குட்டிப்புலி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் முத்தையா. பின் தொடர்ந்து கொம்பன், மருது, கொடிவீரன், தேவராட்டம் ஆகிய படங்களை இயக்கிய முத்தையா ஒரு நல்ல இயக்குனராக பெயர் பெற்றுள்ளவர்.
மதுரை மாவட்டத்தில் ஆதிக்கமாக நிலவும் ஒரு சாதிய அடையாளத்தை கொண்ட கதைகளை களமாகக் கொண்டு பெரும்பாலான படங்கள் இயக்கியுள்ளார்.
கார்த்தியை வைத்து இவர் இயக்கிய கொம்பன் படத்தைத் தொடர்ந்து சூர்யா நடிக்கும் படத்தை இயக்குவார் என்று சொல்லப்பட்டது.
அதற்குள் விஷாலின் மருது படம் இயக்கும் வாய்ப்பு வந்ததால் அந்தப்படத்துக்குப் போனார் முத்தையா.
மருது படம் வெளியானதும் சூர்யா நடிக்கும் படத்தை முத்தையா இயக்கவிருக்கிறார் என்று சொல்லப்பட்டது. அதுவும் நடக்கவில்லை.
சூர்யாவின் தேதிகள் இல்லாததால் சசிகுமார் நடித்த கொடிவீரன் படத்தை இயக்கினார் என்று சொல்லப்பட்டது.
அதற்குப் பிறகும் சூர்யா பிஸியாக இருந்ததால் கெளதம் கார்த்திக் நடித்த தேவராட்டம் படத்தை இயக்கினார் முத்தையா. அப்படம் வெளியானதும் சூர்யா படம் இயக்குவார் என்று சொல்லப்பட்டது.
தேவராட்டம் முடிந்ததும் சூர்யா படத்திற்காக தனியாக அலுவலகம் போட்டு கதை விவாதம் நடந்து திரைக்கதை உருவாக்கமும் முடிந்துவிட்டது என்றார்கள்.
சூரரைப்போற்று படத்துக்குப் பின் இந்தப்படத்தில் சூர்யா நடிப்பார் என்றும் சொல்லப்பட்டதாம்.
ஆனால், அடுத்து இயக்குனர் ஹரிக்கும், அதற்கடுத்து வெற்றிமாறன் இயக்கும் படத்திற்கும் ஒப்புக்கொண்டுவிட்டாராம் சூர்யா.
இதனால் வழக்கம்போல் ஏமாந்து போன முத்தையா, மீண்டும் கெளதம் கார்த்திக்கை வைத்தே அடுத்த படத்தை இயக்கலாம் என முடிவு செய்து அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறாராம். சாதிய அடையாளம் கொண்ட படங்களை தவிர்க்க விரும்புகிறாரோ சூர்யா ?