‘தர்பார்’படம் முழுக்க முழுக்க ரஜினி படமல்ல. ஒரு இயக்குநராக அதில் என்னுடைய அடையாளமும் நிச்சயமாக இருக்கும்’என்கிறார் ஏ.ஆர் முருகதாஸ். படம் ரிலீஸாக இன்னும் பத்தே தினங்கள் மட்டுமே இருப்பதால் ஒரு சில பத்திரிகையாளர்களை மட்டும் சந்தித்து பேட்டி அளித்தார் அவர்.இந்தப் படத்துக்கும் கடைசி நேரத்தில் ஏதாவது கதைத்திருட்டு பஞ்சாயத்து வந்துவிடக்கூடாது என்று நினைத்தோ என்னவோ, ‘தர்பார்’ ரஜினியின் மூன்று முகம்’படத்தின் உல்டா என்பதை அவரே போட்டுடைத்தார்.
அப்போது பேசிய அவர்,’ரஜினி,கமல், விஜயகாந்த் போன்றோரைத் திரையில் பார்த்து ரசித்துத்தான் சினிமாவுக்கே வந்தோம்.அவர்களுடனே இணைந்து பணியாற்றும் வாய்ப்பு அமைந்தபோது அளவு கடந்த சந்தோஷம் கிடைத்தது.
ஒரு இயக்குநர் என்பதையும் மீறி ரஜினி சார் செட்டுக்குள் வந்தாலே ஒரு உற்சாகம் தொற்றிக் கொள்ளும். ஒரு பஞ்ச் வசனத்தை அவர் பேசும்போதும் நாமே எதிர்பாராத விதமாக புதிதாக ஏதாவது அவர் செய்தாலோ நான் மட்டுமல்ல ஒட்டுமொத்த செட்டும் கைதட்டி ஆரவாரம் செய்யும்.
மூன்றுமுகம் அலெக்ஸ்பாண்டியன் வேடத்தை முழுமையாக்கி ஒரு கதை என்றதுமே அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது. திரைக்கதையும் நன்றாக அமைந்திருப்பதால் அவரும் உற்சாகமாகிவிட்டார்.
தமிழில் அவர் படம் என்றாலே போதும், தெலுங்கில் நூறு படங்கள் நடித்து முடித்த பின்புதான் பிரபலமானார். அதேபோல் இந்தியில் அவர் நடித்து பெரிய இடைவெளி ஏற்பட்டுவிட்டது.நீண்ட இடைவெளிக்குப் பிறகு எந்திரன், 2.ஓ, பேட்ட ஆகிய படங்கள் மூலம் அங்கும் அவர் படங்களுக்குப் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.
ஆக அவர் படம் என்றால் அது இந்திய அளவிலான படமாக இருக்கவேண்டும் என்கிற சிந்தனையில் இப்படத்தின் கதை மற்றும் கதைக்களம் ஆகியன உருவாக்கப்பட்டது.நாங்கள் நினைத்தது போலவே படம் மிகச் சிறப்பாக வந்திருக்கிறது.இது ரஜினி சாரின் படமாகவும் இருக்கும். என்னுடைய அடையாளமும் படத்தில் இருக்கும்’என்று இயக்குநர் கெத்தை விட்டுக்கொடுக்காமல் பேசுகிறார் இந்தியாவின் கிறிஸ்டோபர் நோலன் ஏ.ஆர். முருகதாஸ்.