அஜித்தின் சிட்டிசன் படத்தில் இந்திய வரைபடத்திலேயே இல்லாத கிராமம் என்றொரு கதையை வைத்து இன்றளவும் பேசவைத்திருக்கிறார்கள்.அதேபோல எந்த அரசு ஆவணங்களிலும் இல்லாத கிராமத்துக்கு அங்கீகாரம் பெறப் போராடுகிறார் கதாநாயகன்.
அதில் பல தடைகள்.அவற்றை எதிர்கொண்டு வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதைச் சொல்கிற படம்தான் பெத்தி.

கிராமத்துக்கு அங்கீகாரம் பெற நாயகன் ராம்சரண் தேர்ந்தெடுக்கும் வழி விளையாட்டுப்போட்டி.விளையாட்டு வீரர்களுக்குரிய துடிப்பு சுறுசுறுப்பு வேகம் ஆகியன ராம்சரணுக்குக் கைவந்த கலை.அதனால் இந்தப்படத்தின் கதாபாத்திரத்தை அநாயசமாக கையாண்டிருக்கிறார்.அவற்றில் ஈடுபடும்போது ஏற்படும் பெரும் தடைகள் மற்றும் சிக்கல்களை அவர் எதிர்கொள்கிற விதம் ஈர்ப்பு.

நாயகியாக நம்ம ஊர் ஶ்ரீதேவியின் மகள் ஜான்விகபூர் நடித்திருக்கிறார்.பாடல்களில் குத்தாட்டம், காட்சிகளில் கவர்ச்சி என முழுமையான மசாலா படங்களில் நாயகிகளுக்கு எவ்வளவு இடமோ? அவ்வளவு இடம்தான் அவருக்குக் கிடைத்திருக்கிறது.அதில் தன் இருப்பை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்.

மல்யுத்த ஆசிரியராக நடித்திருக்கும் சிவராஜ்குமார்,அதற்குத்தக்க கம்பீரத்துடன் வலம் வருகிறார்.அவருடைய காட்சிகளும் வசனங்களும் படத்தின் பொறுப்புணர்வை வெளிப்படுத்துகின்றன.

ஜெகபதி பாபு தன் அனுபவ நடிப்பால் பாத்திரத்துக்குப் பலம் சேர்த்திருக்கிறார்.திவ்யேந்து சர்மா,பொமன் இராணி ஆகியோருடைய வேடங்களும் அவற்றில் அவர்களுடைய நடிப்பும் நன்று.

ஆர்.ரத்னவேலு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.கதையில் இடம்பெற்றுள்ள கிரிக்கெட்,குஸ்தி,ஓட்டப்பந்தயம் ஆகிய விளையாட்டுப் போட்டிகளை அதனதன் நேர்த்தியோடு படமாக்கியிருக்கிறார்.நாயகன் மற்றும் நாயகி இடம்பெறும் காட்சிகளுக்குக் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கிறார்.

ஏ.ஆர்.ரகுமான் இசையில் படத்தின் பாடல்கள் கேட்கும் இரகமாக அமைந்திருக்கின்றன.வகைக்கொரு பாடல் கொடுத்து படக்குழுவையும் இரசிகர்களையும் மகிழ்விக்க முயன்றிருக்கிறார்.வழக்கம்போல்,தன் பின்னணி இசையால் காட்சிகளுக்கு மெருகேற்றியிருக்கிறார்.

நவீன்நூலியின் படத்தொகுப்பினால் சில காட்சிகள் வேகமாக இருக்கின்றன.பல காட்சிகள் நீளமாகத் தெரிகின்றன.

ஒருபக்கம் உலகளவில் முன்னணி நாடாக இந்தியா மாறிக்கொண்டிருக்கிறது என்கிற விளம்பரங்கள் ஒளிர்ந்து கொண்டிருக்கும் காலகட்டத்திலேயே அடிப்படை வசதிகள் கூட இல்லாத கிராமங்களும் இருக்கின்றன என்பதை முகத்திலறைந்தாற்போல் சொல்லியிருக்கிறார் இப்படத்தின் இயக்குநர் புச்சிபாபுசனா.

அப்படிச் சொன்னதோடு நில்லாமல் அதற்கு நேர்மறையாக ஒரு தீர்வையும் சொல்லியிருக்கிறார்.

கதாநாயகனுக்காகவே அமைக்கப்பட்டிருக்கும் காட்சிகள் படத்துக்குப் பலவீனமாக இருந்தாலும் அவருடைய இரசிகர்களுக்குப் பலமாக அமைந்திருக்கின்றன.

– இளையவன்

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.