நாடு மதுபோதையில் மூழ்கிக்கிடக்கிறது,இளைஞர்கள் மட்டுமின்றி சிறுவர்களும் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள்,அரசாங்கமே மதுவிற்பனை செய்கிறது.இப்படிப்பட்ட அவலச்சூழலில் இருக்கும் நம் நாட்டில் திடீரென கட்டாய மதுவிலக்கை நடைமுறைக்குக் கொண்டுவந்து அதை முறையாக நடைமுறைப்படுத்தினால் எப்படி இருக்கும்? என்கிற மகிழ்வான கற்பனையைக் காட்சியாக்கி பெயருக்கேற்ற படமாக வந்திருக்கிறது நல்லபடம்.

நாயகன் ஹரிஷ்,மதுக்குடிப்பகம் நடத்தி வருவதோடு ‘மதுப் பிரியர்கள் மறுமலர்ச்சி சங்கம்’ என்ற அமைப்பைத் தொடங்கி அதற்குத் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார்.எந்நேரமும் போதையிலேயே இருக்கிறார்.அப்படியிருந்தும் அவருக்கு ஒரு காதலி இருக்கிறார்.காதலியும் குடும்பமும் சேர்ந்து அவரைத் திருத்த முயன்றும் நடக்கவில்லை.

இந்நிலையில்,இந்தியா முழுவதும் மதுவிலக்கு அமல்படுத்தப்படுகிறது.இதனால் என்ன செய்தாலும்,மதுக்குடிக்க முடியாது என்பதைப் புரிந்து கொள்ளும் குடிகாரர்கள் மதுப்பழக்கத்தை மறந்துவிட்டு வாழத் தொடங்குகிறார்கள்.இதனால்,நாயகன் குடும்பத்தில் மகிழ்ச்சி திரும்புகிறது.சமுதாயத்தில் அவர்களுக்கான மரியாதையும் கிடைக்கிறது.அந்த மகிழ்ச்சியில் நீடிக்காமல்,மீண்டும் மதுக்கடைகள் திறக்கப்படுவதற்கான சூழல் அமைகிறது.மதுப்பழக்கத்தை மறந்த நாயகன் மற்றும் பலர் மீண்டும் அந்த பழக்கத்தில் மூழ்கினார்களா ? அல்லது திருந்தி வாழும் வாழ்க்கையைத் தொடர்ந்தார்களா? என்கிற கேள்விகளுக்கான விடைகள்தாம் படம்.

நாயகனாக நடித்திருக்கும் டாக்டர்.ஏ.ஹரிஷ்,கல்லூரி மாணவர் போல் இருக்கிறார்.குடிகாரராக நடித்து சிரிக்க வைக்கிறார்.காதல்காட்சிகளில் கவனிக்க வைக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் தனலட்சுமி,ஒரு குடிகாரனை விரட்டிக் விரட்டுக் காதலிப்பது புரியாதபுதிர்.அதை நிறைவாகச் செய்திருக்கிறார்.

நாயகனின் நண்பராக நடித்திருக்கும் கல்கிராஜா சிரிக்க வைக்கிறார்.முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் மொட்ட ராஜேந்திரன்,ரமா, பிரியதர்ஷினி ஆகியோரும் நன்று.

ஒளிப்பதிவாளர் இனியன் ஜெ.ஹரிஷ்,காட்சிகளை சிறப்பாகவும் பாடல்காட்சிகளை மிகச்சிறப்பாகவும் படம்பிடித்திருக்கிறார்.

சஹிஷ்னா சேவியர் இசையில் பாடல்கள் இரசிக்கும்படி அமைந்திருக்கின்றன.பின்னணி இசையிலும் தாழ்வில்லை.

படத்தொகுப்பாளர் பி.ஆர்.பிரகாஷ்,திரைக்கதையோட்டத்தைத் தெளிந்த நிரோட்டம்போல் காட்டிவிட முயன்றிருக்கிறார்.

மக்களை மதுவின் பிடியிலிருந்து மீட்டெடுத்துவிட வேண்டுமென்கிற தவிப்பில் இப்படத்தின் கதை திரைக்கதை வசனங்களை எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர் பிரபுராம்.சி.மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படுதல் அதற்குப் பின்னரான காட்சிகள் அனைத்தும் நிஜமாக நடந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று ஏங்க வைத்துவிட்டார்.

பட உருவாக்கத்தில் சிலபல குறைகள் இருப்பினும்,மது இல்லாத நாடு என்கிற இயக்குநரின் நல்லெண்ணம் படத்தை உற்சாகமாகப் பார்க்க வைக்கிறது.

-இளையவன்