காட்சி ஊடகத்துறையில் கருத்துச் சுதந்திரத்துக்கான அச்சுறுத்தல்!

அகில இந்திய திரைப்படத்துறை படைப்பாளிகள், கலைஞர்கள் மற்றும் அனைத்து ஊடக நண்பர்கள், பொதுமக்கள் அனைவருக்கும் வணக்கம்!

இந்தியச் சூழலில் காட்சி ஊடகத்தின் படைப்புச் சுதந்திரம் முற்றிலும் கேள்விக்குள்ளாகியிருக்கும் நிலையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து இதற்கு எதிரான ஒரு போராட்டத்தை முன்னெடுக்கும் சூழலில் இருக்கிறோம்.

Zee5 என்னும் ஓ.டி.டி. நிறுவனம் பெருமளவிலான வெப்சீரீஸ்களைக் கடந்த சில ஆண்டுகளாகத் தயாரித்து செயலித் தொடர்களாக ஒளிபரப்பி வருவது நாம் அனைவரும் அறிந்ததே.

இந்நிறுவனம் தமிழில் ’காட்மேன்’ என்னும் வெப்சீரீஸை திரு. இளங்கோ ரகுபதியின் ஃபெதர்ஸ் (Feathers) எண்டெர்டெய்ன்மெண்ட் மூலம் தயாரித்திருக்கிறது.

’ஜெயம் ரவி’ நடித்த ‘தாஸ்’, விஜய் ஆண்டனி நடித்த ’தமிழரசன்’ ஆகிய படங்களை இயக்கிய பாபு யோகேஸ்வரன் இத்தொடரை எழுதி இயக்கியிருக்கிறார். ஜூன்மாதம் 12-ஆம்தேதி Zee5 செயலியில் வெளியாகவிருந்த இத்தொடரின் டீஸர் கடந்த 26 / 5 /2020 அன்று யூ ட்யூபிலும் Zee5 நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சமூகவலைத்தளங்களிலும் வெளியானது.

பிறகு இத்தொடர் திரையாவதைத் தற்காலிகமாக நிறுத்திக்கொள்வதாக கடந்த ஜூன் 1- ஆம் தேதியன்று Zee5 நிறுவனம் அறிவித்திருக்கிறது.

இதன் பின்னணியில் பல அதிர்ச்சிகரமான – நமது கருத்துச் சுதந்திரத்தை முற்றிலுமாக சிதைத்திருக்கும் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்றிருக்கின்றன. அவற்றில் சில இங்கே:

சுமார் 380 நிமிடங்கள் கொண்ட இக்கதைத் தொடரின் முன்னோட்டமாக அமைந்த அந்த ஒரு நிமிட டீஸரில் இடம் பெற்றிருக்கும் சில வசனங்கள் தங்கள் சமூகத்தை அவமதிப்பதாகக்கூறி தமிழ்நாடு பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் ஒரு சில அதிதீவிர பிராமண சிந்தனையாளர்களால் தூண்டிவிடப்பட்டு இத்தொடரைத் தடைசெய்யக்கோரி தமிழகம் முழுவதும் வெவ்வேறு ஊர்களில் காவல் நிலையங்களில் குற்றப்பிரிவுகளின்கீழ் புகார் அளித்திருக்கிறார்கள். சென்னையிலும் அவ்வகையில் பல்வேறு தனிமனிதர்களாலும் பிராமண சங்கங்களாலும் குற்றவழக்குத் தொடரவேண்டும் எனப் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.

இத்தொடரின் தயாரிப்பாளர் திரு. இளங்கோ ரகுபதிக்கும், இயக்குனர் திரு. பாபு யோகேஸ்வரனுக்கும் தமிழகம் மட்டுமல்லாமல், உலக அளவில் விரவியிருக்கும் பிராமணர்கள் ஒரு அமைப்பாகத் திரண்டு தொலைபேசிமூலம் தொடர்புகொண்டு அச்சுறுத்தும் வகையில் கீழ்த்தரமான வார்த்தைகளால் வசைபாடியிருக்கிறார்கள். இந்தத் தொந்தரவு ஒரு திட்டமிட்ட நிகழ்வாக அடுத்த நான்கு ஐந்து தினங்களுக்கு இருபத்து நான்குமணிநேரமும் தொடர்ந்திருக்கிறது.

காட்மேன் தொடரின் தயாரிப்பாளரை ஒரு கிறிஸ்துவக்கைக்கூலி என்று சித்தரிக்கும் வேலையைச் செய்ததோடு, இத்தொடரின் தயாரிப்புக்குப் பின்னால் பெரும் மதக்கலவரத்தைத் தூண்டிவிடும் சதி இருப்பதாகவும் வதந்தியைப் பரப்பியிருக்கிறார்கள். கோயமுத்தூர் கோயிலில் பன்றிக்கறியை வீசி மதக்கலவரத்தைத் தூண்டமுயன்ற ஹரி என்னும் இந்து ஆசாமி இவர்தான் என்று இளங்கோவின் படத்தை சமூகவலைத்தளங்களில் பதிந்திருக்கிறார்கள்.

மேலும் சுப்ரமணியஸ்வாமி உள்ளிட்ட பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தங்களுக்கு இருக்கும் மத்திய அரசின் தொடர்பைப் பயன்படுத்தி Zee5 நிறுவன உரிமையாளர்களையும் அச்சுறுத்தி இத்தொடரை வரவிடாமல் செய்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் வெற்றிக்களிப்புடன் பதிவிட்டும் வருகிறார்கள்.

காட்மேன் தொடரைத் திரையிடுவதைத் தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக Zee5 அறிவித்த ஜூன் 1- ஆம் தேதியன்று சென்னை மாநகர மத்திய குற்றவியல் அலுவலகத்தின் சைபர் பிரிவில் உலக பிராமணர் சங்கத்தின் தலைவர் சிவநாராயணன் அய்யர் என்பவர் 30-05-2020 அன்று கொடுத்த புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு 153, 153(a), 153A(1)(b), 295A, 504, 505 (1)(b), 295A, 504, 505(1)(b), 505(2) IPC ஆகிய பிரிவுகளின்கீழ் தயாரிப்பாளர் இளங்கோ ரகுபதி மற்றும் இயக்குனர் பாபு யோகேஸ்வரன் மீது கிரிமினல் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.

குறிப்பிட்ட அந்த டீஸரின் இடம்பெற்றிருந்த வசனங்களின் உண்மைத்தன்மை என்ன, ஒட்டுமொத்த வெப்சீரீஸின் கதை என்ன, கதாபாத்திரங்களின் தன்மை என்ன என்பது பற்றியெல்லாம் எந்த புரிதலும் இல்லாத நிலையில் இப்படி ஒரு வெப்சீரீஸ்- பிராமண சமூகத்துக்கும் இந்து மதத்துக்கும் எதிரானது என்னும் கருத்தை உருவாக்கி, அந்த படைப்பையே தடைகோரும் ஃபாஸிஸ நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் இத்தகைய பிராமண சங்கங்கள் மற்றும் செல்வாக்கு மிக்க தனிநபர்களுக்கு எதிராக ஒட்டுமொத்த ஊடக உலகமும் திரளவேண்டிய ஒரு அபாயகரமான சூழல் இப்போது உருவாகியிருக்கிறது.

இவர்களின் இந்த பயங்கரவாத நடவடிக்கை, இந்திய அரசியலமைப்புச் சட்டம் 19-1-A (1949) நமக்கு அளித்திருக்கும் கருத்துச் சுதந்திர உரிமையை முற்றிலுமாகப் பறிக்கிறது. இவர்களின் இந்நடவடிக்கை அனுமதிக்கப்பட்டு இந்த ‘காட்மேன்’ வெப்சீரீஸ் ஒருவேளை முற்றிலுமாகத் தடைசெய்யப்படுமேயானால், நம் படைப்புச் சுதந்திரமே கேள்விக்குறியாகி, எதிர்காலத்தில் இப்படி யார் வேண்டுமானாலும் தலையிட்டு எந்தப் படைப்பையும் திரைக்கு வரும்முன் தடுத்து நிறுத்திவிடலாம் என்னும் நிலை ஏற்படும்.

இதைத் தடுக்கும் விதமாகவும், ’காட்மேன்’ வெப்சீரீஸ் Zee5 செயலியில் வெளியாவதற்கு உறுதுணையாகவும், இந்தியாவில் ஜனநாயகச் சூழலைத் தொடர்ந்து நிலைநிறுத்தும் முயற்சியாகவும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த எதிர்ப்பாளர்களின் சதியையும் மூர்க்கத்தையும் தடுத்து நிறுத்தவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

அவ்வகையில் இந்தக்கோரிக்கை விண்ணப்பத்தையே ஒரு கையெழுத்து இயக்கமாக மாற்றி, இந்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்துக்கும் பிரதமரின் அலுவலகத்துக்கும் தமிழக முதலமைச்சரின் கவனத்துக்கும் கொண்டு செல்வோம்.

இதன்மூலம் Zee5 நிறுவனம் காட்மேன் வெப்சீரீஸை எவ்வித அச்சுறுத்தலும் இல்லாமல் வெளியிடுவதற்கு வலுசேர்ப்போம்…

இந்திய சினிமா மற்றும் ஊடக சுதந்திரத்தைக் காப்போம்…

நன்றி

காட்மேன் வெப்சீரீஸ் படைப்புக் குழு

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.