தாமிணி. கடந்த 16ம் தேதி இரவு ஓடும் பஸ்ஸில், 6 மிருகத்தனமான ஆண்களால் பாலியல் கொடுமைக்குள்ளாக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி மாணவிக்கு ஊடகத்தில் வழங்கப்பட்டுள்ள புனைப் பெயர்.
கடந்த ஒரு வாரமாக உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் அந்த மாணவியின் உடல் நிலை இன்று மீண்டும் கவலைக்கிடமாகிவிட்டது.
நான்கு நாட்களாக டெல்லியை மொத்தமாக ஸ்தம்பிக்க வைத்து மாணவர், ஆசிரியர், அலுவலகம் செல்பவர் என்று மத்திய தர வர்க்கத்தினர்
எல்லோரும் நடந்த கொடுமைக்கு உடனே நீதி வழங்கக் கோரி உணர்ச்சி பொங்கப் போராடி வரும் வேளையில், பிடிபட்ட அந்தக் குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை என்பது போராடுபவர்களின் கோஷங்களில் முக்கியமானதாக இருக்கிறது.
அவர்களைத் தூக்கிலிட வேண்டும் என்று பத்திரிக்கை முதல், தொலைக் காட்சி விவாதங்கள் வரை சூடான விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. அவர்களை தூக்கில் போடவேண்டும் என்று பேசுபவர்களின் முகங்களில் தார்மீகக் கோபம் வெளிப்படுகிறது. அந்த உணர்வுக் கொந்தளிப்புகளை நாம் புரிந்து கொள்ள முடியும்.
ஆனால் சட்டம் என்பது உணர்வுகளை மட்டுமே கொண்டு முடிவெடுப்பதல்ல. அது சமுதாயத்தின் எல்லா மனிதர்களையும் சமமாக வைத்து, சுய விருப்பு வெறுப்புகளை மையப்படுத்தாமல் செயல்படவேண்டும்.
நடிகர் கமல்ஹாசன் நேற்று தனது விஸ்வரூபம் படத்தின் விளம்பரத்திற்காக படத்தின் நாயகி பூஜா குமாருடன் கொச்சி சென்றார். அங்கு படத்தின் விளம்பரத்துக்கான விழாவில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது பத்திரிக்கையாளர்கள், டில்லி மாணவி பாலியல் பலாத்காரத்தில் குற்றவாளிகளை தூக்கில் போடவேண்டும் என்று மாணவ மாணவியர் போராடுவது குறித்து அவரிடம் கேட்டனர்.
அதற்கு பதிலளித்த கமல்ஹாசன் கூறியதாவது; “டெல்லியில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. ஒரு குற்றத்தை ஈடுகட்ட இன்னொரு குற்றத்தைச் செய்வது என்பது சரியான நடைமுறை அல்ல. கொடூரமான தண்டனை கூட சட்டரீதியாக ஒரு கொலைக்குச் சமமானது தான்.
பாலியல் பலாத்காரம் நடந்த பஸ் என்னுடையது. அச்சம்பவம் நடைபெற்ற இடமும் எனது தலைநகரம். பாலியல் குற்றத்துக்கு ஆளான பெண் எனது சகோதரி. இந்தச் செயலில் ஈடுபட்டவனும் என் சகோதரன் தான். இதற்காக நான் வெட்கப்படுகிறேன். அவமானப்படுகிறேன்.” இவ்வாறு அவர் கூறினார்.
தூக்குத் தண்டனைக்கு எதிராக விருமாண்டி திரைப்படத்தில் பேசியதோடு மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் தூக்குத் தண்டனைக்கு எதிரான கொள்கையை வலியுறுத்தும் கமல் ஸார் ! உங்களுக்கு ஒரு வணக்கம் ஸார்.