்கும் சட்டவிரோத தொழில் நடப்பதை சஞ்சய் கண்டறிகிறார். திடீரென ஒரு நாள் இரவு, ஒரு முகமூடி அணிந்த மர்ம நபர் அந்த விடுதி மேலாளரை மிகவும் கொடூரமாக கொலை செய்கிறார். மேலும், அங்கிருக்கும் ரகசிய வீடியோ ஆதாரங்கள் அடங்கிய கோப்புகளையும் கைப்பற்றுகிறார். அந்த மர்ம நபர் யார்? நிகில் ஏன் அந்த விடுதிக்கு வலிய வந்து வேலைக்குச் சேர்ந்தார்? ஏலகிரி விடுதி நிர்வாகத்தினரின் பின்னணி என்ன..? காணாமல் போன இளம் பெண் இனியாவின் தந்தைக்கும் இந்த விடுதிக்கும் என்ன தொடர்பு? போன்ற கேள்விகளுக்கு பதில் அளிக்கிறது படத்தின் மீதிக் கதை.
நாயகன் நிகில், ஒரு அறிமுக நடிகராக தெரியவில்லை. முதல் படத்திலேயே மிகவும் சவாலான ஒரு கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார். ரூம் பாயாக உடல் மொழியில் ஒருவிதமான அடக்கத்தையும், அதே சமயம் ஒரு ரகசிய நோக்கத்திற்காக வந்தவர் என்பதால் கண்களில் ஒரு தேடலையும் மிகச்சரியாக வெளிப்படுத்தியுள்ளார். கிளைமாக்ஸ் மற்றும் ஹோட்டல் அறைகளுக்குள் நடக்கும் சண்டைக் காட்சிகளில் சிறப்பாக செய்திருக்கிறார்.
நாயகி ஹர்ஷா ஒரு நடுத்தர வர்க்கத்துப் பெண்ணின் கனவுகளையும், எதிர்பார்ப்புகளையும் தனது துடிப்பான நடிப்பால்வெளிப்படுத்தியுள்ளார். பிளாஷ்பேக் காட்சிகளில் தன் பங்களிப்பை உணர்வுப்பூர்வமாக வழங்கியுள்ளார்.
அருண்ராஜா அதிகாரமும், திமிரும் கொண்ட ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் அவரது மிரட்டலான பார்வை படத்திற்கு பலம் சேர்க்கிறது.
இமான் அண்ணாச்சி தனது வழக்கமான பாணியில் இருந்து விலகி, கதையோடு ஒன்றிய நடிப்பை வழங்கியுள்ளார்.
காத்து கருப்பு கலை மற்றும் கற்பகம் ஆகியோர் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி உள்ளனர்.
பிர்லா போஸ் (சந்துரு), கவிதா விஜயன் (இனியா), சமீர் (ஜேம்ஸ் ஜாகிரியா), சிட்டி ராஜா (டிபிடி குணா), பிரபாகர் (இன்பதுரை), கேரளா பெஹமின் (ஷாலினி) உட்பட அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தின் ஆழத்தை புரிந்து, கதையின் தீவிரத்தைக் குறையாமல் பார்த்துக் கொண்டுள்ளனர்.
மும்பை மாடல் அழகி நிதி மரோலி, ஒரு சிறப்புப் பாடலுக்குக் கவர்ச்சிகரமான மற்றும் துள்ளலான நடனத்தை வெளிப்படுத்தி இளைஞர்களைக் கவர்ந்துள்ளார்.
இசையமைப்பாளர் வேலன் சகாதேவன் பின்னணி இசை த்ரில்லர் காட்சிகளுக்கு உயிரூட்டுகிறது. பாடல்கள் கதையின் வேகத்தைத் தடை செய்யாமல் அமைந்திருப்பது சிறப்பு.
ஒளிப்பதிவாளர் சி.பாரதி ராஜன் கேமரா கோணங்கள், அந்த மர்ம சொகுசு விடுதியின் பிரம்மாண்டத்தையும், ரகசிய அறைகளின் இருட்டையும் தத்ரூபமாக படம் பிடித்துள்ளன.
படத்தொகுப்பாளர் மீனாட்சி சுந்தரம் கத்தரி, தேவையற்ற காட்சிகளை தவிர்த்து படத்தை விறுவிறுப்பாக நகர்த்துகிறது.
ஸ்டண்ட் இயக்குனர் கார்த்திக்வர்மனின் சண்டைக் காட்சிகள் மிகைப்படுத்தாமல், எதார்த்தமாக உள்ளது.
தமிழ்நாடு அரசு திரைப்படக் கல்லூரி மாணவரான ஜெகன் ராயன், ஒரு க்ரைம் த்ரில்லர் கதையை எதார்த்தம் மாறாமல் சமூக அக்கறையுடன் கையாண்டுள்ளார். கொத்தடிமை முறை, அந்தரங்கக் கேமரா மிரட்டல் மற்றும் பழிவாங்குதல் என மூன்று வெவ்வேறுகதையோட்டங்களைச் சிதறாமல் ஒரே புள்ளியில் இணைத்து, ஒரு விறுவிறுப்பான திரைக்கதை அமைத்து க்ரைம் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லராக வழங்கியுள்ளார்.
நடிகர்கள் :-
நாயகன் சி.நிகில் (சஞ்சய்), நாயகி ஹர்ஷா (நிஷா), இமான் அண்ணாச்சி (சன்னி ஃபன்னி அண்ணாச்சி), பிர்லா போஸ் (சந்துரு), யூடியூப் புகழ் காத்து கருப்பு கலை (பிச்சாண்டி), இன்ஸ்டா புகழ் கற்பகம் (சுமதி), கவிதா விஜயன் (இனியா), சமீர் (ஜேம்ஸ் ஜாகிரியா), சிட்டி ராஜா (டிபிடி குணா), அருண்ராஜா (வில்லன்), பிரபாகர் (இன்பதுரை), கேரளா பெஹமின் (ஷாலினி). இவர்களுடன் மும்பை மாடல் அழகி நிதி மரோலி ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார்.
தொழில்நுட்ப கலைஞர்கள் :-
ஒளிப்பதிவு – சி.பாரதி ராஜன் டிஎஃப்டி
பாடல்கள் – சூரியமூர்த்தி
இசை – வேலன் சகாதேவன்
படத்தொகுப்பு – டி.வி.மீனாட்சி சுந்தர்
நடனம் – தினா
ஸ்டண்ட் – கார்த்திக் வர்மன்
உடைகள் – வளையாபதி
தயாரிப்பு மேலாளர் – முத்துக்குமார்
தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர் – ஏ.சக்தி.
தயாரிப்பு மேற்பார்வை – ஆர்.முரளி.
தயாரிப்பு நிறுவனம் – ஏசிஎம் சினிமாஸ்
தயாரிப்பு – சூரியகலா சந்திரமூர்த்தி
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் ஜெகன் ராயன். இவர் தமிழ்நாடு அரசு திரைப்படக் கல்லூரியில் பயின்றவர்.
மக்கள் தொடர்பு – புவன் செல்வராஜ்
