ஒன்றுக்கும் மேற்பட்ட காதல் தோல்விகளில் சிக்கும் கதாநாயகனின் கதைதான் இதயம் முரளி.நாயகனாக நடித்திருக்கும் அதர்வா,பள்ளிப் பருவத்தில் ப்ரீத்தி முகுந்தன் மீது காதல் கொள்கிறார்.அந்தக் காதல் தோல்வி அடைகிறது.கல்லூரிப் பருவத்தில் கயாடு லோஹர் மீது காதல் கொள்கிறார்.அந்தக் காதல் என்னவானது? அதற்குப் பின் என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதை கலகலப்பாகச் சொல்ல விழைந்திருக்கும் படம் இதயம் முரளி.

அதர்வாவுக்கு ஏற்ற வேடம்.அவரும் இரசித்து நடித்திருக்கிறார்.முந்தைய படங்களைக் காட்டிலும் தோற்றம்,உடை வடிவமைப்பு ஆகியவை உள்ளிட்ட பல விசயங்களில் புதியவர் போல் தெரிகிறார்.அது படத்தின் காட்சிகளுக்குப் பக்காவாகப் பொருந்தியிருக்கிறது.

பிரித்தி முகுந்தன்,கயாடு லோஹர் ஆகிய இருவரும் திரையில் தோன்றினாலே போதும் என்கிற அளவுக்கு அவர்களுடைய இருப்பு திட்டமிடப்பட்டிருக்கிறது.அவர்களும் புன்னகை,சிரிப்பு,கண் சிமிட்டல்,உதட்டுச் சுழிப்பு என வகைதொகையில்லாமல் சில்மிசங்கள் செய்து இளைஞர்களை ஈர்க்கின்றனர்.

முக்கியவேடத்தில் நடித்திருக்கும் நட்டி,முற்றிலும் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

பரிதாபங்கள் சுதாகர்,ட்ராவிட் செல்வம்,தமன்,நிஹாரிகா,ரக்‌ஷன் ஆகிய அனைவரும் தங்கள் இருப்பை அழுத்தமாகப் பதிய வைத்துள்ளனர்.ரைசா வில்சன், சின்னி ஜெயந்த், பப்லு பிரித்விராஜ் ஆகியோரும் வந்து போகிறார்கள்.

சிறப்புத் தோற்றத்தில் வரும் ஃபகத் ஃபாசில்,ஒரே காட்சி ஓகோவென வரவேற்பு என அள்ளிக்கொண்டு போகிறார்.

ஒளிப்பதிவாளர் ம்னோஜ்பரமஹம்சா,படத்தைத் தூக்கிப் பிடித்திருக்கிறார்.காட்சிகள் வண்ணமயமாகவும் ஒயிலாகவும் அமைந்திருக்கின்றன.ஒவ்வொரு நடிகரும் தங்களைத் தாங்களே வியந்து கொள்கிற மாதிரி படம் பிடித்திருக்கிறார்.

தமன் இசையில் பாடல்கள் கேட்கும் இரகம்.பின்னணி இசை தாலாட்டுபோல் அமைந்திருக்கிறது.அவ்வப்போது பழைய பாடல்களைப் பயன்படுத்திய விதம் சிலிர்ப்பு.

படத்தொகுப்பு செய்திருக்கும் பிரதீப் ஈ.ராகவ்,முழுக்க முழுக்க இளைய சமுதாயத்தை மனதில் கொண்டே காட்சிகளைத் தொகுத்திருக்கிறார்.நல்வாய்ப்பாக வண்ணம் கொஞ்சும் காட்சிகள் நிறைய அமைந்து அவருக்கு வலுச்சேர்த்திருக்கின்றன.

ரமணகிரிவாசன் வசனங்கள் எழுதியிருக்கிறார்.ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் டிராவிட் செல்வம் ஆகியோர் கூடுதல் வசனங்கள் எழுதியிருக்கின்றனர்.காதல் மற்றும் நகைச்சுவைக்கு சமவிகித முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள்.

ஏற்கெனவே சொல்லப்பட்ட கதைதான் என்றாலும் அதைப் புதிதுபோல் ஆக்கும் முயற்சியில் முழு வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன்.அவருக்குப் பக்கபலமாக ஒளிப்பதிவாள்ரும் இசையமைப்பாளரும் அமைந்துவிட்டதால் மனமகிழ்வுடன் இரசிக்கும் படத்தைக் கொடுத்திருக்கிறார்.நடிகர் நடிகையரும் மிகப் பொருத்தமாக அமைந்து படத்தின் பெயரைக் காப்பாற்றிவிட்டார்கள்.

– இளையவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.