இம்மார்ட்டல் எனும் ஆங்கிலச் சொல்லுக்கு அழிவில்லாதது என்று பொருள்.அந்தப் பெயர் தாங்கி வந்திருக்கும் இந்தப்படத்தின் கதை.. வாடகை வீடு தேடிக்கொண்டிருக்கும் திருமணமாகாத இளைஞர் ஜி.வி.பிரகாஷுக்கு,நாயகி கயாடுலோகர் வீட்டில் இடம்கிடைக்கிறது.குறைந்த வாடகை நிறைந்த வீடு அழகான வீட்டு உரிமையாளர் என்பதால் உடனடியாக அங்கு குடியேறுகிறார்.

அடுத்தென்ன? அதேதான்.நாயகி மீது காதல் கொள்கிறார்.அவரும் ஏற்கிறார்.இப்படியே போனால் என்ன சுவாரசியம் இருந்துவிடும்.இருவரும் காதலிக்கத் தொடங்கியதும் அழகான காதலியின் ஆபத்தான மறுபக்கம் வெளிப்படுகிறது.இதனால் திடுக்கிட்டு உறைந்து போகும் ஜி.வி.பிரகாஷ் அங்கிருந்து தப்பிக்க முயல்கிறார்? தப்பித்தாரா? இல்லையா? என்பதைச் சொல்வதுதான் படம்.

திருமணமாகாத இளைஞன்,அழகான வீடு அதைவிட அழகான காதலி கிடைத்த மகிழ்விலிருக்கும் இளைஞன்,அந்த அழகுக்குப் பின்னால் பேராபத்து இருக்கிறதென உணர்ந்து அலறும் இளைஞன் என பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தும் வேடமேற்றிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.அவர் ஏற்கெனவே இதுபோன்ற வேடங்களில் நடித்திருப்பதால் இதையும் எளிதாகக் கையாண்டிருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் கயாடுலோகர்,படத்தைத் தாங்கிப் பிடிக்கும் பெரும்தூணாக இருக்கிறார்.அவருடைய அழகிலும் கவர்ச்சியிலும் படத்தில் நாயகனும் வெளியில் இரசிகர்களும் சொக்கிப் போகிறார்கள்.அழகிருக்கும் இடமெல்லாம் அபாயமிருக்கும் எனும் பொதுமொழிக்கு எடுத்துக்காட்டாக இவரும் இணைந்திருக்கிறார்.அவருடைய பாத்திரமும் அதற்கான நடிப்பும் நன்று.

டி.எம்.கார்த்திக்,லொள்ளுசபா மாறன்,ஆதித்யா கதிர்,அர்சு மகாராஜ்,பேமா சாம்சோ,சுனிதா ஷ்ரேஷ்டா ஆகிய நடிகர்கள் அவரவர் வேலையைச் சரியாகச் செய்து படத்தின் ஓட்டத்துக்குப் பயன்பட்டிருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் அருண் ராதாகிருஷ்ணன்,தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் எனும் சொல்லுக்கேற்ப கயாடு லோகரைக் காட்சிப்படுத்தி இளைஞர்களின் வரவேற்பைப் பெறுகிறார்.காட்சிகளின் தன்மைக்கேற்ற ஒளியமைப்பு மற்றும் கணினி வரைகலைக் காட்சிகளுக்கேற்ற படம்பிடிப்பு ஆகியனவற்றை முறையாகச் செய்திருக்கிறார்.

சாம்.சி.எஸ் இசையமைத்திருக்கிறார்கள்.பாடல்கள் கேட்கலாம்.புதிதாக இந்தப்படம் பார்ப்பவர்களுக்கு பின்னணி இசை நன்று.ஆங்கிலத்தில் அதிகம் வந்திருக்கும் இதுபோன்ற படங்களைப் பார்த்தவர்களுக்கு பழகிய இசை என்று தெரியும்.

படத்தொகுப்பாளர் ராஜேஷ்.எம்,கதை எதுவாக இருந்தாலென்ன படம் வேகமாகப் போகவேண்டும் என்று நினைத்து கத்தரியை எடுத்திருக்கிறார்.அதற்குப் பலன் இருக்கிறது.

திகில் மற்றும் மர்மம் கலந்து இதன் கதை,திரைக்கதையை எழுதி இயக்கியிருக்கிறார் மாரியப்பன் சின்னா.இதற்குள் இருக்கும் நிறைகுறைகளைத் தாண்டி கதாநாயகி காப்பாற்றுவார் என்று நம்பியிருக்கிறார்.அவர் நினைத்தது நடந்திருக்கிறது.

– இளையவன்