அசோக் செல்வன்,ஜனனி, ஐஸ்வர்யாமேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகியுள்ள படம் ‘வேழம்’.இப்படம் ஜுன் 24 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதன் இறுதிக் கட்ட வேலைகள் தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில் படத்தைப் பற்றி இயக்குநர் சந்தீப் ஷியாம் கூறியதாவது…

யானைக்கு இன்னொரு பேர் தான் ‘வேழம்’. யானைக்கு மதம் பிடிச்சா அதை யாராலும் அடக்க முடியாது. அதே நேரத்தில் யானை இயல்பாக இருக்கும்போது மற்ற உயிர்கள் மீது அதீதபாசம் காண்பிக்கும்.இந்தப் படத்தின் கதாபாத்திரங்கள் அதுபோன்ற குணாதசியத்துடன் இருப்பதால் இப்பெயர் பொருத்தமாக இருக்கும் என்று வைத்திருக்கிறோம்.

படத்தில் அசோக்செல்வன் நல்லவரா? கெட்டவரா?

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் நல்ல குணமும் இருக்கிறது. கெட்ட குணமும் இருக்கிறது. அவர்கள் எதைத் தேர்ந்தெடுக்கிறார்களோ அதுதான் அவர்களுடைய வாழ்க்கையைத் தீர்மானிக்கும். இப்படத்தில் அசோக்செல்வன் வேடமும் அப்படித்தான் இருக்கும்.

படப்பிடிப்பு அனுபவங்கள்..?

முதல் பட இயக்குநரான எனக்கு படத்தின் நாயகன் அசோக்செல்வன் அற்புதமான ஒத்துழைப்பைக் கொடுத்ததுடன் அபாரமான நடிப்பாற்றலை வெளிப்படுத்தினார். இதுவரை பார்க்காத ஒரு அசோக் செல்வனை இதில் பார்க்கலாம். உடல்மொழி, தோற்றம் என எல்லா விதத்திலும் புத்தம்புதிதான அசோக் செல்வனைப் பார்க்கலாம்.

நாயகிகள் பற்றி…?

நாயகிகள் ஜனனி, ஐஸ்வர்யா மேனன் ஆகிய இருவருக்குமே தமிழ் தெரியும் என்பதால் கதையை உள்வாங்கி நடித்துள்ளார்கள்.அது படத்துக்குப் பெரும்பலமாக அமைந்துள்ளது.

மற்ற நடிகர்கள்..?

இப்படத்தில் முக்கிய வேடங்களில் கிட்டி, சங்கிலிமுருகன், தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன்,கலை இயக்குநர் கிரண், ஷியாம் சுந்தர் ஆகியோரோடு மாரத்திய நடிகர் மோகன் அகாஷே ஏற்றிருக்கும் கதாபாத்திரம் எல்லோரையும் ஈர்க்கும்.

தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றி…?

இப்படத்துக்கு சக்தி அரவிந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார்.என் நண்பர் ஜானு சந்தர் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பை பிரசாத்தும், சண்டைப்பயிற்சிகளை தினேஷ் சுப்பராயனும், கலை இயக்கத்தை சுகுமாரும் செய்துள்ளனர்.இவர்கள் ஒவ்வொருவருடைய பங்களிப்பும் பேசப்படும் விதத்தில் இருக்கும். 

தயாரிப்பாளர் பற்றி…?

கே 4 கிரியேஷன்ஸ் சார்பாக தயாரிப்பாளர் கேசவன் சார் பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளார்.30 வருடங்களாக சாப்ட்வேர் நிறுவனம் நடத்தி வருகிறார். திறமையான இளைஞர்களுக்கு வாய்ப்பு தரவேண்டும், அவர்களுடைய திறமையை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காகவே படத்தயாரிப்பில் இறங்கியுள்ளார். எனக்குப் பிடிக்கும்.நான் அவருடைய நிறுவனத்துக்காக பல விளம்பரப் படங்களை இயக்கியுள்ளேன்.நான் சொன்ன ‘வேழம்’ கதை அவருக்குப் பிடித்திருந்தது. எனவே,அவருடைய முதல் தயாரிப்பாக ‘வேழம்’ படத்தைத் தயாரித்தார்.

படப்பிடிப்பு எங்கே நடந்தது?

ஊட்டியில் பெரும்பகுதிப்படப்பிடிப்பு நடத்தினோம். திட்டமிட்டபடி படப்பிடிப்பு நிறைவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகிவிட்டோம். படத்துக்கு தணிக்கையில் யு ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.