டபுள்மீனிங் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி தயாரித்து வழங்க, என்.கிஷோர் இயக்கத்தில், நடிகர் சிபிராஜ்,தான்யா ரவிச்சந்திரன் நடித்துள்ள திரைப்படம்  “மாயோன்”.  

புத்தம் புதிய களத்தில் கடவுள், அறிவியல், சிலை கடத்தல் மற்றும் புதையல் வேட்டை என பரபர திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள, இப்படத்தின் முன்னோட்டம் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.
 
தனியார் கல்லூரியில் படத்தின் விளம்பர முன்னோட்டமாக ஒரு வண்டியில், படத்தில் வரும்  விஷ்ணு சிலை இரதம் போல் அமைக்கப்பட்டு இருந்தது. அந்த இரதத்தில் ‘மாயோன்’ பட விளம்பரங்களும் அமைக்கப்பட்டிருந்தன. இந்த இரதம் 40 நாட்கள், தமிழகம் முழுவதும் வலம் வரப்போகிறது.

இந்த விழாவினில் இந்த இரதத்தின் பயணம்  படக்குழுவினரால் துவக்கி வைக்கப்பட்டது.
 
அதனைத் தொடர்ந்து நம் பாரம்பரியக் கலையான தோல் பாவைக் கூத்து அரங்கேற்றப்பட்டது.

மேலும் பார்வையற்ற  மாற்றுத்திறனாளிகளுக்காக, அவர்கள் முன்னிலையில் அவர்களுக்காக ஒலி விளக்கத்துடன் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட முன்னோட்டம் வெளியிடப்பட்டது.

அகல் பவுண்டேசனை சேர்ந்த பார்வையற்றவர்கள் இந்தச் சிறப்பு முன்னோட்டத்தைப் பார்த்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் படம் வெற்றி பெற தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
 
இவ்விழாவினில் தயாரிப்பாளர் அருண் மொழி மாணிக்கம் பேசியதாவது……. 

நான் இப்படத்தில் நடிப்பதாக எல்லாம் ப்ளான் இல்லை. ஆனால் படத்தின் போது ஒரு காட்சி தான் எனச் சொல்லி என்னை நடிக்க வைத்து விட்டார்கள். எனக்குள் பல காலம் இருந்த கதை. உங்கள் அனைவருக்கும் பிடிக்குமென நம்புகிறேன். சைக்கோ படத்தின் போது தான்  பார்வையற்றோருக்கு டிரெய்லர் செய்ய வேண்டும் என்ற ஐடியா முதலில் தோன்றியது. எல்லோரையும் சமமாக நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் தான் ஒரு சமூக அக்கறையாக இதைச் செய்தோம். சைக்கோ படத்தைப் பார்வையற்றோருக்கு திரையிட்டபோது அவர்களின் உற்சாகம் மற்றும் மகிழ்ச்சி என் மனதிற்கு மிகப்பெரும் சந்தோசத்தைத் தந்தது. அப்போது என் எல்லாப் படங்களையும் பார்வையற்றோர் இரசிக்கும்படி வெளியிட வேண்டும் என முடிவு செய்தோம். இப்படம் நீங்கள் எதிர்பார்க்காத புதிய அனுபவத்தைத் தரும் என்றார்.
 
நடிகர் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பேசியதாவது….… 

நான் இந்தப்படத்தில் ஒரு நடிகன் தான். இது கடவுள் படம் என நினைத்து விட வேண்டாம். இதில் நிறைய ஆச்சர்யங்கள் இருக்கின்றன. இந்தப்படத்தின் படப்பிடிப்பின்போது ஒரு குகை மாதிரி இடத்திற்குச் சென்றோம். அங்கு உள்ளே ஒரு கோயிலே அமைத்திருந்தார்கள். அந்த கலை இயக்கம் பார்த்துப் பிரமித்தேன். கலை இயக்குநருக்கு வாழ்த்துகள். இந்தப்படம் ஒரு புதிய அனுபவமாக இருக்கும் என்ற்.

நடிகர் சிபிராஜ் பேசியதாவது……..

‘இண்டியானா ஜோன்ஸ்’, ‘டாவின்சி கோட்’ படங்களெல்லாம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அது போன்ற ஒரு படத்தில் நடிக்க வேண்டும் எனும் ஆசை இந்தப்படத்தில் நிறைவேறியது. இளையராஜா இசையில் ஒரு படம் பண்ண வேண்டும் என எல்லோருக்கும் ஆசை இருக்கும் .அதுவும் இந்தப்படத்தில் எனக்குக் கிடைத்துள்ளது. இந்தப்படம் சாமி படமெல்லாம் இல்லை. அதைத்தாண்டி நிறைய இருக்கிறது. மேடையில் குட்டிக்கதை சொல்லலாம். ஆனால் இந்தப்படத்தின் கதையைச் சொல்ல முடியாது. படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி என்றார்.
 
நாயகி தான்யா ரவிச்சந்திரன் பேசியதாவது…….

இந்தப்படத்தில் நடித்தது புதிய அனுபவமாக இருந்தது. சிபிராஜ் உடன் நடித்தது நல்ல அனுபவம். படத்தில் முழுதும் வருவது மாதிரி பெரிய ரோல்,  படத்தைக் கஷ்டப்பட்டு உருவாக்கியுள்ளோம். உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி என்றார்.
 
கலை இயக்குநர் பாலா பேசியதாவது……

இந்த மாதிரி திரைக்கதை தமிழில் அதிகம் வந்ததில்லை. இந்தப்படத்திற்காக நிறைய இடங்களுக்கு ஆராய்ச்சிக்காகச் சென்று தகவல்கள் சேகரித்து இப்படத்தின் காட்சிகளை அமைத்தோம். படம் பார்க்கும் போது உங்களுக்கு புது அனுபவமாக இருக்கும் என்றார்.
 
நடிகர் மாரிமுத்து பேசியதாவது….…

இயக்குநர் 15 நிமிடத்தில் திரில் நிறைந்த இந்தக் கதையை என்னிடம் கூறினார். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. படத்தில் கே.எஸ்.இரவிக்குமார் சார் உடன் நடிப்பது எனக்கு மகிழ்ச்சி. அந்த வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி. இதுவரை நாம் பயணப்படாத ஒரு பாதையில் பயணிப்பது போன்ற உணர்வைக் கொடுக்கும் இந்தப் படம். இந்த பூமியில் என்ன இருக்கின்றது என்பது யாருக்கும் தெரியாது. அதனால் இந்த மாதிரி கதை எழுத பெரிய ஆராய்ச்சி செய்ய வேண்டும். இந்தப் படம் விரைவில் தியேட்டருக்கு வரவிருக்கிறது. படம் பார்த்து நீங்கள் வரவேற்பு தர வேண்டும் நன்றி என்றார். 

இயக்குநர் என்.கிஷோர் பேசியதாவது……..

இந்தத் திரைக்கதை மிக ஃபிரஷ்ஷாக இருந்தது. சிபிராஜ் எப்போதும் புதுமையான கதைகள் செய்பவர். அதனால் அவரிடம் சொன்னோம். அவருக்குப் பிடித்திருந்தது. படத்தில் கே.எஸ்.இரவிக்குமார், மாரிமுத்து, பக்ஸ் என ஒவ்வொருவருமே படத்திற்குப் பொருத்தமாக அமைந்தார்கள். படத்தை நிறைய உழைப்பில் நிறையப் பொருட்செலவில் உருவாக்கியுள்ளோம். இந்தப் படம் பிரம்மாண்டமாக உருவாக அருண்மொழி சார் தான் காரணம். அவர் படம் தான் முக்கியம் எனப் புரிந்து கொண்டு படத்திற்கு முழு ஒத்துழைப்புத் தந்தார் மேலும் ஓடிடி வாய்ப்பு இருந்தும் படத்தைத் திரையரங்கில் தான் கொண்டு வருவேன் எனும் அவரின் நம்பிக்கைக்கு நன்றி. கந்தர்வ இசை படத்திற்குத் தேவைப்பட்டது. எங்களுக்கு இளையராஜாதான் ஒரே வாய்ப்பாகத் தோன்றினார். அவரை விடப் பொருத்தமானவர் யாரும் இருக்க முடியாது. இப்படத்தின் கதை இந்தியா முழுக்க எளிதாகப் புரிந்து உணர்ந்துகொள்ளக் கூடிய கதையாக இப்படம் இருக்கும் என்றார்.
 
அனைத்துப் பணிகளும் முடிந்த நிலையில் இப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் ஜூன் 24 ஆம் தேதி வெளியாகிறது.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This will close in 0 seconds