தமிழீழ விடுதலைப் போராட்டம் குறித்த படங்கள் வரிசையில் வந்திருக்கிறது நீளிரா.நீண்ட இரவு என்று பொருள்.1987 முதல் 1990 வரை இந்திய அமைதிப்படை தமிழீழத்தில் இருந்தது.அந்தக் காலகட்டத்தில் நடக்கின்ற கதையாக இப்படத்தின் கதை இருக்கிறது.

ஒரு திருமண வீடு.அதன் மகிழ்ச்சியினூடே, போர்ச் சூழல் காரணமாக எவ்விதச் சிக்கலும் இல்லாமல் திருமணம் நடக்கவேண்டும் என்கிற பதட்டம் அனைவரிடமும் இருக்கிறது.அப்போது விடுதலைப் போராளிகளைத் தேடி இந்தியப்படை அங்கு வருகிறது.போராளிகளும் அவர்களைத் தாக்கத் தயாராகிறார்கள்.போராளிகளிடமிருந்து தப்ப இந்தியப்படை திருமண வீட்டுக்குள் நுழைந்து விடுகிறது.

அதன்பின், திருமண வீட்டின் நிலை என்ன? என்பதற்கான விடை மூலம் தமிழீழமக்கள் அனுபவித்த சொல்லொணாக் கொடுமைகளையும் இந்தியப்படையின் அட்டூழியங்களையும் விறுவிறுப்பான திரைக்கதை மூலம் சொல்லியிருக்கிறது இந்தப்படம்.

இந்தியப்படையின் தலைவராக நவீன் சந்திரா நடித்திருக்கிறார்.அதற்குரிய மிடுக்குடன் இருக்கிறார்.யார் எக்கேடு கெட்டாலென்ன? நாம் தப்பவேண்டும் என்பதற்காக அவர் செய்யும் நடவடிக்கைகள் கோபமூட்டுபவை அந்த வேடத்தில் பொருத்தமாக நடித்து மேலும் கோபமூட்டுகிறார்.

போராளிப் படைத் தலைவராக நடித்திருக்கும் சனத்,நம் மக்களுக்குப் பாதிப்பின்றி எதிரிப்படையைத் தாக்கவேண்டும் என்கிற பொறுப்புடன் இருக்கும் அசல் போராளியாகவே வாழ்ந்திருக்கிறார்.

ஈழப்பெண்களாக நடித்திருக்கும் ரூபா கொடுவாயூர், கபிலா வேணு, விது, சித்து குமரேசன், நவயுக, சுவாதி கிருஷ்ணன் உள்ளிட்டோர் அந்தமக்களின் மிகப்பெருந்துயர்களை தம் கண்கள் மூலமாகவும் உடல்மொழிகள் மூலமாகவும் வெளிப்படுத்திப் பதற வைத்திருக்கிறார்கள்.இந்தியப்படையின் அப்பட்டமான தப்புகள் இந்தப்பெண்கள் பாத்திரம் மூலம் வெளிப்பட்டு வருந்த வைக்கிறது.

நமசிவாயம் தம்பிப்பிள்ளை, கயல் வின்செண்ட், ரோஹித் கொகட் ஆகிய நடிகர்களின் கதாபாத்திரங்களும் அவற்றில் அவர்களின் நடிப்புகளும் அதிர்வை ஏற்படுத்துகின்றன.

மிக மிக முக்கியமான ஒரு வரலாற்றைக் காட்சிப்படுத்துகிறோம் அதை அசலாகப் பதிவு செய்யவேண்டும் என்கிற தவிப்போடும் கதைக்களத்துக்கேற்ற ஒளியமைப்புகளை நேர்த்தியாக வடிவமைத்தும் படத்துக்கு நியாயம் செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் செல்வரத்னம் பார்த்திபன்.

திருமணவீட்டின் மகிழ்ச்சி, தமிழீழமக்கள் வாழ்வியல் ஆகியனவற்றை பாடலிலும்,பின்னணி இசையில் போராட்டக் காலகட்ட வலிகளையும் வெளிப்படுத்தியிருக்கிறார் இசையமைப்பாளர் கே.

படத்தொகுப்பாளர் ராதா ஸ்ரீதர்,இப்படம் பேசும் செய்தி சரியாகப் போய்ச்சேரவேண்டும் என்கிற சிரத்தையோடு படத்தைத் தொகுத்திருக்கிறார்.

எழுதி இயக்கியிருக்கிறார் சோமிதரன்.தமிழீழ விடுதலைப் போராட்டக் காலகட்ட துயர்களையும் வலிகளையும் இரத்தம்,மரணம் ஆகியன இல்லாமலேயே பதிவு செய்திருக்கிறார்.அதோடு,இதுவரை யாரும் சொல்லாத இந்தியப்படையின் அட்டூழியங்களை அம்பலப்படுத்தியிருக்கிறார்.

– இளையவன்

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.