1990 களில் நடக்கும் கதை.அப்போதும் இப்போதுபோலவே வளைகுடாவில் போர்.இப்போது ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையே போர் என்றால் அப்போது ஈராக்,வளைகுடா நாடுகளில் தாக்குதல் நடத்தியது.
வால்மீகி என்பவர் திருடனாக இருந்து திருந்தி இராமாயணம் எழுதினார் என்றொரு கதை உணடு.இந்தப்படத்தின் நாயகன் கரசாமி திருடனாக இருந்து திருந்தி அவருடைய ஊருக்கே சாமியாவதுதான் கதை.
பதினாறு வயதிலேயே வீட்டைவிட்டு ஓடிப்போய் திருடனாக இருக்கும் நாயகன் தனுஷ், மமிதாபைஜுவை காதலித்து கல்யாணம் செய்து மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்பதற்காக அந்தத் தொழிலை விட்டுவிட நினைக்கிறார்.கடைசித் திருட்டில் காவல்துறையில் சிக்கி தப்பிக்கிறார்.மனைவியுடன் ஆந்திரா போய் ஓர் உணவகத்தில் வேலை செய்கிறார்.அங்கு மனைவி படும் கஷ்டத்தைப் பார்த்து சொந்தமாக உணவகம் வைக்க நினைக்கிறார்.அதற்காகப் பணம் திரட்ட சொந்த ஊருக்குப் போகிறார்.போன இடத்தில் எதிர்பாரா பல சிக்கல்கள்.அவை என்னென்ன? அவற்றின் முடிவென்ன? என்பதுதான் படம்.
ஒரு சாதாரண கிராமத்து இளைஞன் கதாபாத்திரம் தனுஷுக்கு அச்சுஅசலாகப் பொருந்தும் என்பதற்கு ஏற்கெனவே நிறையப் படங்கள் இருக்கின்றன.இது கூடுதலாகச் சேர்ந்திருக்கிறது.அன்பு, பாசம்,காதல்,கோபம் ஆகிய எல்லாவற்றையும் அளவுக்கு மீறாமல் வெளிப்படுத்தி வரவேற்புப் பெறுகிறார்.என் ஊர் இதுதான், என் வாழ்க்கை இதுதான் என்று ஆணித்தரமாகச் சொல்கிறார்.
நாயகி மமிதாபைஜு இருக்கிற அழகைக் குறைக்கும் ஒப்பனை செய்து மேலும் அழகாகியிருக்கிறார்.காதலுடன் அவர் பார்க்கும் பார்வைக்கு தனுஷ் விழுந்து கிடப்பதில் தவறில்லை.என்னைப் பத்தி யோசிக்கவே இல்லியா? என்று கேட்டு அழுமிடத்தில் எல்லோரையும் கலங்க வைக்கிறார்.
தனுஷின் தந்தையாக மாறுபட்ட ஒப்பனை மட்டுமின்றி மிகமாறுபட்ட நடிப்பையும் கொடுத்து வியக்க வைத்திருக்கிறார் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார்.தனுஷின் தாயாக வரும் ஸ்ரீஜாரவி, உறுதிமிக்க கிராமத்து அம்மாவாகவே மாறியிருக்கிறார்.
தனுஷின் மாமாவாக நடித்திருக்கும் கருணாஸ் பாத்திரமும் அதில் அவர் நடிப்பும் அருமை.அநீதிக்கெதிராகப் பொங்கும் வெள்ளந்தி கிராமத்து மனிதர்.ஒரு நெருக்கடி எனும்போது வேறு ஆளாக மாறி நிற்பது நன்று.
தனுஷின் நண்பராக வரும் பிருத்வி பாண்டியராஜன்,வில்லனாக நடித்திருக்கும் ஜெயராம், காவலதிகாரி சுராஜ் வெஞ்சரமுடு ஆகியோரும் பொருத்தமாக நடித்து நற்பெயர் பெறுகிறார்கள்.
தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவில் இராமநாதபுரம் மாவட்டத்தின் வறட்சி,அங்கு வசிக்கும் மனிதர்களின் பசுமை ஆகியன அப்படியே பதிவாகி இரசிக்க வைக்கின்றன.
ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் நன்று.பின்னணி இசை சிறப்பு.
எழுதி இயக்கியிருக்கும் விக்னேஷ்ராஜா, வங்கிக் கடன்களால் பாதிக்கப்படும் கிராமத்து மனிதர்களின் துயரங்களை வெளிக்கொண்டுவர வேண்டுமென உழைத்திருக்கிறார்.பேசாப் பொருளைப் பேசத் துணிந்ததற்காகப் பாராட்டலாம்.
– கதிரோன்.
