2015 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி சென்னை காமராசர் அரங்கத்தில் இளையராஜா நடத்திய என்னுள்ளில் எம்,எஸ்.வி எனும் இசை நிகழ்ச்சி நடந்தது. மறைந்த இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனின் புகழ்பாடும் நிகழ்ச்சி அது.
ஐந்தாண்டுகளுக்குப் பின் கொரொனா ஊரடங்கு காரணமாக அந்நிகழ்ச்சி சன் தொலைக்காட்சியில் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டது.
அதைப்பார்த்துவிட்டு இதழாளர் சங்கர் எழுதியிருக்கும் பதிவு…..
என்னுள்ளில் எம் எஸ் வி…
மனசு 5 ஆண்டுகள் பின்நோக்கிப் போய்விட்டது. இப்போது பார்க்கும்போதும், அன்று காமராஜர் அரங்கில் ஏற்பட்ட அதே உணர்வு, கண்ணோரங்களில் கசிவு….
இந்த விழாவுக்கு சிறப்பு விருந்தினர்கள் என்று யாரும் அழைக்கப்படவில்லை. தனிப்பட்ட ஆர்வத்தில் வந்திருந்தார் ரஜினி (அன்றுதான் மக்கள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் அமரரானார்.)
“எம்.எஸ்.வி. பெரிய இசை மேதை, பெரிய இசை மகான். இவர் இசை ஞானி என்றால், அவர் இசை சாமி. அதாவது இசைக் கடவுள். அந்தக் கடவுள்பற்றி இப்படிப்பட்ட ஞானிகளுக்குத்தான் தெரியும் அதுதான் அவரைப்பற்றி இப்படி ஒரு அற்புதமான நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்.
திறமை என்பது எல்லாருக்கும் இருப்பதில்லை. அது அப்பா, அம்மா, கொடுத்து வருவதல்ல. கடவுள் கொடுத்துவருவது. திறமை என்பது கடவுள் கொடுத்து வரவேண்டும் . சரஸ்வதி கடாட்சம் இருப்பவர்களுக்கே அது கிடைக்கும். எம்.எஸ்.வி அப்படிப்படட இசைத்திறமை பெற்ற மேதை .அந்தத் திறமையால் பணம் வரும், பெயர்வரும்,புகழ் வரும் .
ஆனால் இவை எல்லாம் வந்து விட்டால் தலை, கால் நிற்காது. தலைக்கனம் வந்துவிடும். ஆனால் இவர் கடுகளவு கூட தலைக்கனம் இல்லாமல் இருந்தார்.”
– இப்படி ரஜினி பேசிக்கொண்டிருந்த போது, குறுக்கிட்ட ராஜா சார்,
”சினிமா உலகம் பெரியது. பலரும் வந்தால் நிகழ்ச்சியின் போக்கும் சூழலும் மாறிவிடும் என்றுதான் நான் யாரையும் அழைக்கவில்லை. அப்படிப்பட்ட நிலையில் பலரும் வராத போது உங்களுக்கு மட்டும் இங்கே வரத் தோன்றியது.எப்படி? ” என்று ரஜினியிடம் கேட்டார்.
காரணம், இந்த நிகழ்ச்சி குறித்து அன்றைக்கு ஏகப்பட்ட விமர்சனங்கள், குத்தல் பேச்சுக்கள். குறிப்பாக இலவச நுழைவு சீட்டு கிடைக்கவில்லையே என்ற கோபங்கள்!
ராஜாவின் கேள்விக்கு ரஜினி அளித்த பதில், அவரை இன்னொரு ஞானியாகக் காட்டியது.
ரஜினி: ”எம்.எஸ்.வி அவர்கள் பெரிய மேதை.அவர்1960- களிலேயே- 70 களிலேயே பெரிய புகழ்பெற்று விளங்கினார். எம்.ஜி.ஆர். சிவாஜி போன்ற பெரிய நடிகர்களையும் ஸ்ரீதர்,பாலசந்தர் போன்ற பெரிய இயக்குநர்களையும், டி.எம்.எஸ்., பி.சுசீலா, பி.பி.ஸ்ரீநிவாஸ் போன்ற இசைக்கலைஞர்களையும் உயர்த்தி உச்சத்தில் கொண்டு சென்றவர் அவர். அவரால் மேலே உயர்ந்து புகழ்பெற்றவர்கள் பலர் இருக்கிறார்கள்
அவர் ராமாயணத்தில் ராமனுக்கு அனுமன் உதவியதைப் போல பலருக்கும் உதவியிருக்கிறார். அனுமனைப்போல பெரிய உதவிகள் செய்தார். ஆனால் அணிலைப் போல எளிமையாக வாழ்ந்தவர்.
அவரைப் போற்றிப் பாராட்டிக் கொண்டாடி நடத்தப்படும் இந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் நானும் ஆசீர்வாதம் பெற்றதைப் போல நினைக்கிறேன்.
நீங்கள் இசைஞானி, எப்போதும் தன் மனதில் பட்டதைச் சொல்பவர். யார் பற்றியும் கவலைப்படாமல் பேசுபவர் உள்ளத்தின் உணர்வுகளை ஒளிக்காமல் வெளிப்படுத்துபவர். உங்களை எம்.எஸ்.வி எப்படி பாதித்தார் என்பதை தெரிந்து கொள்ளவே இங்கு வந்தேன். என்னுள்ளில் எம்.எஸ்.வி. என்று நீங்கள் என்ன கூற நினைக்கிறீர்கள்? உங்களை அவர் எப்படிப் பாதித்தார் என்று எப்படிச் சொல்கிறீர்கள் என்று அறிய எனக்கு ஆவலாக இருந்தது, வந்தேன் அற்புதமான நிகழ்ச்சி இது.
அவரைப் போல இசை மகான் இதுவரை திரையுலகில் நான் பார்த்ததில்லை. இனியும் பார்க்கப் போவதும் இல்லை.”
நிகழ்ச்சி மூலம் வசூலான மொத்த பணத்தையும், அதே மேடையில் எம்எஸ்வி குடும்பத்தினருக்கே கொடுத்து, வந்திருந்த அத்தனை பேரையும் நெகிழ வைத்தார், விமர்சனம் செய்தவர்களை நாணி தலைகுனிய வைத்தார் இசைஞானி!