வெளியில் திருடினால் சிறையில் தள்ளுவார்கள்.சிறையிலேயே திருடினால் என்ன செய்வார்கள்? என்கிற சுவையான கேள்வியை மையமாகக் கொண்டு வெளியாகியிருக்கும் இணையத் தொடர் காக்கி சர்க்கஸ்.
சிறைக்குள் ஒரு கண்ணகி கோயில் இருக்கிறது.அதன் உண்டியல் பணம் திருட்டுப் போகிறது.அதனால் பதறும் சிறைக்காவலர் அந்த விசயம் வெளியே தெரியாமல் இருக்க கடன் வாங்கி அந்தப்பணத்தை வைக்க முயல்கிறார்.அந்தப்பணமும் திருட்டுப் போகிறது.அதன்பின் என்னவெல்லாம் நடக்கிறது? என்பதை நகைச்சுவை மற்றும் திடீர் திருப்பங்கள் மூலம் சொல்லியிருக்கிறது இந்த இணையத் தொடர்.
தொடரின் நாயகர்களாக சுபாஷ் செல்வம் மற்றும் முனீஸ்காந்த் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
காவலராக நடித்திருக்கும் சுபாஷ் செல்வம்,கதாநாயகனுக்குரிய அம்சங்களுடன் இருக்கிறார்.சண்டை போடுவதை விட நகைச்சுவைக் காட்சிகளில் நடிப்பது கடினம் என்பார்கள்.இவர் இரண்டையும் நன்றாகச் செய்து வரவேற்புப் பெறுகிறார்.நகைச்சுவைக் காட்சிகளில் மென்மையாகத் தோன்றுபவர் சண்டைக்காட்சிகளில் அதிரடி வேகம் காட்டி மிரட்டியிருக்கிறார்.
சிறைவின் துணைக்கண்காணிப்பாளர் வேடமேற்றிருக்கும் முனீஸ்காந்த்,அதற்கேற்ற பொறுப்புடன் நடித்திருக்கிறார்.இந்தப்பாத்திர வடிவமைப்பு சமுதாயப் பொறுப்புடன் இருக்கிறது.அதற்கு நூறுவிழுக்காடு நியாயம் செய்து வரவேற்புப் பெறுகிறார்.
இவர்கள் இருவருக்கும் இணையாக திருடராக நடித்திருக்கும் ராஜேஷ் மாதவன் இருக்கிறார்.கவுரவ கொலை என்பதுபோல் அவர் செய்யும் கவுரவ திருட்டும் அதுதொடர்பான காட்சிகள் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்திருக்கின்றன.
தொடரில் நாயகிகளும் உண்டு. வின்சு ஷாம் மற்றும் கெளதமி ஆகியோர் நாயகிகளாக நடித்திருக்கிறார்கள்.அவர்கள் வரும் காட்சிகள் பசுமை.
சாவித்ரி, அம்ருதா, அப்துல் லீ, மருதுபாண்டியன், ராகேஷ், உசர், விக்னேஷ்வர், அருண்குமார் என நிறைய நடிகர்கள் தொடரில் இருக்கிறார்கள்.அனைவரும் தேவையான அளவு பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.அவர்களும் சரியாக நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் நீரஜ் ரவியின் உழைப்பில் நகைச்சுவைக் காட்சிகளுக்கும் சண்டைக்காட்சிகளுக்கு நல்ல மாறுபாடு தெரிகிறது.
சேவியர் மற்றும் விபின் பாஸ்கர் ஆகியோரின் இசை,தொடரின் தரத்தை மேம்படுத்தியிருக்கிறது.
படத்தொகுப்பாளர் அர்ஜுன் பாபு,ஒவ்வொரு அத்தியாயமும் தனியாகத் தெரியவேண்டும் மொத்தமாகப் பார்த்தாலும் விறுவிறுப்பாக இருக்கவேண்டும் என்கிற முனைப்பு காட்டியிருக்கிறார்.
ஒரு சிறைச்சாலை,அங்குள்ள பல்வேறு வகையான கதாபாத்திரங்கள் ஆகியவற்றோடு கோயில் மற்றும் அதன் உண்டியலையும் ஒரு கதாபாத்திரமாகவே மாற்றி திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் அமீன் பாரிப்.
சிறைச்சாலை என்பது தண்டிக்கும் இடமன்று பண்படுத்தும் இடம் என்பதை வலியுறுத்தும் விதமாக முனீஸ்காந்த் கதாபாத்திரத்தை வடிவமைத்து சிறைக்குள் நூலகம் அமைத்திருக்கிறார்.
அனைத்து மக்களும் சுவையாகப் பார்க்கிற மாதிரி சிறைக்குள் திருட்டு, அதன்காரணம்,அதன்முடிவு எனக்கொண்டு போயிருப்பது பலம்.
– இளையவன்
குறிப்பு – ஏழு பாகங்களைக் கொண்ட இந்தத்தொடர் ஜீ 5 இணையதளத்தில் ஏப்ரல் 10 முதல் காணக்கிடைக்கிறது.
