‘சதுரங்க வேட்டை’,’தீரன் அதிகாரம் ஒன்று’,’நேர்கொண்ட பார்வை’ ஆகிய மூன்று சமர்த்தான படங்களைக் கொடுத்த இயக்குநர் ஹெச்.வினோத்தின் நான்காவது படம் இந்த ’வலிமை’. முந்தைய படங்களில் ஒரு இயக்குநராக வலிமையாக வலம் வந்த வினோத் இம்முறை முழுமையான மசாலா மன்னனாக மாறி அஜித் ரசிகர்களுக்கு விருந்தளித்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.
மசாலாப்படம் என்று வந்துவிட்ட பிறகு கதையில் லாஜிக் பார்ப்பது நீதி, நேர்மைகளுக்கு எதிரானது அல்லவா? கொலம்பியாவில் தயாரிக்கப்படும் ஆபத்தான போதைப் பொருட்கள் கடத்தல் ஆசாமிகளால் சென்னைக்கு சப்ளை செய்யப்பட்டு அதை பயன்படுத்தும் மாணவர்கள் சீரழிகிறார்கள். அதைக் கண்டு சென்னை கமிஷனர் மனம் புழுங்கி,’இந்த அநியாயத்தைத் தட்டிக்கேட்க ஒருத்தன் நிச்சயம் வருவான்’ என்று தவிக்க காவல் துறை உயர்பதவியில் இருக்கும் அஜித் மதுரையிலிருந்து சென்னைக்கு ஷிஃப்ட் ஆகி வந்து, அந்த கும்பலைக் கொத்துக்க்றி போட்டு, கெட்டுப்போன இளைஞர்களைப் பெற்றோரோடு சேர்த்துவைக்கிறார். சுபம். இந்தக் கதையை என்ன காரணத்துக்காகவோ மூன்று மணி நேரத்துக்கு நீட்டி முழக்கியிருக்கிறார்கள்.
இதற்குள் இந்த வகையான படங்களில் பார்த்துச் சலித்த தம்பி செண்டிமெண்ட் ட்விஸ்டுகள், க்ளைமேக்ஸில் ஹீரோவின் பெற்றோர் மற்றும் உற்றாரை வில்லன் கடத்தி வைத்துக்கொண்டு மிரட்டுவது போன்ற பல க்ளிஷேக்கள் உண்டு. ஆனால் படத்தில் இடம் பெறும் பைக் ரேஸ்கள் இதுவரை இந்திய சினிமா பார்த்திராதது என்று ‘தல’யில் அடித்து சத்தியம் செய்யலாம்.
நீரவ் ஷாவின் ஒளிப்பதிவில் செம கியூட்டாக இருக்கிறார் அஜித்.எப்போதும் போல் நடிப்புக்கு வேலை இல்லை. நாயகியான ஹிமா குரோஷி கூலிங் கிளாஸில் மனசைக் கொள்ளை கொல்கிறார். மும்பை வரை சென்று ஒரு லவ் லெட்டர் கொடுத்துவிட்டு வர மனசு துடியாய்த் துடிக்கிறது. இவர்களுக்கு காதல், டூயட் என்று எதுவும் வைக்காமல் காட்சிகளை வெகு சாமர்த்தியமாக கையாண்டிருக்கிறார் வினோத். படத்தின் இன்னொரு நாயகனாக, அஜித்தின் தம்பியாக வரும் ராஜ் அய்யப்பா நடிப்பிலும் தோற்றத்திலும் கவனம் ஈர்க்கிறார். வில்லன் கார்த்திகேயாவும் அஜித்துக்கு சரியான டஃப் கொடுக்கிறார்.
இரண்டே பாடல்களில் யுவன் முத்திரை பதிக்க, பின்னணி இசையில் ஜிப்ரான் பின்னி எடுக்கிறார்.
உலகத்தரமான பைக் ரேஸ் காட்சிகள், அதிரடி ஆக்ஷன் காட்சிகள், வழக்கமான மசாலாக் காட்சிகளைக் கூட தனது பிரமாதமான மேக்கிங்கில் விறுவிறுப்பாகக் கொண்டு சென்றிருக்கும் ஹெச்.வினோத், இப்படத்தில் ஒரு இயக்குநராக கொஞ்சம் சறுக்கியிருக்கிறார் என்பதுதான் நிதர்சனம்.