Waiver = வாய்ப்பில்லராசா! Write-off = பிம்பிளிக்காபிளாபி!
வங்கிக் கடன் மோசடியாளா்களாக அறிவிக்கப்பட்ட விஜய் மல்லையா, மெஹுல் சோக்ஸி உள்ளிட்ட முன்னணி தொழிலதிபர்கள் தங்களது நிறுவனங்களின் மீது பெற்ற ரூ.68,607 கோடி மதிப்பிலான கடன்களின் கணக்குகள் நீக்கப்பட்டதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
கணக்கியல் ரீதியில் கடன்களை நீக்குவது என்பது ஒட்டுமொத்தமாகக் கடன்களைத் தள்ளுபடி செய்வது அல்ல. வரவு செலவு கணக்குகளைப் புதுப்பிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கையை வங்கிகள் மேற்கொள்கின்றன. அதே வேளையில் கடன் பெற்றவர்களிடமிருந்து அதைத் திரும்பப் பெறுவதற்கான சட்ட ரீதியான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும் என்று கூறப்படுகிறது.
இப்பிரச்சினையில் Waiver & Write-off எனும் இரு சொல்லாடல்கள் இணையத்தை ஆக்கிரமித்துள்ளன. Waiver என்பது தள்ளுபடி செய்தல்; Write off என்பது கணக்கிலிருந்தே தூக்கிவிடுதல்.
ஒருவர் பெற்ற கடன் வராக்கடனாகத் தொடர்ந்து இருக்க, அவர் திருப்பிச் செலுத்தவே இயலாதவர் என்ற நிலையில், வங்கிக் கணக்கிலிருந்தே அந்தத் தொகை நீக்கப்பட்டுவிடும். இதற்குப் பெயர் தான் Write-Off.
தற்போதைய இந்த ரூ.68,607 கோடி மதிப்பிலான கடன்களும் Write-Off தான் செய்யப்பட்டுள்ளது.
Write-off செய்யப்பட்ட கடன்காரரிடம் வங்கி முட்டி மோதாது. இனி, கடன்காரரிடம் கடனைத் திரும்பிப் பெறவே இயலாது என்ற நிலையில் அதை வசூலிக்கும் பொருட்டு NCLT (National Company Law Tribunal) என்ற தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயத்திற்கு அனுப்பப்படும்.
அதாவது ஒரு பெருநிறுவனம் வாங்கிய கடன் திரும்பச் செலுத்தப்படாமல் வாராக்கடனாக ஆகும் பட்சத்தில், அது NCLT (National Company Law Tribunal) என்ற தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயத்திற்கு அனுப்பப்படும்.
இந்த NCLT-யை வாராக்கடன்களை வசூலிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்பு என்று கூறிக்கொண்டாலும், உண்மையில் NCLT என்பது கார்ப்ரேட் நிறுவனம் வாராக்கடனில் சிக்கும்பொழுது அதை காப்பாற்றுவதற்காகவே ஏற்படுத்தப்பட்ட அமைப்பு முறைதான்.
NCLT முழுக்க முழுக்க பெருநிறுவன கொள்ளையர்களுக்குச் சாதகமானது என்பது ஏற்கனவே பலமுறை அம்பலமாகியுள்ளது.
பூஷன் ஸ்டீல்ஸ், அலோக் டெக்ஸ்டைல்ஸ் போன்ற பல நூறு நிறுவனங்களின் வாராக்கடன்கள் இந்த தீர்ப்பாயத்தால் மக்களுக்கு எதிராக பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாக முடித்துவைக்கப்பட்டிருக்கிறது.
எடுத்துக்காட்டாக,
அலோக் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம் வாங்கிய 30 ஆயிரம் கோடி ரூபாய் (30,000,00,00,000/-) கடன் திரும்ப செலுத்தாமல் வாராக்கடனாக மாறி NCLT தீர்ப்பாயத்திற்கு அனுப்பப்படுகிறது.
NCLT தீர்ப்பாயம் அந்த நிறுவனத்தை ஏலத்தில் விடுகிறது. ஏலத்தில் அதிகபட்சமாக ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ் நிறுவனம் ரூபாய் 4800 கோடிக்கு (4,800,00,00,000/-) அந்த நிறுவனத்தை வாங்க ஏலத்தில் போட்டியிடுகிறது.
ஆனால் கடனளித்த வங்கிகளின் கூட்டமைப்பிலிருந்த 70 சதவீதத்தினர் மட்டும் இதற்கு ஆதரவு அளித்ததால் ரிலையன்ஸ் நிறுவனத்தால் அந்த நிறுவனத்தை வாங்க இயலவில்லை.
ஏனெனில் NCLT தீர்ப்பாயத்தின் நெறிமுறைப்படி, குறைந்தபட்ச ஆதரவு என்பது 72% இருக்க வேண்டும்.
ஆனால், அதற்கடுத்த நாளே NCLT தீர்பாயத்தின் விதிமுறைகள் மாற்றப்பட்டு வெறும் 67% ஆதரவு போதும் என்று நிர்ணயிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து 70 சதவீத ஆதரவுடன் அலோக் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தை ரிலையன்ஸ் வாங்கியது.
நிறுவனக் கடன் = 30,000 கோடி
நிறுவன விற்பனை = 4,800 கோடி –
—————————
நட்டம் = 25,200 கோடி
—————————
இப்படியாக, மக்களின் பணம் (25,200 கோடி ரூபாய்) காந்தி கணக்கில் எழுதப்பட்டது.
தீர்ப்பாயங்களை அம்பலப்படுத்த இது போன்று ஆயிரம் கதைகள் இருக்கிறது.
மொத்தத்தில் Write-off என்பது நிறுவனமாக்கப்பட்ட கொள்ளை முறை, Systemized Robbery.
நன்றி : BBC, Ragul baskar (தரவுகள்) & Dreamstime (படம்)