மும்பையை சேர்ந்த, சரியாக தமிழ்பேசத் தெரியாத தமிழச்சி பிரியா கிருஷ்ணசாமி இயக்கிய ‘பாரம்’ படத்தை பார்த்த பிறகு தேசிய விருது மீது இருந்த கொஞ்சநஞ்ச மரியாதையும் போய்விட்டது. கடந்த ஆண்டு அசுரன், சில்லுக்கருப்பட்டி, கே.டி, தொரட்டி, நெடுநல்வாடை, சூப்பர் டீலக்ஸ் என தேசிய விருதுக்கு தகுதியான படங்கள் பல இருந்தும், பாரத்துக்கு விருதை தூக்கி கொடுத்திருப்பதில் பெரிய அரசியல் இருக்கிறது.
ஒரு காலத்தில் வறுமை காரணமாக இனி பிழைக்க வாய்ப்பே இல்லை என்று வைத்தியர்கள் கைவிரித்த முதியவர்களை ‘தலைக்கூத்தல்’ முறையில் மரணிக்கச் செய்தார்கள். குளிர்ந்த நீரில் குளிக்க வைத்து, இளநீர் குடிக்க வைத்து இந்த காரியத்தைச் செய்தார்கள். சந்தேகமே இல்லாமல் இது கொடூரமான கொலைதான். இப்போது அந்த முறை முற்றிலும் இல்லை.
ஆனால் இன்னும் அது தொடர்வது போலவும், தமிழர்கள் முதியவர்களை பாரமாக கருதி விஷ ஊசி போட்டு கொல்வது போலவும் படம் சித்தரிக்கிறது. அதாவது தமிழர்கள் காட்டுமிராண்டிகள் என்கிறது படம். இப்போது புரிகிறதா தேசிய விருது ஏன் கொடுக்கப்பட்டது என்று. படத்தின் தொழில்நுட்பம் மிக மோசமானது. படத்தில் நடித்திருக்கும் கலைஞர்களின் நடிப்பு மட்டுமே படத்தில் உள்ள ஒரே ஒரு நல்ல விஷயம்.
இந்தப் படத்தை ஏன் வெற்றிமாறனும், மிஷ்கினும் தாங்கி பிடிக்கிறார்கள் என்ற தெரியவில்லை. வெற்றிமாறனாவது பரவாயில்லை. படத்தை வெளியிட்டு கொடுத்ததோடு நின்று விட்டார். ஆனால் மிஷ்கின் பாரம் என்னவோ உலகச் சிறந்த படம் போலவும், இயக்குனர் பிரியா கிருஷ்ணசாமி இதுவரை வந்த தமிழ் இயக்குனர்களை விடவும் மேலானவர் போலவும் பேசுகிறார்.
படத்திற்கு போஸ்டர் ஒட்டுவேன் என்று அறிவித்து, ஒட்டவும் செய்திருக்கிறார். எனக்கு தெரிந்து தியேட்டரில் ஓடாத படத்திற்கு போஸ்டர் ஒட்டிய ஒரே ஆள் மிஷ்கின்தான்.
வெற்றிமாறனும், மிஷ்கினும் இந்தப் படத்தை தூக்கி பிடிப்பதற்கு பின்னால் இருக்கும் அரசியல்தான் என்னவென்று புரியவில்லை.
முகநூலில் மூத்த பத்திரிகையாளர் மீரான்