பெரியார் சொன்ன “மதம் மனிதனை மிருகமாக்கும்” என்பதன் மூன்று மணி நேர பிரமிப்பான, பிரமாண்டமான, மிரட்சியான, மிரட்டலான அனுபவமே Trance…
‘உஸ்தாத் ஹோட்டல்’, ‘அஞ்சு சுந்தரிகள்’க்குப் பிறகு 6 வருடங்கள் கழித்து அன்வர் ரஷீத்தின் அடுத்த படம். யப்பா…!! 6 வருட காத்திருப்பு வீண் போகவில்லை, படத்தின் ஒவ்வொரு நொடியையும் ச்சும்மா இழையிழையாக செதுக்கியிருக்கிறார்கள் மொத்த crew-வும்…
மனப்பிறழ்வு கொண்ட தம்பிதான் தன் உலகம் என்றிருக்கும் வாழ்வில் முன்னேறத் துடித்து ஆனால் இயலாமல் இருக்கும் ஒருவனை தம்பியின் திகீர் முடிவு துவம்சம் செய்ய, விளிம்பு நிலையில் இருந்தவனை அவன் கனவிலும் நினைத்தும் பார்த்திராத உச்சத்தில் தூக்கி உட்கார வைக்கும் ஒவ்வொரு சம்பவங்களையும் விவரித்து மாளாது…
முதல் காட்சியிலேயே வேலைக்குப் போகும் ஃபஹத் கத்தியை எடுத்து பையில் போட்டுக் கொண்டு கிளம்ப, ‘என்னடா இவன் கத்தியுடன் கிளம்புகிறானே’ எனத் தோன்ற வைத்து பின் அதற்குண்டான காரணத்தை அடுத்து வரும் காட்சிகளால் விளக்குவதில் ஆரம்பிக்கிறது கதையில் வரும் ஒவ்வொரு சம்பவங்களுக்குண்டான பின்னணியும்.
நாதியற்றுக் கிடந்தவனுக்கு முன்பு செய்த ஒரு உதவியால் ஒரு வேலைக்கான இன்டர்வியூ போகும் வாய்ப்பு கிடைத்த சந்தோஷத்தில் வழுக்கி விழுந்து நொண்டி நொண்டி நடந்து தயங்கித் தயங்கி உட்காருபவன் முன்பு கவுதம் காஃபி அருந்தச் சொல்ல, ஃபஹத் மறுக்க, “ஒருவர் அன்புடன் காஃபி அருந்தச் சொல்லும் போது அதை மறுக்காமல் வாங்கி அருந்த வேண்டும்” என கவுதம் முகத்திற்கு நேராக ஆணையிடும் அந்த இடம் அடுத்து நடக்கப் போகும் சம்பவங்களுக்கு உதாரணமாய்…
கவுதம், “ஒரு மோட்டிவேஷனல் ட்ரைனரா இருக்க நீ என் கம்பெனிக்கு என்ன செய்ய முடியும்?”
ஃபஹத், “உங்க கம்பெனியில இருக்க ஒவ்வொருவரையும் வெற்றியாளரா மாற்றிக் காட்டுகிறேன்…”
“நீ ஒரு வெற்றியாளரா?”
“…. …. ….”
“என்ன சம்பளம் எதிர்பாக்குற? நாப்பதாயிரம்?”
“ஒரு… ஒரு லட்சம்”
“ரெண்டு லட்சம்?”
“…. …. …”
“அஞ்சு லட்சம்?”
“…. …. ….”
“ஒரு கோடி?”
“…. …. ….”
“இங்க நீ செய்யப் போற வேலைக்கு நீ சம்பாதிக்கப் போற பணத்துக்கு அளவே கிடையாது”
“…. …. ….”
“நீ இங்க promote பண்ண போறது drugs”
“drugs…?! ஐயோ அதெப்படி?”
“நான் சொன்ன drug மதம்…”
இன்டர்வியூ முடிந்து ட்ரைனிங், ட்ரைனிங் முடிந்து அவன் பெயர் மாற்றம், அதுவும் முடிந்து முதல் ஸ்டேஜ் ஷோ… அதன் பின் நம் கண்முன்னே காண்பதெல்லாம் அற்புதங்களும் அதிசயங்களும் ஆராதனைகளும் ஆசீர்வாதங்களும்…
சுமார் 10 வருடங்களுக்கு முன்பு Sr.தினகரன் நோய்வாய்ப்பட்டு இறந்த போது கணக்கில் காட்டப்பட்ட அவருடைய சொத்து மதிப்பு மட்டும் 850 கோடிகள் என்று கூறப்பட்டது… விசுவாசிகளுக்காக அழுது கொண்டே பிரார்த்திக்கும் அப்பாவின் தொழிலை தொடரும் Jr.தினகரன், மோகன் லாசரஸ் உள்ளிட்டோரின் பிரார்த்தனை கூட்டங்களை, பிசாசு ஓட்டும் வைபவங்களை, நாள்பட்ட நோயுற்றவர்களை சுகப்படுத்துதலை நேரிலோ டிவியிலோ பார்த்திருந்தால் இப் படம் உங்களுக்கு வாழ்வில் என்றுமே மறக்காத உன்னத அனுபவத்தைத் தரும்…
உலகம் முழுவதும் உள்ள இவ்வகை கடவுளின் தூதுவர்கள் அனைவரும் பின்பற்றுவது ஒரே ஃபார்முலா தான்… அவர்களின் டார்கெட் மிடில் க்ளாஸ் மற்றும் லோயர் மிடில் க்ளாஸ் மக்கள்… அவர்களுக்கு வாழ்வில் என்றுமே தீராக் கஷ்டங்கள் இருந்து கொண்டே இருக்கும், அவர்களின் ஒரே மீட்பர் கடவுள் மட்டுமே என்பது மட்டுமே அவர்களின் ஒரே நம்பிக்கை. சராசரியாக மாதம் முப்பதாயிரம் சம்பாதிக்கும் ஒரு குடும்பத்தில் இருந்து அவர்களின் குறை தீர்க்க ஆண்டவரிடம் மன்றாடும் பணிக்காக வெறும் பத்து சதவீதம் தானே, ஆண்டவருக்காகத் தானே என அதில் மூவாயிரத்தை எடுத்துக் கொடுக்க அவர்கள் சிறிதும் தயங்குவதே இல்லை. இது போல் உலகமெங்கும் பல கோடிக்கணக்கான குடும்பங்கள்… கடவுளின் தூதுவர்கள் கோடிக் கணக்கில் புரள அவர்களை முன்னோடிகளாகக் கொண்டு தினமும் புதுப்புது தூதுவர்கள் விசுவாசிகளை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
டிவி ரியாலிட்டி ஷோக்களுக்கு செய்வது போல் ஜெபக் கூட்டத்திற்கான அந்த செட் அப், ஏற்கனவே ட்ரைனிங் கொடுத்து ஏற்பாடு செய்யப்பட்ட நோயாளிகள் மற்றும் சாட்சிகள், முதல் சில வரிசைகளில் கைகளை உயர்த்தி கதறியழ அமர்த்தப்பட்ட கூட்டம், உருகி உருகி பேசும் போது பின்னணியில் வயலின் இசைக்க பரிந்துரை, தூதுவர் உச்சஸ்தாயில் தேவனை இறங்கி வர அழைக்கும் போது சுழன்றடிக்கும் கண்ணைப் பறிக்கும் வெளிச்சமும் இடிமின்னல் சப்தங்களும், தூதுவர் எகிறி குதித்து பாடி ஆடும் போது அலறும் வாத்தியங்கள் என அனைத்தும் வெளிச்சமிட்டு காட்டப்படுகின்றன. ஃபஹத் தன் குழுவினருடன் தன் அலுவலகத்தில் கால்சென்டரை கடந்து செல்லும் போது அங்குள்ள ஒருவன், “உங்களுக்காக பிரார்த்திக்க ஆண்டவருக்கு வெறும் ஆயிரத்து ஐந்நூறு மட்டும் ட்ரான்ஸ்ஃபர் பண்ணி விடுங்க” என்பான்.

ஃபஹத் ஃபாசில்….
யார்றா இவன்? மலையாள சினிமாவின் பொக்கிஷம்… தேர்ந்தெடுத்த நடிப்பின் அரக்கன், தேவதை, ராட்சசன், கடவுள், சாத்தான் என எப்டி வேண்டுமானாலும் தூக்கி வைத்துக் கொண்டாடலாம். ‘கும்பளாங்கி நைட்ஸ்’ல் செய்த சைக்கோ கேரக்டரைப் போல நூறு மடங்கு பலம் பொருந்திய கேரக்டர் இப்படத்தில்… நீ எவ்ளோ வேண்டுமானாலும் கொடு, விழுங்கி கொண்டே இருப்பேன் என பத்து காடொத்கஜன்கள் சேர்ந்தது போல மொத்தத்தையும் உள்வாங்கி அள்ளித் தெறிக்க விடுகிறான்.
முதல்வன் படத்தில் வரும் ரகுவரன்-அர்ஜுன் டிவி பேட்டி போல ஒரு காட்சி இதிலும். சௌபின் ஷாஹிர் பயங்கர நக்கலுடன் ஒவ்வொரு கேள்வியையும் முகத்தில் தூக்கியறைய ஒவ்வொரு கேள்விக்கும் பதிலளிக்கும் போது ஃபஹத்தின் அந்த பதட்டத்தை அடக்கிக் கொள்ளும் மேனரிஸமும் பாடி லாங்குவேஜும் மிரட்டல். அதற்கு முன்னோட்டமாக மேலே சொன்ன அவனுடைய முதல் இன்டர்வியூ காட்சி, தயங்கித் தயங்கி நுனி சீட்டில் உட்கார்ந்தவன் உச்சத்திற்குச் சென்ற பிறகு அமெரிக்காவில் ஒரு மீட்டிங்கில் கவுதம் முன்பு கால் மேல் கால் போட்டு அமர்வது அட்டகாசம்.
எத்தனை நாட்கள் ஹோம்வொர்க் எனத் தெரியவில்லை, அந்நிய பாஷை பேசுவதும், அல்லேலூயா எனப் பரவசத்துடன் உணர்ச்சி மேலிட அலறுவதும், கோட்டைக் கழட்டி லாவகமாக கூட்டத்தில் வீசுவதும் நமக்கே படம் பார்க்கிறோமா இல்லை சுவிசேஷக் கூட்டத்திற்கு வந்திருக்கிறோமா என்ற பிரமை…
ஆஸ்பத்திரியிலிருந்து வெளியேறி கவுதமையும் செம்பன் வினோத்தையும் சந்தித்து கண்களில் கண்ணாடியின் நீல வெளிச்சம் மின்ன மின்ன புது டீல் பேசும் காட்சியில் ஃபஹத் ருத்ர தாண்டவம்…
ஒரு ஹைடெக் மாஃபியா தலைமையாக கவுதம்… கேரக்டருக்கே உரிய அந்த டயலாக் டெலிவரி வெறித்தனம்… எங்கயா இருந்த இத்தனை நாளா?! ஃபஹத் உடனான உரையாடல் காட்சிகளில் ஸ்கோர் செய்வது கவுதம் தான். “நீ உலகத்துக்கே மாஸ்டரா இருந்தாலும் எனக்கு அடிமை தான்…” எனும் ஒரு காட்சியே போதும்.
வின்சென்ட் வடக்கனின் ஸ்க்ரிப்ட், இதற்கு முன் எத்தனை பேரிடம் தூக்கித் திரிந்தாரோ, அதற்குண்டான பல மடங்கு மரியாதை இப்படத்தில் செய்யப் பட்டுவிட்டது. விஜூ பிரசாத் என்ற பெயரை மாற்றும் போது திலீஷ் போத்தன், “நம்ம பண்ண போறது பெரிய வியாபாரம், சும்மா இந்த விஜூ, ஷிஜு, பைஜூ, சஜின்னு எல்லாம் பேரு வெச்சிக்கக் கூடாது, இப்போ உன் பேரு Joshua Carlton, சுருக்கமா JC, அதாவது Jesus Christ…
உண்மையை வெளிச்சத்துக்குக் கொண்டு வரத் துடிக்கும் மீடியாவாசியாக சௌபின் ஷாஹிர் இருந்தாலும் அவருக்குள்ளேயும் இருந்த சபலத்தை வெளிக்காட்டும் போது ‘ஈநாடு’ படத்தின் அலெக்ஸ்சாண்டர் கேரக்டர் ஞாபத்துக்கு வந்து போனது… மனிதர்களில் நம்பத் தகுந்தவர்கள் என யாருமே இல்லை என்பதே அது.
படத்தின் மற்றொரு பெரும் பலம் இசை… இரண்டு டைட்டில் ட்ராக்குகளும் Enigma இசையை inspire செய்தது போல… Enigma கேட்டவர்களுக்குப் புரியும், அது ஒரு நிலைகொள்ளா மனநிலைக்கு நம்மை கொண்டு செல்லும், புரிந்து கொள்வது மிகக் கடினமாக இருக்கும். முதல் டைட்டில் ட்ராக் Enigma-வின் Mea Culpa-வை நிச்சயம் நினைவு படுத்தும். இறுதிப் பிரசங்கக் காட்சியில் விளையாடி விட்டார்கள்…
அமல் நீரத்தின் ஒளிப்பதிவு கதையின் mood-க்கும் genre-க்கும் ஏற்றார் போல்… தொட்டியில் உள்ள மீன் நீந்துவது, நஸ்ரியா டோப் அடிப்பது, அமெரிக்க சென்ற பிறகு ஃபஹத் உடையணிவது, அந்த ரிச் & ராயலான சிலுவையை அணியும் போது வைக்கும் எக்ஸ்ட்ரீம் க்ளோஸ் அப், பல இடங்களில் dutch ஆங்கிள்… பக்தக் கூட்டத்தின் மொத்த உணர்வுகளையும் கேமிராவிற்குள் அள்ளி கண்முன் அளிப்பது எல்லாம் சாதாரண விஷயம் அல்ல, மாஸ்டர் க்ளாஸ்…
‘இந்து மதத்தையோ இஸ்லாம் மதத்தையோ இது போல கிண்டலடித்து படம் எடுக்க முடியுமா?, இயக்குனரும் ஹீரோவும் இஸ்லாமியர்கள் என்பதால் தான் கிறிஸ்தவத்தை நக்கலடித்துள்ளனர்’ போன்ற கேள்விகள் இங்கு எழுப்பப்பட்டுக் கொண்டிருக்கிறன. இப் படம் உரைப்பது உலகிலுள்ள அனைத்து மதங்களுக்கும் பொதுவானது, இங்கு கிறிஸ்தவ மதம் ஒரு உதாரணத்திற்காக மட்டுமே எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் மலையாள படைப்பாளிகள் இது போன்ற விஷயங்களை சர்வ சாதாரணமாக எடுத்தாள்பவர்கள், மலையாள ரசிகர்களும் இது போன்ற படங்களை ரசிக மனோபாவத்துடன் கண்டு களித்து கடந்து செல்பவர்கள்…
மதத்தின் பெயரால் மக்களின் அறியாமையையும் முட்டாள்த்தனத்தையும் மூடநம்பிக்கையையும் முதலீடாக வைத்து அதற்கு ஒரு மனப்பிறழ்வு கொண்ட தலைவனை நிறுத்தி கோடிக்கணக்கில் வியாபாரம் செய்யும் மாஃபியாக்களின் கதையே TRANCE… தற்போதைய இந்திய அரசியலுக்கும் இது வெகுவாகப் பொருந்தும்…
மிகக் குறைந்தபட்ச கொக்கைய்ன் உடலுக்குள் சென்றாலே அது தரும் போதை ஒரு வாரத்திற்கும் மேல் இருக்குமாம், அது போல் இப் படத்தைப் பார்த்ததிலிருந்து உடல் முழுவதும் நிரம்பி ஒரு போதையைப் போல் ஆட்கொண்டுள்ளது…
படம் ரிலீசுக்கு சில வாரங்கள் முன்பு இப்படம் வெளி வரக்கூடாதென கேரளாவில் உள்ள சில பாஸ்டர்கள் எல்லாம் சேர்ந்து கூட்டு ஜெபம் செய்தனராம்… Business Ethics😀😀
Online-ல் வரும் வரை காத்திருக்காமல் படத்தின் பிரமாண்டத்தையும் அற்புத சுஹானுபவத்தையும் தியேட்டரில் அனுபவியுங்கள்…
–-முகநூலில் மலர்வண்ணன்
https://www.facebook.com/groups/WorldMoviesMuseum/permalink/1156055178064349/