நடுத்தரக் குடும்ப இளைஞர் அப்பா அம்மாவுக்குக் கட்டுப்பட்டவர் சரியாக வேலைக்குப் போய் ஒழுங்காக சம்பளம் வாங்கி அதை அப்படியே வீட்டில் கொடுப்பவர் ஆகிய நற்குணங்களைக் கொண்ட இளைஞர் வாழ்வில் காதல் வருகிறது.காதலியால் எல்லாம் உருமாறுகிறது.இளைஞர் மட்டுமின்றி அவர் குடும்பம் மொத்தமும் அவமானப்பட வேண்டிய சூழல்.இதனால் காதலே வேண்டாமென ஒதுங்கும் அவரை விடாமல் துரத்துகிறார் காதலி.அதனால்,ஒரு பரிசோதனை வைக்கிறார் நாயகன்.அந்தச் சோதனையில் நாயகி வென்றாரா? காதல் சேர்ந்ததா?பிரிந்ததா? ஆகிய கேள்விகளுக்கான விடைதாம் லவ் ஓ லவ்.

நாயகனாக நடித்திருக்கும் பவிஷுக்கு இது இரண்டாவதுபடம்.இதில் மிக அழுத்தமான ஆழமான நடிப்பை வெளிப்படுத்தக் கூடிய வேடம் கிடைத்திருக்கிறது.அதை முழுமையாக உணர்ந்து நன்றாக நடித்து வரவேற்புப் பெறுகிறார்.

அறிமுக நாயகி நாகதுர்கா,புதுமுகம் என்று சொன்னால்தான் தெரியும் என்கிற அளவுக்கு இயல்பாக நடித்திருக்கிறார்.அதிலும் அவருக்குக் கிடைத்திருக்கும் வேடம் பல்வேறு அடுக்குகளைக் கொண்ட வேடம்.அதைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்.

நாயகனின் தந்தையாக நடித்திருக்கும் கே.எஸ்.ரவிக்குமார்,அம்மாவாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா,நாயகியின் அம்மாவாக வரும் ரம்யா,காவல்துறை ஆய்வாளராக நடித்திருக்கும் செல்வராகவன்,மகளிர் சங்கத் தலைவியாக நடித்திருக்கும் வனிதா விஜயகுமார் ஆகியோரை முழுமையாகப் பயன்படுத்தி படத்துக்குப் பலம் சேர்த்திருக்கிறார்கள்.

பி.ஜி.முத்தையாவின் ஒளிப்பதிவு திரைக்கதையில் இருக்கும் அழகுகளைக் காட்சிகளாக்கி இரசிக்க வைத்திருக்கிறது.

பாக்சன் இசையில் பாடல்கள் இரசிக்க வைத்திருக்கின்றன.பின்னணி இசை,காட்சிகள் வெளிப்படுத்தும் உணர்வுகளை மேலும் உயர்த்திப்பிடித்திருக்கிறது.

இயக்குநர் சொல்ல நினைத்ததை நினைத்த மாதிரி இரசிகர்களிடம் கொண்டு சேர்க்க உழைத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் என்.பி.ஸ்ரீகாந்த்.

எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர் மகேஷ் ராஜேந்திரன்.இவர்,ஜெயம்ரவி ஹன்சிகா நடித்த ரோமியோ ஜூலியட் படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவராம்.அதன் மையப்புள்ளியையே எடுத்துக் கொண்டு துணிச்சலாக இன்னொரு படத்தைச் செய்திருக்கிறார்.
காலங்காலமாகத் தொடரும் காதல் மற்றும் ஆண் பெண் உறவுகளின் பல்வேறு பரிணாமங்களை வெளிப்படுத்தக் கூடிய காட்சிகளையும் வசனங்களையும் வைத்து கவனம் ஈர்த்திருக்கிறார்.

நான்கு வருடம் நான்கு மாதம் என்கிற கால இடைவெளிகள் ஆண் பெண் மனங்களின் ஆழத்தை வெளிப்படுத்தும் முயற்சியில் முன்னேறியிருக்கின்றன.

இக்கால இளம்தலைமுறை, காதலிக்குமுன்போ அல்லது காதலிக்கும்போதோ கண்டிப்பாகப் பார்க்கவேண்டிய படம்.

– இளையவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.