வீணான மனக்கிலேசங்கள், சண்டை சச்சரவுகளை தவிர்ப்பதற்காக, 43 வயதுக்கு கீழுள்ளவர்கள் இந்தச்செய்தியை படிக்காமல் தவிர்ப்பது நலம்.
80 களின் மத்தியில் கல்லூரி மாணவர்களின் லட்சக்கணக்கான இதயங்களைக் கொள்ளையடித்து, நாகார்ஜுனாவை மணந்த ஒரே காரணத்துக்காக, 92-ல் திரையுலகைவிட்டு விடைபெற்ற ஒரிஜினல் அமலா, 20 வருட கேப்புக்கு அப்புறம் மீண்டும் நடிக்க வந்திருக்கிறார்.
இந்த இருபது வருட இடைவெளியும் கூட, பழைய அமலாவின் அழகில் கொஞ்சமும் பறித்துக்கொள்ளைவில்லை என்பதை, அவரது அவரது, இளமை ஊஞ்சலாடும், பளிச் தோற்றமே பறைசாற்றுகிறது.
இன்னும்சொல்வதானால் பழைய அமலாவின் வருகை, புதிய அமலாபாலுக்கு, தெலுங்கு இண்டஸ்ட்ரியில் தொடர்ந்து நீடிக்கமுடியுமா என்ற பயத்தையே கிளப்பியிருக்கிறது என்கிறார்கள். [கொஞ்சம் ஓவராத்தான் போறோமோ?’]
தெலுங்கு இண்டஸ்ட்ரியின் பரபரப்பான இயக்குனர்களில் ஒருவரான சேகர் கம்முலா இயக்கிவரும் ‘லைஃப் இஸ் பியூட்டிஃபுல்’ படம் தான் அமலா ரீ-எண்ட்ரி தந்திருக்கும் படம்.
‘’ இந்த இருபது வருட இடைவெளியில் தமிழிலும், தெலுங்கிலும் என்னை நடிக்கச்சொல்லி நச்சரித்தவர்கள் எண்ணிக்கை சில நூறைத்தாண்டும். ஏனோ எனக்கு, இதுநாள் வரை அப்படி ஒரு எண்ணமே வரவில்லை. குடும்பப்பொறுப்பும், மகன் அகிலை நல்லபடியாக வளர்க்கவேண்டும் என்ற எண்ணமும் நான் நடிக்காமல் ஒதுங்கி இருந்ததற்கு முக்கிய காரணங்களாக இருந்திருக்கலாம். இப்போது அகில் பெரியவனாக வளர்ந்து, தனக்கு வேண்டியதை தானே கவனித்துக்கொள்ளும் நிலைக்கு வளர்ந்துவிட்டான்.
இந்தப்படத்தின் கதையும், எனது கேரக்டரும் பிடித்திருந்தது. அதனால் நடித்தேன். இனி தொடர்ந்து நடிப்பேனா என்பது தெரியாது’ என்கிறார் அமலா.
’அப்பிடியெல்லாம் சொல்லப்புடாது. நீங்க நல்லா வருவீங்க மேடம். பாலா, கவுதம் ,கே.வி.ஆனந்த்,மிஷ்கின், லிங்குசாமியெல்லாம் உங்கள ஹீரோயினா வச்சே கதையெல்லாம் பண்ணிவச்சிருக்காங்க மேடம்’
வரும் ஆகஸ்ட் 15-அன்று ரிலீஸாகவிருக்கும் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டுவிழா சமீபத்தில் நடந்தது. இதில் கலந்துகொண்ட அமலாவின் கணவர் நாகார்ஜுனா, ‘’ இந்தப்படத்தில் அமலா நடிக்க ஒத்துக்கொண்டபோது, அவர் கதாநாயகியின் அம்மாவாக நடிக்கப்போகிறார் என்பது தெரிந்திருந்தால், நான் அவரை நடிக்கவிடாமல் தடுத்து நிறுத்தியிருப்பேன். என் அமலாவுக்கு அம்மா வேடத்தில் நடிக்கும் அளவுக்கு இன்னும் வயதாகிவிடவில்லை.
படத்தில் அவர் கதாநாயகியின் அம்மா போலவே இல்லை. சகோதரி போல அவ்வளவு இளமையாக இருக்கிறார்’ என்று பேசி கைதட்டல்களை அள்ளினார்.
’இவ்வளவு காலமும் உங்க ’லைஃப் இஸ் பியூட்டிஃபுல்’ லா இருக்கிறதோட ரகஸியம் இதுதானா நாகார்ஜுனா?’