ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள ‘கருப்பு’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது.

நடிகர்- இயக்குனர் என பன்முக ஆளுமை திறன் படைத்த ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படத்தில் சூர்யா, திரிஷா, யோகி பாபு, ஆர் ஜே பாலாஜி, இந்திரன்ஸ், நட்டி நட்ராஜ், சுவாசிகா, ஷிவதா, அனகா மாயா ரவி, சுப்ரீத் ரெட்டி, மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜி. கே. விஷ்ணு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார். ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் எஸ் ஆர் பிரபு மற்றும் எஸ் ஆர் பிரகாஷ் பாபு ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் உள்ள இந்த திரைப்படம் மே 14 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் படக் குழுவினர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் நடிகர் சூர்யா பேசுகையில், ” மதுரை எனக்கு எப்போதும் மிகவும் சிறப்பான ஒரு இடமாக திகழ்கிறது. இங்குள்ள உணவு, அரசியல் மற்றும் பெண்களை தெய்வமாக மதிக்கும் பண்பு ஆகியவை என்னை எப்போதும் ஈர்க்கின்றன. மதுரை மண்ணிற்கு நான் கடன் பட்டிருக்கிறேன். நிறைய திரைப்படங்களை நான் இங்கு தான் படமாக்கி இருக்கிறேன். கடந்த 28 ஆண்டுகளாக என்னை ஒரு கதாநாயகனாக ஏற்றுக்கொண்டு, நீங்கள் என் மீது பொழியும் இந்த அன்பிற்கும், பாசத்திற்கும் நான் பெரிதும் நெகிழ்ந்து போயிருக்கிறேன்.
மதுரையில் நடைபெறும் சித்திரை விழாவிற்கு ஐந்து லட்சம் மக்கள் திரள்வார்கள். அதே போலவே இந்த ‘கருப்பு’ படத்தின் திருவிழாவையும் நான் மற்றொரு சித்திரை திருவிழாவாகவே பார்க்கிறேன்.

நடிகர் இந்திரன்ஸ் திறமையான கலைஞர். அவர் பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டே இருக்கிறார். அவர் நான்காம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். ஆனால் இப்போது தனது ஏழாம் வகுப்பு தேர்வுகளை எழுதி நிறைவு செய்து இருக்கிறார். அவரது இந்த அர்ப்பணிப்பிற்கு எல்லையே இல்லை.‌

இசையமைப்பாளர் சாய் மிகவும் திறமையான கலைஞர். அவருக்கு பிரம்மாண்டமான எதிர்காலம் காத்திருக்கிறது. நான் அவரை முதன் முதலாக சந்தித்தபோது அவர் ஒரு நாளைக்கு ஆயிரம் டியூன்ஸ்களை உருவாக்குவதாக சொன்னார். இப்படம் திரைக்கு வரும் போது இசையின் அடிப்படையில் அது ரசிகர்களுக்கு மிகப்பெரிய அனுபவமாக அமையும் என்பதில் ஐயமில்லை.

ட்ரீம் வாரியர் நிறுவனம் எனக்காக சிந்திக்கிறது. சொல்லப்போனால் என்னை விட அதிகமாகவே சிந்திக்கிறது. அவர்களுக்கு ஒரு மிகப்பெரிய தொலைநோக்குப் பார்வை உள்ளது. அதன் மூலமே அவர்களால் ‘கருப்பு’ வின் உலகத்தை படைக்க முடிந்தது. அன்பறிவு மற்றும் விக்ரம் மாஸ்டர்களின் அசாதாரணமான சண்டைக் காட்சி இயக்கத்திற்காக நான் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.‌

இந்தப் படம் இவ்வளவு தூரம் கடந்து வந்திருப்பதற்கு கருப்பசாமி தான் முக்கிய காரணம் என நான் கருதுகிறேன். ஒரு மனிதனுக்குள் தெய்வம் குடிகொள்ளும் போது ஏற்படும் தாக்கத்தை நான் இப்போது கண்கூடாக பார்க்கிறேன். எங்கு நம்பிக்கை இருக்கிறதோ…. அங்கு நிச்சயமாக அற்புதங்கள் நிகழும்.
இயக்குநர் ஆர் ஜே பாலாஜி பன்முகத் திறமை கொண்டவர். நான் என்னை ஒரு நடிகராக மட்டுமே பார்க்கிறேன். ஆனால் அவர் தன்னை ஒரு இயக்குநராகவும்… நடிகராகவும்… வர்ணனையாளராகவும்… இப்படி எல்லாமாக ஒரே நேரத்தில் பார்க்கிறார்.

இந்தப் படத்தில் நான் கதாநாயகன் அல்ல. கருப்பசாமி தான் கதாநாயகன். என்னை இந்த விதமாக நடிக்கவும்… இந்த விதமாக திரையில் தோன்றவும் வைக்கும் வாய்ப்பை அளித்த எனது இயக்குநர் ஆர் ஜே பாலாஜிக்கு நான் நன்றி கூறுகிறேன்.‌

படத்தைப் பார்த்தவர்கள் படத்தின் முதல் பாதி மிகுந்த உணர்வுபூர்வமாக இருப்பதாகவும், இரண்டாம் பாதி ஒவ்வொரு பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை உச்சகட்ட விறுவிறுப்புடன் அமைந்திருப்பதாகவும் சொல்லியிருக்கிறார்கள்.‌ மே பதினான்காம் தேதி எல்லாம் உங்கள் கைகளில் தான் உள்ளது. இந்தப் படம் உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது ” என்றார்.‌

இயக்குநர் ஆர் ஜே பாலாஜி பேசுகையில், ” இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் கருப்பசாமி கோவிலுக்கு சென்று இருந்தேன். அப்போதே இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் தான் நடைபெற வேண்டும் என்று தயாரிப்பாளர்களிடம் நான் கூறியிருந்தேன். இந்த படம் உருவான முழு பயணத்திலும் கருப்பசாமி என் கையைப் பிடித்துக் கொண்டு என்னுடன் நடந்தே வந்தார். அதுவே எனது மிகப்பெரிய பலம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

இசையமைப்பாளர் சாய் அபயங்கருடன் பணியாற்றுவதற்காக ஒப்பந்தம் செய்த போது.. அவருக்கு இது முதல் படமாக இருந்தது. ஆனால் இப்போது அவர் 73 படங்களுக்கு ஒப்பந்தம் ஆகிவிட்டார். நான் ஒரு முறை அவரது வீட்டுக்கு சென்று இருந்தேன். அங்கே ஒரு ஹெலிகாப்டர் நின்று கொண்டிருந்தது. அவர் மிகவும் அபாரமான திறமை கொண்ட இசையமைப்பாளர். அவரது பாடல் வெளியாகும் போது மக்கள் நிச்சயம் வியந்து போவார்கள். 15 நிமிடங்களில் அவரது பாடல் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது. இப்போது நாங்கள் அவரை எங்கள் படத்தின் மிக சிறந்த மாஸ்டர் ஸ்ட்ரோக் ஆகவே கருதுகிறோம்.

நடிகர் இந்திரன்ஸ் இந்த படத்தில் அருமையாக நடித்திருக்கிறார். அவருடைய நடிப்பை கண்டு நான் பிரமித்து போனேன்.

திரிஷா இன்று எங்களுடன் இணைய முடியவில்லை. ஆனாலும் அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள். திரிஷாவாக இருப்பது எளிதல்ல. 23 ஆண்டுகளாக உச்சத்தில் இருப்பது எளிதல்ல. சமீப காலங்களில் இது அவருடைய சிறந்த கதாபாத்திரங்களில் ஒன்றாக இருக்கும்.

ஒரு பெரிய பட்ஜெட்டில் ஆன படத்தையும் ஒரு பெரிய நட்சத்திரத்தையும் எப்படி கையாள்வது என்று எனக்கு தெரியவில்லை. நான் யோசித்துக் கொண்டிருந்தபோது ஒருவர் என் கையைப் பிடித்து வழி நடத்தினார். அவர்தான் ஒளிப்பதிவாளர் ஜி கே விஷ்ணு. ஒரு கதாநாயகனை திரையில் எப்படி மாஸ் ஹீரோவாக காட்டுவது என்பது அவருக்கு துல்லியமாக தெரிந்திருக்கிறது.

‘வலிமை’ படத்தின் அப்டேட்டிற்கு பிறகு ‘கருப்பு’ படத்தின் அப்டேட் தான் அதிகமாக கேட்கப்பட்டது. இரண்டு வருட பயணம் மிகவும் கடினமாக இருந்தது. நானும், எஸ் ஆர் பிரபுவும் சண்டையிட்டுக் கொண்டோம். விவாதித்தோம். எல்லாம் செய்தோம். ஆனால் இப்போது நாங்கள் ஒரு நல்ல நிலையில் இருக்கிறோம். கருப்பு படத்தின் மூலம் எனக்கு ஒரு குடும்பம் கிடைத்திருக்கிறது.‌

இந்தப் படத்தை நாங்கள் ஐந்து பேர் இணைந்து எழுதினோம். இந்தக் குழு இரண்டு வருடங்களாக என்னுடன் இருக்கிறது. இது ஒரே ஒருவரால் தான் சாத்தியமானது.. அவர் சூர்யா சார். அவரிடம் 45 நிமிட கதை சொல்லலை மட்டுமே கொடுத்தேன். அதை கேட்டு அவர் உடனடியாக நடிக்க ஒப்புக் கொண்டார். என் மனைவி கூட ஆச்சரியப்பட்டார். சூர்யா சார் !உன் இயக்கத்தில் படத்தில் நடிக்கிறார்களா? என்று கேட்டார். அவர் என் மீது நம்பிக்கையும் உறுதியும் வைத்திருந்தார். நான் அவருக்கு சிறந்ததை கொடுக்க விரும்பினேன். சூர்யா சார் திரையில் தன்னைத்தானே ரசித்து, ஜாலியாக இருந்து, ஒரு மாஸ் ஹீரோவாக தெரிய வேண்டும் என்று நான் விரும்பினேன். வழக்கமாக பெரிய ஹீரோ படங்களில் ஒவ்வொரு காட்சியிலும் ஹீரோ இருப்பார். ஆனால் ‘கருப்பு’ படத்தில் அவர் இல்லாத பல காட்சிகள் உள்ளன. எங்கள் கதைகளும் படத்தில் இருக்கின்றன. அவர் அதற்கு ஒப்புக் கொண்டார். அதை சிறப்பாக செய்து காட்டினார். திரையில் அவருடைய கண்களே பல விசயங்களை சொல்கின்றன. முதல் பாதியில் கமர்சியலும், இரண்டாம் பாதியில் ஒவ்வொரு பத்து நிமிடத்திற்கும் ஒரு உச்சகட்டத்துடன் கூடிய பரபரப்பும் இருக்கும். ஒரு மன்னன் தன் சிம்மாசனத்தை திரும்ப பெற வருகிறான்.

படத்தின் போஸ்டர்களில் ரிலீஸ் தேதியை ஏன் குறிப்பிடவில்லை என ரசிகர்கள் கேட்கிறார்கள். அப்படி செய்திருந்தால் தணிக்கை வாரியம் எங்கள் கதவை தட்டி இருக்கும். நாங்கள் அதை விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவோம். உங்கள் பட்டாசுகளை தயாராக வைத்துக் கொள்ளுங்கள் மே 14 ஒரு கொண்டாட்டம் வரவுள்ளது. ” என்றார்.

இசையமைப்பாளர் சாய் அபயங்கர் பேசுகையில், ‘: கருப்பு படத்தின் பாடல்களுக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு மலைக்க வைப்பதாக உள்ளது. அது என்னை மிகவும் நெகிழ்ச்சி அடைய செய்திருக்கிறது. சூர்யா சார் பல கல்ட்( Cult) திரைப்படங்களை வழங்கி இருக்கிறார். அப்படிப்பட்ட சூழலில் இந்தப் படத்தில் பணியாற்றும் வாய்ப்பு எனக்கு வந்த போது, நான் உடனடியாக அதை ஏற்றுக் கொண்டேன். பாலாஜி அண்ணா உடன் நடந்த முதல் சந்திப்பு மிக சிறப்பாகவும் மிக விசேஷமானதாகவும் அமைந்தது. ஆரம்பத்தில் எனக்கு சற்று தயக்கம் இருந்தது. இயக்குநர் ஆர் ஜே பி அண்ணாவை சந்திப்பதற்காக நான் காரில் சென்று கொண்டிருந்தேன். ஆனால் செல்லும் வழியிலேயே ட்விட்டரில் ‘சூர்யா 45’ படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார் என்ற செய்தியை பார்த்தேன். என் உடல் சிலிர்த்து போனது. அந்த தருணத்தை என்னால் ஒருபோதும் மறக்கவே முடியாது.

இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் உருவாகும் ஒரு திரைப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் ஒருவரை தேர்வு செய்வதற்கு முன் வேறு எந்த ஒரு சூப்பர் ஹீரோவாக இருந்தாலும் நிச்சயம் இரண்டு முறை யோசித்து இருப்பார்கள். ஆனால் சூர்யா சார் எந்த தயக்கமும் இன்றி என்னை ஏற்றுக்கொண்டு, இந்தப் படத்தில் பணியாற்ற வாய்ப்பளித்தார். நான் இந்தப் படத்தை முழுமையாக பார்த்து விட்டேன். இந்தப் படத்தின் பின்னணி இசை நிச்சயம் பெரிய அளவில் பேசப்படும். மேலும் இந்தப் படம் ஒரு மிகப்பெரிய பிளாக் பஸ்டர் வெற்றியை பெறும் என்பதில் எனக்கு சிறிதும் சந்தேகமில்லை” என்றார்.
மதுரையில் ஏன் கருப்பு இசை வெளியீட்டு விழா? Why was the Karuppu audio launch  held in Madurai? - தினமணி
 நடிகர் நட்டி நட்ராஜ் பேசுகையில், ” கருப்பு திரைப்படம் மிக சிறப்பான திரை கதையை கொண்டிருக்கிறது. இந்த படத்திற்காக நான் பலமுறை ஒத்திகை மேற்கொண்டேன். நாங்கள் நடித்துக் காட்டிய ஒவ்வொரு காட்சியையும் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி நினைவில் வைத்துக் கொண்டு அவற்றை மிக சிறப்பாக முன்னெடுத்துச் சென்றார். சூர்யா சாரின் அழகு இன்றும் அப்படியே சற்று மாறாமல் இருப்பதை கண்டு நான் மிகவும் ரசிக்கிறேன். அதனால் தான் சூர்யா சாருக்கு இன்று வரை ரசிகர்கள் இருக்கிறார்கள். அவருடன் ரசிகர்கள் என்றென்றும் இருப்பார்கள்” என்றார்.

பாடலாசிரியர் விவேக் பேசுகையில், ” ‘சூரரைப்போற்று’ படத்தில் இடம்பெற்ற ‘வெய்யோன் சில்லி’ பாடல் மதுரை வட்டார வழக்கில் எழுதப்பட்டது. அதனைத் தொடர்ந்து ‘ரெட்ரோ’ மற்றும் ‘கருப்பு’ என அடுத்தடுத்து இரண்டு படங்களில் சூர்யா சாருடன் மீண்டும் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. சாய் அபயங்கருடன் நான் தொடர்ந்து பலமுறை பணியாற்றி வருகிறேன். சுயாதீன பாடல்கள் முதல் திரைப்பட பாடல்கள் வரை அவருடன் இணைந்து உருவாக்கி உள்ளேன். நாங்கள் இணையும் போதெல்லாம் எங்களுக்கு இடையே ஒரு சிறப்பான உற்சாகம் நிலவும். இந்த படத்தின் அனைத்து பாடல்களுமே மிக சிறப்பாக அமைந்துள்ளன” என்றார்.

தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு பேசுகையில், ” கருப்பு திரைப்படம் குறித்து நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன். ஆர் ஜே பாலாஜி இந்தப் படத்தை மிகுந்த கலகலப்பு, உற்சாகம் மற்றும் முழுமையான பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாக்கியுள்ளார். பாலாஜி ஒரு தயாரிப்பாளரின் பணிச்சுமையை வெகுவாக குறைத்து, எங்கள் அனைவருக்கும் மிகவும் சவுகரியமானதொரு சூழலை அமைத்துத் தந்திருக்கிறார். இந்தப்படம் பிரம்மாண்டத்துடன் உருவாகி உள்ளது. இது ஒரு உண்மையான திருவிழா போன்ற உணர்வை ஏற்படுத்தும். ஒளிப்பதிவாளர் ஜி கே விஷ்ணுவுக்கும் தனது முதல் பெரிய திரைப்படத்தை எங்களுடன் இணைந்து உருவாக்கும் சாய் அபயங்கருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

நடிகை ஷிவதா பேசுகையில், ” மதுரையில் ‘கருப்பு ‘படத்தின் படப்பிடிப்பிற்காக வந்த போதே எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இப்போது இந்த மேடை இன்னும் பிரம்மாண்டமான மாஸாக இருக்கிறது. இயக்குநர் ஆர் ஜே பாலாஜி சார் மூலமாக நான் இன்று இந்த மேடையில் நிற்கிறேன். அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள். சூர்யா சாருடன் நான் இணைந்து நடித்த அந்த நாளை என்னால் மறக்கவே முடியாது. அது எனது பிறந்த நாளாகவும் அமைந்தது. அந்த அனுபவம் மிகவும் உணர்வுபூர்வமானதாகவும், அழகானதாகவும் இருந்தது. இயக்குநர் ஆர் ஜே பாலாஜி சார் மிகவும் கலகலப்பான ஒரு மனிதர். படப்பிடிப்பின் போது பதற்றமான சூழல்கள் நிலவினாலும் கூட… அவர் மிகவும் இனிமையாக நடந்து கொள்வார்‌ படப்பிடிப்பு தளத்தில் தனது வேலையை அவர் மிகவும் ரசித்து செய்வார்” என்றார்.

நடிகை அனகா மாயா ரவி பேசுகையில், ” மதுரையில் நடைபெறும் இவ்வளவு பிரமாண்டமான ஒரு நிகழ்வில் நான் இதற்கு முன் கலந்து கொண்டதே இல்லை. இவை அனைத்திற்கும் காரணம் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி சார் தான். இவ்வளவு பெரிய திரைப்படத்தில் எனக்கு வாய்ப்பு அளித்ததற்கு நன்றி சார், சூர்யா சார் மற்றும் ஜோதிகா மேடமின் தீவிர ரசிகையாகவே நான் வளர்ந்தேன். அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கும் என்று நான் நினைத்துக் கூட பார்த்ததில்லை. ஆனால் இப்போது அவருடன் இணைந்து ஒரு திரைப்படத்திலேயே நடித்து விட்டேன். எனக்கு தமிழ் மொழி அவ்வளவு ஆக சரளமாக வராது. ஆனால் அடுத்த முறை வரும்போது நன்றாக தயாராகிக்கொண்டு வருவேன்” என்றார்.

கலை இயக்குநர் அருண் வெஞ்சரமூடு பேசுகையில், ” ஜிகே விஷ்ணுவின் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள ‘கருப்பு’ படத்தின் காட்சிகள் பெரிய அளவில் பேசப்படும். இவ்வளவு பிரம்மாண்டமான ஒரு படைப்பின் அங்கமாக இருந்தது.. எனக்கு ஒரு சிறந்த நினைவாக அமைந்துள்ளது. இந்த படத்திற்காக எனது முழு குழுவும் இரவும் பகலும் பாராமல் கடுமையாக உழைத்திருக்கிறோம். நான் சூரியா சாரின் தீவிர ரசிகன். அவரது படத்தில் பணியாற்றும் வாய்ப்பிற்காக நான் ஆவலுடன் காத்திருந்தேன். இப்போது இங்கு நின்று பேசும்போது நான் மிகவும் உணர்ச்சிவசப்படுகிறேன்.

நான் 10 அடி, 20 அடி உயரமுள்ள அரிவாள்களை பார்த்திருக்கிறேன். ஆனால் இந்தப் படத்தில் வரும் ஒரு பாடலுக்காக நாங்கள் 85 அடி உயரமுள்ள ஒரு அருவாளை உருவாக்கினோம். எவ்வளவு பெரிய பிரம்மாண்டத்தில் மீண்டும் ஒரு படம் செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைக்குமா..? என்று தெரியவில்லை. திரையரங்குகளில் பார்வையாளர்களின் வரவேற்பினை காண நான் ஆவலுடன் காத்திருக்கிறேன் ” என்றார்.

விநியோகஸ்தர் சக்திவேலன் பேசுகையில், ” எல் கே ஜி படத்தில் ஆர் ஜே பாலாஜியுடன் தொடங்கிய எனது பயணம்.. இப்போது ‘கருப்பு ‘திரைப்படம் வரை தொடர்கிறது. அவர் ஒரு அசுரத்தனமான உழைப்பாளி- அதாவது மிக கடுமையாக உழைக்கக்கூடிய ஒரு நபர் -அந்த உழைப்பை ‘கருப்பு’ படத்திற்காக அவர் பன்மடங்கு அதிகமாக கொடுத்திருக்கிறார். படத்தின் திரைக்கதைக்காக அவர் பலதரப்பட்ட மக்களுடன் கலந்துரையாடி மிக ஆழமான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.

சூர்யா சாருக்கு ‘கருப்பு: திரைப்படம் இதுவரை ரசிகர்கள் கண்டிராத ஒரு புதிய அவதாரமாக அமையும். நான் சமீபத்தில் தான் இந்த படத்தை பார்க்கும் வாய்ப்பை பெற்றேன். இயக்குநரின் முழு அனுமதியுடன் நான் இதை சொல்கிறேன். இது ரசிகர்களுக்கு ஒரு செம விருந்தாக அமையப்போகிறது.

இந்த ஆண்டில் சூர்யா சாருக்கு மூன்று படங்கள் வெளியாக உள்ளன. அந்த மூன்று படங்களுமே மிகப்பெரிய வெற்றியைப் பெறும். இந்த ஆண்டை நாம் ‘சூர்யாவின் ஆண்டு ‘என்று கொண்டாடுவோம் ”என்றார்.

திங்க் மியூசிக் சந்தோஷ் பேசுகையில், ” சூர்யா சாருக்கு ‘கருப்பு’ திரைப்படம் இதுவரை ரசிகர்கள் கண்டிராத ஒரு புதிய அவதாரமாக அமையும் .நான் சமீபத்தில் தான் இந்த படத்தை பார்க்கும் வாய்ப்பைப் பெற்றேன். இயக்குநரின் முழு அனுமதியுடன் நானும் இதை சொல்கிறேன். இது ரசிகர்களுக்கு ஒரு ‘செம விருந்தாக ‘ அமையப்போகிறது” என்றார்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.