தொடர்ந்து தோல்விப்படங்களைக் கொடுத்ததால் தமிழ் நடிகர்களிடம் கால்ஷீட் வாங்கமுடியாமல் இயக்குநர் லிங்கு தெலுங்குப்பக்கம் தாவிய படம்.
சென்னையில் மருத்துவம் படித்துவிட்டு மதுரை அரசு பொதுமருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றப் போகிறார் நாயகன் ராம். அங்கு மதுரையையே தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் குரு என்றழைக்கப்படுகிற ஆதியுடன் மோதல். அதனால் ஆதி, நாயகன் ராமை அடித்துத் துவைத்து பொதுஇடத்தில் காயப்போட்டுவிடுகிறார். குடிக்கத் தண்ணி கூட இல்லாமல் இருக்கும் அவர் ஒரு திடீர் மழையால் தாகம் தீர்த்து தப்பிப் பிழைக்கிறார்.
அப்படித் தப்பிச் செல்பவர், இந்த உலகமே யூகிக்க முடியாத ஒரு ட்விஸ்டுடன் மீண்டும் மதுரை நகருக்கே வந்து வைத்தியம் பார்க்கிறார்.
தமிழில் அறிமுகமாகும் தெலுங்கு நாயகன் ராமுக்கு முதல்படத்திலேயே இருவித தோற்றங்கள். மருத்துவராக இருக்கும்போது வழக்கமான மீசை காவல்துறை அதிகாரி ஆனவுடன் முறுக்குமீசை என வேறுபடுத்த முயன்றிருக்கிறார்கள். மீசை ஒரிஜினல்தான் என்றாலும் ஏனோ ரசிக்கமுடியவில்லை.
நாயகி கீர்த்திஷெட்டி, விசில் மகாலட்சுமி எனும் பெயரில் வானொலி தொகுப்பாளராக வருகிறார். தெலுங்கில் இப்போது இவர்தான் நம்பர் ஒன் என்கிறார்கள். அந்தத் தெலுங்கு ரசனையில் தீயை வைக்க…
வில்லனாக நடித்திருக்கிறார் ஆதி. மிருகம் படத்தில் நாயகனாக நடிக்கும்போது அவர் செய்த வில்லத்தனம்கூட வில்லனாக நடித்திருக்கும் இந்தப்படத்தில் இல்லை. ஆக ஆதி பாதிதான் தேறுகிறார்.
நதியா, ஜெயப்பிரகாஷ், அக்ஷராகவுடா உள்ளிட்ட நிறைய நடிகர்கள் படத்தில் இருக்கிறார்கள். படத்தின் வசனகர்த்தா பிருந்தாசாரதியும் மருத்துவர் வேடத்தில் நடித்திருக்கிறார், என்னத்தைச் சொல்ல…இப்படி பெரும் சொதப்பலாக அமைந்த படத்தை இசையமைப்பாளர்
தேவிஸ்ரீபிரசாத் கொஞ்சமே கொஞ்சமாய்க் காப்பாற்றுகிறார்.
தெலுங்கில் நேரடியாக எடுத்துவிட்டு தமிழில் குரல்பதிவு செய்திருப்பது பல இடங்களில் வெளிப்படையாகத் தெரிகிறது. மதுரையில் கதை நடப்பதாகக் காட்டிவிட்டு ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் சுட்டுத்தள்ளியிருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது.
ஒரு ஊரில் ஒரு ரவுடி அவரைக் கொன்று கதாநாயகன் அந்த ஊரைக் காப்பாற்றுகிறார் என்கிற ஐதர் அலி காலத்துக் கதையும் அதற்கான திரைக்கதையும் பலவீனம். நியாயமாக 1987 தீபாவளிக்கு வந்திருக்கவேண்டிய படம். 35 வருட லேட்.