‘காதல்’க்குப் பிறகு தனது நிறுவனம் தயாரித்த ஒரு படமும் உருப்படியாய் ஓடாதது கண்டு, படத்தயாரிப்பிலிருந்து ஓட்டமெடுத்தார் இயக்குனர் ஷங்கர்.
அதிலும் கடைசி இரண்டு படங்களான ‘ஈரம்’ ரெட்டைச்சுழி’ ஆகியவை தன்னை ஓவராகப்பழி வாங்கியது கண்டு, தயாரிப்புக்கும் தனக்கும் ஏழாம் பொருத்தம் என்றே முடிவெடுத்துவிட்டார்.
தனது அலுவலகம் பக்கம் சென்றாலே, யாராவது கதை சொல்லி தன்னை ‘கவுத்தி’ விடுவார்கள் என்று பயந்து அங்கும் செல்லாதிருந்த ஷங்கரை, மீண்டும் படம் தயாரிக்கும் மூடுக்கு கொண்டுவந்திருப்பவர் பத்திரிகையாளர் ராஜூ முருகன். விகடன் நிறுவனத்தில் பணியாற்றிய இந்த ராஜூ முருகன், சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, நிக் ஆர்ட்ஸில், தயாரிப்பாளர் சக்ரவர்த்தியின் மகன் ஜானியை வைத்து சந்திரபாபு’ என்ற படத்தை துவக்கி ஒரு பத்து நாட்கள் ஷூட்டிங்கும் போனார். என்ன காரணத்தாலோ, பெயருக்கான மரியாதையுடன் அந்தப்படம் அப்படியே ‘அடக்கம்’ செய்யப்பட்டுவிட்டது.
இந்நிலையில், ராஜூ முருகனின் முந்தைய படம் கிடப்பில் போடப்பட்டதற்கான காரணம் குறித்து, எந்த ஒரு விசாரணையையும் மேற்கொள்ளாமல், கதையைக் கேட்ட உடனே, நீங்க நடிகர்களை தேர்வு பண்ணி ஷூட்டிங் போறதுக்கான வேலையை மட்டும் பாருங்க’ என்று அனுப்பி வைத்தாராம் ஷங்கர். முற்றிலும் புதுமுகங்களே நடிக்கவிருக்கும் ராஜு முருகன் படத்தின் பட்ஜெட் 90 லட்சம் மட்டுமே.
பின் குறிப்பு: கடந்த வாரம் ஒரு புதிய ரோல்ஸ்ராய்ஸ்’ மாடல் கார் ஒன்று வாங்கியிருக்கிறாராம் ஷங்கர். சினிமாக்காரர்களில் இந்த மாடல் கார் வைத்திருப்பவர்களில் ஷங்கர் மூன்றாவது நபர் என்ற பெருமையை ஷங்கர் அடைகிறார். இதற்கு முந்தைய இரண்டு பேர்கள் தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம், நடிகை ராதிகா. காரின் விலைவெறும் 5 கோடியே சொச்சம்.