திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் வட்டத்தில் உள்ள சௌந்திரபாண்டியபுரம் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் கல்யாணி. மாணவப் பருவத்திலிருந்தே திராவிட இயக்கத்தில் ஈடுபாடுகொண்டிருந்தவர். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் 1965 இல் படித்த காலத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்றவர். முதுகலை பட்டப் படிப்பு முடித்த பிறகு விழுப்புரத்திலும், பிறகு திண்டிவனம் அரசுக் கல்லூரியிலும் பேராசிரியராகப் பணியாற்றியவர்.
இவர் கல்லூரி ஆசிரியர் பணிக்கு வந்தபிறகு மார்க்சிய இயக்கங்களில் ஈடுபாடுகொண்டார். 1993 இல் அத்தியூர் விஜயா என்கிற இருளர் இனப் பெண்ணைக் காவல்துறையினர் பாலியல் வன்முறை செய்தனர். இந்த வழக்கை கல்யாணி முன்னெடுத்து நடத்தினார். அப்போதிருந்து இருளர் பழங்குடிகளுக்குத் துணையாக தொடர்ந்து செயல்பட்டுவருகிறார்.1996 இல் உருவாக்கப்பட்ட பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தின் தலைமையேற்று இன்றளவும் போராடி வருகிறார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனால் முன்னெடுக்கப்பட்ட வடமொழிப் பெயர்களை விடுத்து தமிழ்ப் பெயர்களை சூட்டிக்கொள்ளும் இயக்கத்தின்போது, கல்யாணி என்ற தன் பெயரை கல்விமணி என மாற்றிக்கொண்டார்.
தமிழ்வழிக் கல்விக்காக திண்டிவனம் உரோசனையில் 2000 ஆம் ஆண்டு தாய்த் தமிழ்ப் பள்ளியைத் தொடங்கினார். 21 பிள்ளைகள், ஒரு ஆசிரியர், ஒரு தாயம்மாளுடன் தொடங்கப்பட்ட இப்பள்ளியில் இப்போது முன்னூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கின்றனர். அரசின் நிதி உதவி எதுவுமில்லாத நிலையிலும் கல்வி, மதிய உணவு, சீருடை உள்ளிட்ட அனைத்தும் இப்பள்ளியில் இலவசமாக அளிக்கப்படுகின்றன.
நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளையுடன் இணைந்து பணியாற்றிவருகிறார். பழங்குடி இருளர் மக்களுக்கான இவருடைய தொடர் போராட்டத்தின் ஒரு துளிதான் ஜெய்பீம் திரைப்படமாக வந்திருக்கிறது.
இந்தப்படத்தில், இருளர் இனமக்களோடு தோளில் ஒரு ஜோல்னாபையைப் போட்டுக் கொண்டு வருவார் காளீஸ்வரன். அவர்தான் நிஜத்தில் பிரபா கல்விமணி.
இதுவரை எழுத்துகளிலும் செய்தி ஊடகங்களின் காட்சிகளில் சில நொடிகள் வந்துபோய்க்கொண்டிருக்கும் ஒரு பேரவலத்தைக் கலைவடிவத்தில் காலத்தால் அழிக்கவியலாக் கல்வெட்டாக்கியிருக்கிறது ஜெய்பீம் படக்குழு.
இருளர் குடிமக்களாக திரையில் வாழ்ந்திருக்கின்றனர் மணிகண்டன், லிஜோமோல்ஜோஸ்,சின்ராசு,ராஜேந்திரன் உள்ளிட்டோர். ஒரு மலையாள இளம்பெண்ணான லிஜோமோல்ஜோஸ் இருளர் குடிப்பெண்ணின் உடல்மொழியையெல்லாம் கனகச்சிதமாக வெளிப்படுத்தியிருப்பதெல்லாம் வியப்பிலும் வியப்பு.
வெளியில் பார்த்தவுடன் அடிக்கவேண்டும் என வெறிகொள்ள வைத்துவிடும் நடிப்பைக் கொடுத்திருக்கிறார் உதவி ஆய்வாளராக நடித்திருக்கும் தமிழ். தலைமைக்காவலர் சூப்பர்குட்சுப்பிரமணியும் சூப்பர். மக்களை வாக்குகளாக மட்டுமே பார்க்கிற அரசியல்வாதிகளின் பிரதிநிதியாக வருகிறார் இளவரசு.வசன உச்சரிப்பின் ஏற்ற இறக்கத்திலேயே நெஞ்சில் கத்தியைச் செருகுகிறார்.காவல்துறை அதிகாரிகளாக வருகிற பிரகாஷ்ராஜ், ஜெயப்பிரகாஷ் ஆகியோர் ஒட்டுமொத்த காவல்துறையின் அழகை! படம்பிடித்துக்காட்டும் வார்ப்புகள்.
மக்கள் கொடூரமாகப் பாதிக்கப்படும் இடங்களிலெல்லாம் ஏதாவதொரு இறைதூதர் வருவார் என்பது போல் படத்தில் வந்து பாராட்டுப் பெறுகிறார் ரஜிஷாவிஜயன்.அரசு வழக்கறிஞர்களாக வருகிற குரு.சோமசுந்தரம், ராவ் ரமேஷ் ஆகியோர் நியாயமெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும் காவல்துறை ஒருவரைக் குற்றவாளி என்று சொன்னால் அதை நிரூபிக்கப்பாடுபடுவதும் ஒருவரைக் கொடூரமாகச் சித்திரவதை செய்து கொன்றாலும் அதை மறைத்து அவர்களைக் காப்பாற்றி அரசாங்கத்துக்குக் கெட்டபெயர் வராமல் பார்த்துக் கொள்ளும் கங்காணி வேலையைச் சரியாகச் செய்கிறார்கள்.
கே.கதிரின் கலைவடிவமைப்பில் இதுவரை வெகுமக்கள் கண்டிராத இருளர் குடிசைகள் வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றன.
ஷான்ரோல்டனின் இசையில் பாடல்கள் தலைகோதுகின்றன.பின்னணி இசை பதறவைக்கிறது. ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிர், வெறுமனே ஒரு திரைப்படமாக இருந்துவிடக்கூடியதைக் காவியமாக்கியிருக்கிறார். பத்துப்பக்கங்களில் எழுத வேண்டிய உணர்வுகளையெல்லாம் பத்துநொடிகளில் காட்சியாக்கிக் கண்ணீர் மல்க வைத்திருக்கிறார்.
எழுதி இயக்கியிருக்கிறார் த.செ.ஞானவேல். புகழ்பெற்ற இயக்குநர்கள் எல்லாம் ஹாலிவுட், ஈரான், ப்ரெஞ்சு, ஜப்பான் மொழிப்படங்களில் கதை தேடிக் கொண்டிருக்க சென்னைக்கு மிக அருகில் செஞ்சிக்குப் போய் ஒரு பெரும் புதையலைக் கொண்டு வந்து படையலிட்டிருக்கிறார். அவருடைய சிந்தனைக்கும் செயலுக்கும் வந்தனங்கள்.
இப்படத்தைத் தயாரித்ததற்காகவும் இதில் வழக்கறிஞர் சந்துரு வேடமேற்றதற்காகவும் வரலாறு தன் பக்கங்களில் அவர் பெயரை அழுத்தமாகப் பதிவு செய்துகொண்டுவிட்டது. நூறுபேரை அடித்துத் துவைப்பதல்ல கதாநாயகத்தனம். கூர்மையான சொற்களால் அதிகார இரும்புக்கோட்டைகளைத் தகர்க்கிறாரே அதுதான் ஹீரோயிசம். அவர் உதடுகளைவிட கண்கள் அதிகம் பேசியிருக்கின்றன.
நூறுகோடி க்ளப்களெல்லாம் நூறு நாட்கள் கூடத்தாங்காது.சூர்யாவின் இந்தப்பதிவு நூறாண்டுகள் கடந்தும் நீடிக்கும். வாழ்த்துகள்..
நன்றி: சினிமாவலை.காம்