ஆந்திராவில் அறிமுகவிழா நடத்தி சுமார் ஒருவாரம் கழித்து,இன்று சென்னை, ராணிசீதை ஹாலில் ‘கடல்’ படத்தின் நாயக, நாயகியர் அறிமுகம் இன்று நடந்தது. பெரிய நிறுவனத்தின் விழா என்பதால்,நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்க, அரவிந்தசாமி, கார்த்திக், சுஹாசினி, நாயகி துளசி, நாயகன் கவுதம், ஏ.ஆர்.ரகுமான், வைரமுத்து மற்றும்
மதன் கார்க்கி ஆகியோர் கலந்துகொண்டனர்.
சந்தானம் படங்களில் அடிக்கடி பயன்படுத்துவாரே ஒரு வார்த்தை ’கலாய்க்கிறாராமாம்’ அதுமாதிரியே மணிரத்னம் பாணியில் பேசுவதாக நினைத்துக்கொண்டு அர்ஜுனில் துவங்கி அர்விந்த்சாமி வரை பலரும் மீண்டும் மீண்டும் ‘முடியாது’ தெரியாது, வராது’ படம் ஓடாது, காசுவராது’ என்று ஒருவரை ஒருவர் கலாய்த்துக்கொண்டிருந்தது பயங்கர நகைச்சுவையாயிருந்தது.
இப்படி மற்றவர்கள் ஓரிரு வரிகளில் பேசி ஓய்வெடுக்க, கவிப்பேரரசு மட்டும், கொஞ்சம் விலாவாரியாக வகைதொகையுடன் வகுந்தெடுத்தார்.
‘இப்ப எழுதச்சொன்னா எதுவும் தேறாது’ என்று நினைத்து, மணிரத்னம் கையாண்ட ஒரு டெக்னிக்கைக்கூட வைரம் வழக்கம்போல் சிலாகித்தார். அதாவது அவர் ஊரில் இல்லாத சமயங்களில் அவரது கவிதைப் புத்தகங்களில் இருந்து மூன்று பாடல்களை எடுத்து ட்யூன் போட்டு தனது தமிழை கவுரப்படுத்தியதாகக் குறிப்பிட்டார்., அத்தோடு நில்லாமல், 30 வருடங்களுக்கு முன்பு கார்த்திக், மற்றும் ராதாவின் வாரிசுகளுக்கு’ அலைகள் ஓய்வதில்லை’ படத்தில் பாடல் எழுத கிடைத்த பாக்கியம் குறித்தும் சிலாகித்தவர், இதே படத்தில் தனது வாரிசு மதன் கார்க்கி மூன்று பாடல்கள் எழுதியிருக்கும் வரலாற்றை வம்பாக மறைத்தார்.
வைரத்தின் வேண்டுகோளுக்காகவோ என்னவோ விழாவில் பேசிய அனைவருமே இரண்டு வாரிசுகளைப் பற்றி மட்டும் பேசிவிட்டு மதன்கார்க்கியை மழுப்பினார்கள்.
கார்க்கியை விழாவுக்கு அழைப்பதைத் தடுப்பதற்குக்கூட வைரம் முயன்றதாக ஒரு தகவலும் அரங்கின் ஈசான மூலைகளில் லேசாக நடமாடியது.
தமிழ்ரசிக மகாஜனங்களே நீங்களே சொல்லுங்க கார்த்திக் வாரிசு கவுதமை விட, ராதா வாரிசு துளசியை விட நம்ம வைரமுத்து வாரிசு மதன் கார்க்கி எந்த வகையில் குறைந்துவிட்டார் சொல்லுங்க?