உலகமே கொரோனாவில் முடங்கி தவித்து வரும் வேளையில் தனது தொழில்களை எல்லாம் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு அம்பானி விற்று வருவதையும், பேஸ்புக்குடன் கூட்டு ஒப்பந்தம் போடுவதையும், அதன் பின்னே இந்தியாவே ஆன்லைனில் விற்கப்படும் வியாபார வெறியும் உள்ளது என்பதை இக்கட்டுரை விளக்குகிறது.
இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள முகேஷ் அம்பானி, உலக பணக்காரர்கள் பட்டியலில் 6 ஆயிரம் கோடி டாலர்(இந்திய ரூபாய் மதிப்பில் 4.20 லட்சம் கோடிகள்) சொத்துக்களுடன் 9வது இடம்பிடித்துள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் தரவரிசைப் பட்டியலில் இந்த தகவல் வெளியானது.
கடந்த 6 ஆண்டுகளில் ரிலையன்ஸ் ஜியோ, ரிலையன்ஸ் ட்ரண்ட்ஸ், ரிலையன்ஸ் ஃப்ரஷ், ரிலையன்ஸ் ஃபைபர், ரிலையன்ஸ் பெட்ரோல், ரிலையன்ஸ் ரீட்டைல், ரிலையன்ஸ் எண்டர்டைன்மண்ட் என்று அனைத்து துறைகளிலும் சர்வ வல்லமை பொருந்தியவராக, இந்திய சந்தையை ஆக்கிரமித்திருக்கிறார் மோடியின் நண்பரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவருமான முகேஷ் அம்பானி.
ரிலையன்ஸின் கடன் மதிப்பு:
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், 5.4 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு பல வியாபாரங்களில் முதலீடு செய்துள்ளது. அதிலும் குறிப்பாக 3.5 லட்சம் கோடி ரூபாயை ரிலையன்ஸ் ஜியோவில் மட்டும் முதலீடு செய்தார்கள். மார்ச் 2020 கணக்குப் படி, ரிலையன்ஸின் மொத்த கடன் 3.36 லட்சம் கோடி ரூபாய். ரிலையன்ஸ் கையில் இருக்கும் பணம் 1.75 லட்சம் கோடி ரூபாய் போக, அந்நிறுவனத்தின் நிகர கடன் 1.61 லட்சம் கோடி ரூபாய்.
அம்பானியின் சபதம்:
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 42வது பொதுக்குழு மும்பையில் நடைபெற்றது. அப்போதே, அதாவது ஓராண்டுக்கு முன்னரே தனது நிறுவனத்தின் கடன் மதிப்பு உயருவதை அறிந்த முகேஷ் அம்பானி, அடுத்த 18 மாதங்களுக்குள் கடன் இல்லாத நிறுவனமாக ரிலையன்ஸ் மாற்றப்படும் என்றார்.இதையடுத்து, முதலீடுகளைத் திரட்ட ஆரம்பித்தார் முகேஷ் அம்பானி.
ஃபேஸ்புக்கை தொடர்ந்து அம்பானிக்கு குவியும் முதலீடுகள்:
அதனடிப்படையில், முதலில் கடந்த ஏப்ரல் 22ம் தேதியன்று பேஸ்புக் நிறுவனம் ஜியோவின் 9.99 சதவீத பங்குகளை ரூ.43,574 கோடிக்கு வாங்கியது. அதனை தொடர்ந்து, மே 3ம் தேதி சில்வர் லேக் நிறுவனம் ரூ.5,656 கோடிக்கு 1.15 சதவீத பங்குகளையும், மே 8ம் தேதி தனியார் முதலீட்டு நிறுவனமான விஸ்தா ரூ.11,367 கோடிக்கு 2.32 சதவீத பங்குகளையும், மே 17ம் தேதி ஜெனரல் அட்லாண்டிக் ரூ.6,598 கோடிக்கு 1.34 சதவீத பங்குகளையும், மே 22 கே.கே.ஆர். நிறுவனம் ரூ.11,367 கோடிக்கு 2.32 சதவீத பங்குகளையும் ஜியோவில் முதலீடு செய்தன.
இந்த சூழ்நிலையில், ஜூன் 5ம் தேதி தனியார் முதலீட்டு நிறுவனமான சில்வர் லேக் ஜியோவில் மேலும் ரூ.4,546.80 கோடிக்கு பங்குகளை வாங்கியுள்ளது. இதனையடுத்து சில்வர் லேக் நிறுவனம் ஜியோவில் பங்கு மூலதனத்தை 2.08 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதேபோல், ஜூன் 5ம் தேதி அபுதாபியை சேர்ந்த முபதாலா முதலீட்டு நிறுவனம் ஜியோவின் 1.85 சதவீத பங்குகளை ரூ.4,547 கோடிக்கு வாங்கியது.
இதையடுத்து, ஜூன் 7ம் தேதி அபுதாபி இன்வஸ்ட்மெண்ட் அத்தாரிட்டி நிறுவனம் ரூ.5,683.5 கோடி ரூபாய்க்கு ஜியோவின் 1.16 சதவீத பங்குகளை வாங்கியுள்ளது. கொரோனா காலத்தில் எல்லா நிறுவனங்களும் லாபமின்றி தவித்து வரும் நிலையில், முகேஷ் அம்பானிக்கு மட்டும் 97,885.5 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகள் குவிந்துள்ளது. முகேஷ் அம்பானி அறிவித்தபடி, 2021 மார்ச்சுக்குள் ரிலையன்ஸ் இண்டஸ்ரிஸை கடன் இல்லாத நிறுவனமாக மாற்றும் இலக்கை அடைந்துவிடுவார் என்றே தெரிகிறது.
இந்தியா தற்போதுள்ள நிலையில் முதலீடு செய்து லாபம் பார்க்க முடியுமா..?
ஒரு முதலீட்டாளர் தனது பணத்தை இன்னொரு நிறுவனத்தில் முதலீடு செய்கிறார் என்றால், அந்த முதலீடு பல்கிப்பெருகி தனக்கு லாபத்தைத்தரும் என்ற நம்பிக்கையில்தான். கடந்த ஓராண்டுக்கு மேலாக 5 ரூபாய் பிஸ்கட் விற்கவில்லை என்று கார்ப்பரேட் நிறுவன முதலாளிகளே கதறிக்கொண்டிருக்கின்றனர்.
கடந்த மாதத்தில் இந்தியாவின் முன்னணி கார் நிறுவனமான மாருதியில் ஒரு கார்கூட விற்பனையாகாதது மட்டுமில்லாமல், அனைத்து கார் உற்பத்தி நிறுவனங்களுமே கடுமையான விற்பனை வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
மற்றொருபுறம், 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையில்லா திண்டாட்டம், ஆட்டொமொபைல்ஸ் துறையில் 3.5 லட்சம் பேர் வேலை இழந்தனர் என்பது கொரோனாவுக்கு முந்தைய பொருளாதார நிலைமை. ஆனால், கொரோனா ஊரடங்கு காலத்தில் அனைத்து நிறுவனங்களுமே கொத்துக்கொத்தாக ஊழியர்களை வேலை நீக்கம் செய்துள்ளது.
இப்படி, இந்தியாவின் பெரும்பான்மையான ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் உணவு, உடை உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்குக்கூட பார்த்து பார்த்து செலவு செய்து கொண்டிருக்கின்றனர்.
பொருட்களை வாங்குவதற்கு மக்களிடம் காசு இல்லாத இந்த சூழலில், எந்த முதலாளியும் தனது மூலதனத்தை புதிய தொழில் தொடங்கவோ, அல்லது ஏற்கனவே உள்ள நிறுவனத்தில் முதலீடு செய்யவோ தயாராக இல்லை. ஆனால், முகேஷ் அம்பானியின் ஜியோவை நம்பி எப்படி இவ்வளவு பேர் கிட்டதட்ட 97,885 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு செய்துள்ளனர் என்பது வியப்பான ஒன்று. இதன்மூலம் முகேஷ் அம்பானி ஒரு மேஜிக் மேனாக இந்திய முதலாளிகள் மட்டத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
எந்த அடிப்படையில் ஜியோவுக்கு முதலீடுகள் குவிகின்றது..?
இந்த கேள்விக்கான விடையை தெரிந்து கொள்வதற்கு முன்னதாக, மோடி அரசு கடந்த 5 ஆண்டுகால ஆட்சியின்போது செய்த சில பொருளாதார நடவடிக்கைகளை நாம் விவாதிக்க வேண்டியுள்ளது. இந்திய பொருளாதாரம் என்பது வங்கி பொருளாதாரமாக இல்லாமல் இருந்தது, அதாவது பெரும்பான்மையான மக்கள் சேமிப்புகளை தங்கள் கையிருப்பாகவும், வணிக நடவடிக்கைகளுக்கு பணத்தை நேரடியாக கொடுத்து பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தனர்.
பணமதிப்பிழப்பு ஏன்..?
இதனை ஒழித்துக் கட்ட நினைத்த மோடி அரசு, 2016 நவம்பர் 8ம் தேதியன்று நாளை முதல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது, அதை வங்கிகளில் கொண்டுவந்து மாற்றிக்கொள்ளுங்கள். இது கருப்பு பணத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கை என்றது. இந்த அறிவிப்பின் மூலம் ஒரு சதவீதம் அளவிற்குகூட கருப்பு பணத்தை ஒழிக்க முடியவில்லை என்பதை பின்னாளில் வந்த ரிசர்வ் வங்கியின் அறிக்கை கூறியது.
இந்த பணமதிப்பிழப்பு அறிவிப்பின் முக்கிய நோக்கமே மக்கள் கையில் சுழலும் பணத்தை டிஜிட்டல் பணமாக, அதாவது வங்கிப் பொருளாதாரத்திற்க்குள் கொண்டு வருவதான் முதல் நோக்கம். அவ்வாறு, டிஜிட்டல் பொருளாதாரத்திற்குள் மக்கள் வந்துவிட்டால் லிக்வுட் கேஷ் எனப்படும், பணம் என்பது கையில் இல்லாமல், ஆன்லைனில் வங்கியில் இருக்கும்.
அவ்வாறு, பெரும்பான்மையான மக்களின் பணம் டிஜிட்டல் பணமாக வங்கியில் இருக்கும்போது முதலாளிகளுக்கு கடன்களை வாரி வழங்குவது மிகவும் சுலபம். வேண்டியபோது, ஊரான் வீட்டு நெய்யே, பொண்டாட்டி கையே என்று அள்ளிக்கொடுக்கலாம் என்பதுதான் இதன் முக்கிய நோக்கம்.
அந்த நோக்கத்தில் பாஜக அரசு, குறிப்பிடத்தகுந்த அளவிற்கு தற்போது வெற்றிபெற்றுள்ளது என்று சொல்லலாம், ஏனென்றால் கூகுள் பே, போன் பே, பேடிஎம் போன்ற ஆப்புகள் மூலமாகத்தான் மக்கள் தற்போது பரிவர்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர். சமூக இடைவெளியை கடைபிடிக்கும் இந்த கொரோனா காலத்தில் டிஜிட்டல் பரிவர்த்தனை என்பது அதிகரித்துள்ளது.
ஜி.எஸ்.டி எதற்கு..?
அடுத்ததாக, மோடி ஜி.எஸ்.டியை கொண்டு வந்தார். ஒரே நாடு ஒரே வரி என்ற கவர்ச்சியான முழக்கத்தை முன்வைத்து கொண்டுவரப்பட்ட திட்டமானது, சிறுவணிகத்தை அழித்து பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சந்தையை சமதளப்படுத்துவதாக இருந்தது. ஜி.எஸ்.டி வந்த பிறகு குடிசை தொழில் முதல் சிறு, குறு தொழில் செய்யும் 50 ஆயிரம் நிறுவனங்கள் தமிழக்கத்தில் மூடப்பட்டதாக சட்டமன்றத்தில் தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் அறிக்கை தாக்கல் செய்தார். (இந்த எண்ணிக்கை இந்தியா முழுவதிலும் பல லட்சத்தைத் தாண்டியது)
முதல் கட்டமாக வங்கியைச் சார்ந்த டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மக்களை கொண்டுவர பணமதிப்பிழப்பு நடவடிக்கை. அடுத்து, சிறு குறு தொழில் செய்யும் நிறுவனங்களை ஒழித்து, கார்ப்பரேட் கம்பெனிகளின் ஆதிகத்தை அனைத்து வகையான வணிகத்திலும் நிலைநிறுத்தியது ஜி.எஸ்.டி. இந்த பின்னணியில் இருந்து ஜியோவுக்கான முதலீடுகள் குவிவதை நாம் பார்க்க வேண்டும்.
ஃபேஸ்புக் நிறுவனம் ஜியோவை தேர்ந்தெடுத்தது ஏன்..?
சினிமா டிக்கெட்டுகள் முதல் கல்விக்கட்டணம் செலுத்துவது வரை அனைத்தும் மோடி அரசின் பொருளாதார நடவடிக்கைகளுக்குபின் டிஜிட்டல் பரிவர்த்தனையாக மாறியதை தொடர்ந்து, போன் பே, கூகுள் பே, பேடிஎம், பீம் உள்ளிட்ட ஆப்கள் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தன.
இதையெல்லாம் கவனித்து வந்த ஃபேஸ்புக் நிறுவனத்தினர் உலகின் இரண்டாவது பெரிய மக்கள் தொகையையும், மிகப்பெரிய சந்தையையும் கொண்ட நாடான இந்தியாவில் தாங்களும் டிஜிட்டல் பரிவர்த்தனையில் கால்பதிக்க விரும்பினர். அதன்படி, ஃபேஸ்புக்கின் துணை நிறுவனமான வாட்ஸ்-அப் மூலம் பணப்பரிவர்த்தனை செய்வதற்கான அனுமதியை மத்திய அரசிடம் அந்நிறுவனம் பெற்றது.
இது ஒருபுறமிருக்க, கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்களிடையே டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அதிகளவில் நடைபெற்று வருகிறது. இந்த சந்தர்ப்பத்தை தவறவிடக்கூடாது என்று நினைத்த ஃபேஸ்புக் நிறுவனம், இந்தியாவிலேயே அதிகமாக 37 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்ட ஜியோவுடன் கைகோர்க்க திட்டமிட்டது.
ஏற்கனவே, இலவச டேட்டாக்க்கள், அழைப்புகள் மூலம் இந்திய தொலைத்தொடர்பு சந்தையை கைப்ப்பற்றி வைத்துள்ள ஜியோவுடன் இணைந்து, நாட்டின் ஒட்டுமொத்த டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையையும் தங்கள் வசமாக்க திட்டமிட்டுள்ளனர் முகேஷ் அம்பானியும் மார்க் ஸக்கர்பெர்க்கரும். ஜியோவின் வாடிக்கையாளர்கள்தான் ஃபேஸ்புக் முகேஷ் அம்பானியின் நிறுவனத்தில் முதலீடு செய்ய முக்கிய காரணம்.
அமேசான் – ஃபிளிப்கார்ட் Vs ஜியோ மார்ட்..!
ஜிஎஸ்டியால் சிறுவணிகத்தின் வீழ்ச்சியை தொடர்ந்து, இந்தியாவின் ஆன்லைன் வர்த்தகத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த அமேசான் நிறுவனமும், மற்றொரு அமெரிக்க நிறுவனமான ஃபிளிப்கார்ட் நிறுவனமும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. தற்போது இவை இரண்டுக்கும் போட்டியாக ஜியோ மார்ட் களமிறங்கியுள்ளது.
டிஜிட்டல் பரிவர்த்தனை மட்டுமின்றி, ஆன்லைன் மூலம் அத்தியாவசிய உணவுப்பொருட்களையும் வீட்டு உபயோகப்பொருட்களையும் விற்பனை செய்வதற்கு முகேஷும், மார்க்கும் திட்டமிட்டுள்ளனர். இதற்காக ஜியோ மார்ட் என்ற ஆப்பையும் உருவாக்கியுள்ளனர்.
இந்தியாவில் ஃபேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்-அப் ஆப்பை 40 கோடி பேரும், ஜியோ நெட்வொர்க்கை 37 கோடி பேரும் பயன்படுத்துவதால் இவர்களது கூட்டணி என்பது எளிதாக, இந்தியாவின் ஆன்லைன் வர்த்தகத்தை கைப்பற்றிவிட அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
இந்தியாவின் ஆன்லைன் மார்க்கெட்டை ஜியோ கைப்பற்றிவிடும் என்ற நம்பிக்கையில்தான், 7 வாரங்களுக்குள் 97,885.65 கோடி ரூபாய் முதலீடுகளாக குவிந்துள்ளன. இப்படி, இந்தியாவின் சந்தையை விழுங்க துடிக்கும் கார்ப்பரேட்டுகளின் போட்டிக்காக, பல லட்சக்கணக்கான சிறு வணிகர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்ததுதான் மிச்சம். கார்ப்பரேட்டுகளுக்குத்தான் லாபம்.
நன்றி : zhagaram.tv
எனவே, இத்தகைய கார்ப்பரேட்டுக்களின் முகத்தில் கரியைப் பூச சிறு குறு தொழில்களை ஊக்குவியுங்கள். ஆன்லைன் வர்த்தகத்தை நிராகரியுங்கள். பேடிஎம், ஜிபே போன்ற ஆன்லைன் டிஜிட்டல் வழி பணப்பரிமாற்றத்தை புறக்கணித்து கரன்சி நோட்டுக்களின் மூலமாகவே சிறு, குறு வணிகர்களிடம் பணப்பரிவர்த்தனை செய்யுங்கள்.