பட்ட காலிலேயே படும் என்பதுபோல் தர்பார் படம் மேலும் மேலும் பல சோதனைகளை சந்தித்து வருகிறது. கடந்த இரு தினங்களாக இப்படத்தின் ஹெச்.டி.பிரிண்ட் முகநூல்களிலும், வாட்ஸ் ஆப்பிலும் தொடர்ச்சியாக பகிரப்பட்டு வருவதால் தியேட்டர் வசூல் 40 சதவிகிதத்துக்கும் கீழே குறைந்துள்ளது.
ரஜினிகாந்த் – முருகதாஸ் கூட்டணியில் உருவாகியுள்ள தர்பார் படம் சனவரி 9 ஆம் தேதி வெளியானது.படம் வெளியான அன்றே சில மணிநேரங்களில் இணையத்தில் சட்டவிரோதமாக தர்பார் படம் வெளியாகி படக்குழுவுக்கு அதிர்ச்சியைத் தந்தது.
தற்போது, தர்பார் படத்துக்கு மீண்டும் ஒரு சிக்கல் வந்துள்ளது. அதாவது, இணையத்தில் வெளியான தர்பார் படம் முகநூல் பக்கங்களில்,வாட்ஸ் அப்களில் 3 பாகங்களாகப் பிரித்து பகிரப்பட்டு வருகிறது.இதனைக் கண்டு அதிர்ச்சிக்குள்ளான தயாரிப்பு நிறுவனம், காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது.
லைகா நிறுவனம் சார்பில் அதன் தலைமை செயலதிகாரி கண்ணன், அம்மா கிரியேஷன்ஸ் சிவா மற்றும் கே.ராஜன் ஆகியோர் காவல் ஆணையர் அலுவலகத்துக்குச் சென்று புகார் கொடுத்தனர்.திரையரங்குகளில் படம் ஓடிக்கொண்டிருக்கும் போது இவ்வாறு வாட்ஸ் அப்பில் பகிர்வதைத் தடுக்க வேண்டும் என்றும், தர்பார் படத்தை பகிர்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த சிவா, கே.ராஜன் ஆகியோர் பேசுகையில், தர்பார் படத்தைச் சட்டவிரோதமாக வாட்ஸ் அப்பில் பார்ப்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறையினர் உத்தரவாதம் அளித்துள்ளதாகக் கூறினர்.மேலும், வாட்ஸ் அப்பில் பகிர்பவர்களை சைபர் க்ரைம் பிரிவினர் ட்ராக் செய்து வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளனர்.
தியேட்டர்களில் தர்பார் வசூல் படுமோசமானதைத் தொடர்ந்து ரஜினியின் மருமகனார் தனுஷ் 16ம் தேதி ரிலீஸ் செய்வதாக இருந்த தன்னுடைய ‘பட்டாஸ்’படத்தை ஒருநாள் முன்னதாக 15ம் தேதியே ரிலீஸ் செய்கிறார்.இதனால் தனுஷ் மீது செம கடுப்பில் இருக்கிறாராம் ரஜினி.