சப்போஸ் திருவள்ளுவர் மட்டும் கொஞ்சம் லேட்டாகப் பிறந்திருந்து, லேப்-டாப்பில் திருக்குறளை இயற்ற ஆரம்பித்திருந்தால், கண்டிப்பாக அவரது ‘ குழலினிது யாலினிது’ குறளை மட்டும் டெலிட் பண்ணி விட்டு, 1299 குறள்களோடு, அல்லது எஸ்.ஜானகியம்மாவின் குரலுக்கு,’ஜானவாசம்’ என்ற தலைப்பில், ஒரு பத்து குறளை சேர்த்து எழுதி 1340 குறள்களோடு திருக்குறளை வெளியிட்டிருப்பார்.
1957-ல் ‘விதியின் விளையாட்டு’ தமிழ்ப்படத்தில் அறிமுகமாகி, இந்தியாவின் அத்தனை மொழிகளிலும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ள ஜானகியம்மாவுக்கு தற்போது வயது 74. ‘செந்தூரப்பூவே’வில் தொடங்கி இதுவரை நான்கு முறை தேசிய விருதுகளும், எண்ணிக்கையற்ற அளவில் மாநில விருதுகளும் வாங்கியிருப்பது அனைவரும் அறிந்த சங்கதி. ஜானகியம்மாவின் ஆல்–டைம் ஃபேவரைட் பாடகர் எஸ்.பி.பி. அவருடன் மட்டும் இரண்டாயிரம் பாடல்களுக்கு மேல் இணைந்து பாடியிருக்கும் ஜானகியின் மனம் கவர்ந்த இசையமைப்பாளர் இசைஞானி. 15 ஆயிரம் பாடல்களில் ராஜாவின் இசையில் மட்டுமே மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியிருக்கிறார்.
இவர் பாடிய நல்ல பாடல்களைப் பட்டியலிடவே நாலு வாரங்கள் ஆகும். ‘சிங்காரவேலனே தேவா’ பாடல் ஒன்றுக்காக மட்டுமே நாட்டின் உயரிய விருதுகள் அத்தனையும் காலடியில் சமர்ப்பிக்கப்பட்டிருக்க வேண்டிய ஜானகியம்மாவுக்கு,வழக்கம் போல் ’ரொம்ப சீக்கிரமாக’ இந்த ஆண்டுதான் பத்ம பூஷன் விருதையே, ’மக்கிய’ அரசு அறிவித்திருக்கிறது.
அந்த அறிவிப்பைக்கேட்டு, ‘சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறைவதில்லை’ என்பது போல் அறச்சீற்றம் கொண்டிருக்கிறார். இவ்வளவு தாமதமாக எனக்கு விருது அறிவித்தவர்கள் அட்லீஸ்ட் பாரதரத்னாவாவது அறிவித்திருக்கலாம். மத்திய அரசின் விருது என்றாலே, அது வடக்கர்களுக்கென்று ஆகிவிட்டது. எனவே இந்த விருதை நான் பெற்றுக்கொள்ளப்போவதில்லை’ என்று நோஸ் கட் பண்ணிவிட்டார் ‘யெஸ்.ஜானகி.
‘பாரதரத்னா’ உங்க வீட்டுக் கதவைத் தட்டுற நாள் ரொம்ப தூரத்துல இல்லைம்மா. உங்களுக்காக குரல் கொடுக்க நாங்க இருக்கோம்.