1980 மற்றும் 1990-களின் பின்னணியில், அரசியல் சூழ்ச்சிகளும் அதிகாரப் போட்டிகளும் நிறைந்த ஒரு காலகட்டத்தை மையமாக வைத்து, தமிழ் மற்றும் மலையாளத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள அரசியல் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம் தான் ‘அனந்தன்காடு’.

கதையின் களம் 1980-களின் இறுதியிலும் 1990-களின் துவக்கத்திலும் இருக்கும் ஒரு மாநிலத் தலைநகரத்தின் விளிம்புநிலை ஏழை மக்கள் வாழும் குடிசைப் பகுதிகளில் நிகழ்கிறது. அங்கு வாழும் நான்கு பேர் கொண்ட கூலிப்படை இளைஞர்கள், வன்முறைப் பாதையைத் தங்களின் வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர். அதே சமயம், அவர்களுக்குள் இசை மீது ஒரு தீவிரமான பற்றும் இருக்கிறது. இந்த முரண்பாடான வன்முறை வாழ்க்கை அவர்களுக்குப் பணத்தையும், தங்களின் அரசியல் எஜமானர்களின் எல்லைகளுக்குள் கேள்வி கேட்க முடியாத அதிகாரத்தையும் பெற்றுத் தருகிறது. இவர்களின் தலைவனாக வலம் வருகிறான் வெற்றி (ஆர்யா). இவர்களின் அரசியல் எஜமானராக இருக்கும் தங்கராஜ் (முரளி கோபி) மற்றும் மாசூஃபியா தலைவன் சம்பத் ராவ் (சுனில்) ஆகியோருக்கு இடையே நடக்கும் இரட்டைத் தன்மை கொண்ட அதிகாரப் போட்டிகளும், சமூக-அரசியல் சூழ்ச்சிகளும் இவர்களின் வாழ்க்கையை எப்படிப் புரட்டிப் போடுகிறது என்பதே மையக்கதை. ஒரு கட்டத்தில் தங்களின் இருப்புக்கே ஆபத்து வரும்போது, இந்த வன்முறைச் சூழலில் இருந்து தப்பிக்கவும், தங்களைச் சுற்றியுள்ள மக்களைக் காப்பாற்றவும் இவர்கள் நடத்தும் வாழ்வா சாவா போராட்டமே ‘அனந்தன்காடு’ படத்தின் விறுவிறுப்பான மீதிக்கதை.

நாயகன் ஆர்யா தனது முரட்டுத்தனமான உடல்மொழியையும், ஆக்ரோஷமான பார்வைகளையும் திரையில் அட்டகாசமாக வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக இடைவேளைக் காட்சியிலும், சண்டைக் காட்சிகளிலும் அவரது அர்ப்பணிப்பு மிகவும் அற்புதமாக அமைந்துள்ளது.

நிகிதா விமல் மற்றும் ரெஜினா கசாண்ட்ரா ஆகிய இருவரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து, உணர்ச்சிகளை மிகவும் கச்சிதமாக வெளிப்படுத்தியுள்ளனர்.

வில்லனாக வரும் சுனில், தனது அச்சுறுத்தும் நடிப்பால் மிரட்டியுள்ளார்.

அரசியல்வாதியாக நடித்திருக்கும் முரளி கோபி, தனது தந்திரமான வில்லத்தனத்தை முகபாவனைகளிலேயே நேர்த்தியாகக் காட்டியுள்ளார்.

மூத்த நடிகர் இந்திரன்ஸ் மற்றும் தேவ் மோகன் ஆகியோர் தங்களின் எமோஷனல் காட்சிகளில் எதார்த்தமான நடிப்பைக் கொடுத்துள்ளனர்.

சித்திக், விஜய்ராகவன், போஸ் வெங்கட் மற்றும் சரத் அப்பானி ஆகியோர் தங்களின் சிறு சிறு காட்சிகளிலும் சிறப்பான பங்களிப்பைத் தந்து, படத்தின் திரைக்கதை நகர்வுக்கு பெரிதும் உதவியுள்ளனர்.

இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத்தின் பின்னணி இசை படத்தின் ஆகச்சிறந்த பலம். 80-களின் ரெட்ரோ இசையையும், மாஸான பிஜிஎம்மையும் கலந்து காட்சிகளை மிக அற்புதமாக மெருகேற்றி உள்ளார்.

ஒளிப்பதிவாளர் எஸ். யுவா, 80-களின் காலகட்டத்தை வண்ண அமைப்புகளின் மூலம் மிகத் துல்லியமாக நமக்குக் காட்டியுள்ளார். சண்டைக் காட்சிகளில் அவர் பயன்படுத்திய கேமரா கோணங்கள் மற்றும் ஷாட்டுகள் யாவும் பிரம்மாண்டம்.

படத்தொகுப்பாளர் ரோஹித் வி. எஸ். வாரியத், முதற்பாதியை தொய்வு இல்லாமல் விறுவிறுப்பாகக் கொண்டு சென்றுள்ளார். ஆனால், இரண்டாம் பாதியில் வரும் சில நீளமான காட்சிகளை இன்னும் சற்றே கத்திரித்து இருக்கலாம்.

ரஞ்சித் கோத்தேரியின் கலை இயக்கம் 80-களின் குடிசைப் பகுதிகளையும் நகரத்தையும் நேர்த்தியாகக் கண்முன் நிறுத்தியுள்ளது.

சக்தி சரவணனின் சண்டைப் பயிற்சி காட்சிகள் அனைத்தும் ரத்தமும் சதையுமாக மிகவும் யதார்த்தமாக வடிவமைக்கப்பட்டு, ஆக்ஷன் ரசிகர்களுக்குப் பெரும் விருந்தாக அமைந்துள்ளது.

முரளி கோபியின் வசனங்கள் கூர்மையாக இருந்தாலும், சில இடங்களில் சாதாரண ரசிகர்களுக்குப் புரியும் வகையில் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கலாம்.

இயக்குனர் ஜியன் கிருஷ்ணகுமார், ஒரு மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளத்தை வைத்துக்கொண்டு, இந்த அரசியல் த்ரில்லர் கதையை மிகவும் சிறப்பாகக் கையாண்டு, படத்தை திறம்பட இயக்கி முடித்துள்ளார். விறுவிறுப்பான அரசியல் சதுரங்க ஆட்டமாகத் தொடங்கும் முதற்பாதி, எந்த இடத்திலும் தேவையற்ற தொய்வு இல்லாமல் மிக வேகமாக நகர்கிறது. இருப்பினும், இரண்டாம் பாதியில் வரும் சில நீளமான அரசியல் வசனங்கள் லேசான சலிப்பு ஏற்படுத்தும் வகையில் அமைந்திருப்பது படத்தின் ஒரு சிறிய பலவீனம் ஆகும். படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் இயக்குனர் எதிர்பார்த்ததை நன்றாக உள்வாங்கி அதற்குத் தங்களின் முழு உழைப்பைக் கொடுத்துள்ளனர். வன்முறை, அரசியல், நட்பு என பல உணர்வுகளைத் திரையில் நேர்த்தியாகக் காட்சிப்படுத்தி அதில் வெற்றியும் கண்டுள்ளார் இயக்குனர்.

மொத்தத்தில் எஸ். வினோத் குமார் தயாரித்துள்ள அனந்தன்காடு – பக்கா அரசியல் ஆக்ஷன் த்ரில்லர். 

நடிகர்கள் :- ஆர்யா, நிகிதா விமல், ரெஜினா கசாண்ட்ரா, சுனில், இந்திரன்ஸ், சித்திக், அஜய், போஸ் வெங்கட், தேவ் மோகன், ரெஞ்சி பணிக்கர், அஞ்சலி பி நாயர், சாந்தி பாலச்சந்திரன், அச்சுத் குமார், விஜயராகவன், சாகர் சூர்யா, அல்சின் பென்னி, சரத் அப்பானி

தொழில்நுட்பக் கலைஞர்கள்:-
இயக்குநர்: ஜியென் கிருஷ்ணகுமார்​
கதை, திரைக்கதை, வசனம்: முரளி கோபி
தயாரிப்பாளர்: எஸ். வினோத் குமார்
ஒளிப்பதிவு: எஸ். யுவா
படத்தொகுப்பு: ரோஹித் வி. எஸ். வாரியத்
இசை: பி. அஜனீஷ் லோக்நாத்
தயாரிப்பு வடிவமைப்பு: ரஞ்சித் கோத்தேரி
நிர்வாகத் தயாரிப்பாளர்: ஜெயின் பால்
சண்டைப்பயிற்சி: ஆர். சக்தி சரவணன்
விஷ{வல் எஃபெக்ட்ஸ்: பினாய் சதாசிவன்
தயாரிப்பு மேற்பார்வை: பிரணவ் மோகன்
மேக்கப்: பைஜு எஸ்
ஒலி வடிவமைப்பு: அருண் எஸ். மணி
ஒலி கலவை: விஷ்ணு பி. சி.
பாடல்கள்: பழநிபாரதி, முரளி கோபி
வண்ணமேம்பாடு: சிவசங்கர் வி. (டீ2ர்)
தலைமை இணை இயக்குநர்: அபில் ஆனந்த் எம். டி.
நிதி மேற்பார்வை: எம். எஸ். அருண்
ஆடை வடிவமைப்பு: அருண் மனோகர்
புகைப்படம்: ரிஷ்லால் உன்னிகிருஷ்ணன்
விளம்பர வடிவமைப்பு: மா மி ஜோ
மக்கள் தொடர்பு: ரியாஸ் கே.அஹ்மத், பாரஸ் ரியாஸ்

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.