இசை – ஹாரிஸ் ஜெயராஜ். இயக்கம் – ஏ.ஆர்.முருகதாஸ்.
ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் முருகதாஸ் விஜய் கூட்டணிப் படம். 7 ஆம் அறிவுக்கு அடுத்து தொடர்கிறது. துப்பாக்கி மசாலாப் படம் என்பதைக் காட்ட எல்லா டைப் பாடல்களும் படத்தில் உண்டு. ஹாரிஸ் ஜெயராஜின் வழக்கமான இசையில் வரும் வழக்கமான பாடல்கள்.
புதிதாக ஏதுமில்லை. ஆனாலும் கேட்கும் படி இருப்பது பெரிய விஷயமே.
1.குட்டி புலி கூட்டம் – ஹரிஹரன், திப்பு, நாராயணா, சத்யன், ரனினா. பாடல் – விவேகா
பாடகர்களின் எண்ணிக்கையை வைத்தே சொல்லிவிடலாம் இது ஹீரோ-திருவிழா-டான்ஸ் வகைப் பாட்டு என்று சொல்லி விடலாம் போல. டமக்கு டமக்கு ஹம்மா என்கிற அயன் பாடலை ஞாபகப்படுத்துகிறது. சாலா.. வாலா.. என்று ஹிந்தி வரிகளில் ஆரம்பித்துச் செல்கிறது. ஹிட்டாகும் படியான டப்பாங்குத்து டைப்.
2. அன்டார்டிகா – விஜய் ப்ரகாஷ், க்ரிஷ், ராஜீவ்,தேவன். பாடல் – மதன் கார்க்கி
கேட்க இனிமையான வெஸ்டர்ன். நடுவில் பேசுவது போல் வரும் பாடல். எலெக்ட்ரிக் கிடார் வரும் பகுதி நன்றாயிருக்கிறது. விஜய் ப்ரகாஷ் ஸ்டைலாக பாடியிருக்கிறார். மதன் கார்க்கியின் வரிகள் நன்று. ஹிட் லிஸ்டில் சேரும்.
3.போய் வரவா – கார்த்திக், சின்மயி. பாடல் – பா.விஜய்
மெல்லிய கிடாரில் கார்த்திக் பாட ஆரம்பிக்கும் பாடல். பிற்பகுதியில் சேரும் இசைக் கோர்வை பாடலை அழகுபடுத்துகிறது. சின்மயி நடுநடுவில் ஹம்மிங் மட்டும் கொடுக்கிறார். பா.விஜயின் பாடல் வரிகள் ராணுவத்தில் சேரும் ராணுவ வீரனின்(விஜய்யோ) பெருமையான ராணுவக் கனவுகளை பற்றி அபத்தமாகப் பேச ஆரம்பிக்கும் கணங்கள் தவிர மற்ற இடங்களில் நன்று. ஹிட் ரகம்.
4.கூகுள் கூகுள் – விஜய், ஆண்ட்ரியா, ஜோ, கிருஷ்ணா ஐயர். பாடல் – கார்க்கி
ஏதோ ஹிப் ஹாப் பாடலை அப்படியே நடிகர் விஜய்யும், நடிகை ஆண்ட்ரியாவும் உல்டா அடித்துப் பாடிய மாதிரியே தெரிகிறது. ஆனால் பாட்டு ரசிக்கக்கூடிய ரகம் தான். கார்க்கியின் வரிகளில் கூகுள், யாஹூ, பேஸ்புக் என்று இன்டர்நெட் சமாச்சாரங்களை அவிழ்த்துவிடுகிறார். தேறிவிடும்.
5. வெண்ணிலவே – ஹரிஹரன், பாம்பே ஜெயஸ்ரீ. பாடல்-நா. முத்துக்குமார்.
வட இந்தியர்கள் பாடும் திருமண வாழ்த்துப் பாடல் மாதிரி ஆரம்பிக்கும் மெலடி. பாம்பே ஜெயஸ்ரீயின் குரலில் மெருகேறுகிறது. ஹிட் ரகம்.
6. அலைக்கா லைக்கா – ஜாவேத் அலி, சயனோரா பிலிப், ஷர்மிளா. பாடல் – பா.விஜய்
ஜேம்ஸ் பாண்ட் பாடல்கள் போல் தோற்றம் தரும் பாடல். வேகமான பாடல் வகையில் ஹிட்டாகும்..
7. தீம் மியூசிக்
ஜேம்ஸ் பாண்ட் ஸ்டைலில் விஜய்யை பார்ப்பது போன்ற இசை. படத்தின் அத்தனை பாடல்களின் இசையையும் கலந்தது போல இருக்கிறது.
மொத்தத்தில் துப்பாக்கியின் ஏழு குண்டுகளில் ஐந்து குண்டுகள் ஏமாற்றாமல் வெடித்துவிடும். கேட்டுப் பாருங்கள்.
–மருதுபாண்டி.