ஈகோ என்பது சுயநலம். தன்னைப் பற்றியே சிந்திப்பது. தன்னைப்போல் யாருமில்லை என்ற தலைக்கனம். தான் சொல்வதே சரி என்ற அகங்காரம் ஆகிய குணங்களின் ஒட்டு மொத்த வெளிப்பாடுதான் ஈகோ. இதை மையமாக வைத்து எழுதப்பட்ட கதையில் உருவாகியிருக்கும் படம் பார்க்கிங்.
ஒர் அடுக்குமாடிக் குடியிருப்பு.அங்கு வசிக்கும் அரசு அதிகாரியின் குடும்பம், அங்கு புதிதாகக் குடியேறும் இளம் இணையர்.இணையரில் கணவர் தனியார் மென்பொருள்துறைப் பணியாளர்.
இவர்கள் இருவருக்கும் இடையே தங்கள் வாகனங்களை நிறுத்துவதில் தொடங்கும் மோதல் எப்படி வளர்கிறது? எதுவரை செல்கிறது? என்பனவற்றை உளவியல் பூர்வமாகச் சொல்லியிருக்கிறது படம்.
இதுவரை வந்த படங்களில் காதலித்துக் கொண்டிருந்த ஹரீஷ்கல்யாண் இந்தப்படத்தில் கணவராகியிருக்கிறார். ஆனாலும் காதலுக்குக் குறைவில்லை.வீட்டுக்குள் இளம் தம்பதியர் பொறாமைப்படுமளவுக்குக் காட்சிகள் இருக்கின்றன.அவற்றில் பொருந்திப்போய் பாராட்டுப்பெறும் நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.வெளியில் வரும் சண்டையில் அவருக்குள் இருக்கும் மிருகம் விழிக்கிறது.எதிர்மறை எண்ணம் தரும் நடிப்பிலும் தன்னை நிரூபித்திருக்கிறார்.
அரசு அதிகாரியாக அகங்காரம் கொண்ட மனிதராக வாழ்ந்திருக்கிறார் எம்.எஸ்.பாஸ்கர். இயல்பில் எனக்கு ஈகோவும் கிடையாது எஃப்கோவும் கிடையாது என்று சொல்பவர், அந்த இயல்புக்கு மாறான இந்தக்கதாபாத்திரத்தில் நடிப்பதற்கெனவே பிறந்தவர் போல் நடித்து சிறப்புப் பெறுகிறார்.
நாயகி இந்துஜாவுக்கு ஐந்துமாத கர்ப்பிணி என்றொரு கூடுதல் வேலை.திரைக்கதைக்கும் காட்சிகளுக்கும் வலுவூட்ட எழுதப்பட்ட அந்தப்பாத்திரத்துக்கு ஏற்ப நடித்துப் பாராட்டுப் பெறுகிறார்.
எம்.எஸ்.பாஸ்கரின் மனைவி ரமா, மகள் பிரார்த்தனா, வீட்டு உரிமையாளர் இளவரசு ஆகியோரும் அளவாக நடித்து வளம் சேர்க்கிறார்கள்.
சாம்.சி.எஸ் இசை கொடூர உணர்வுகளுக்கும் உரம் சேர்த்திருக்கிறது.
குறைவான கதாபாத்திரங்கள் வீடு, மகிழுந்து, வாகன நிறுத்துமிடம் என நெருக்கடியான இடங்களில் படமாக்கப்பட்டிருக்கிறது என்ற உணர்வே வராமல் காட்சிகளைக் கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜிஜூசன்னி.
பிலோமின் ராஜின் படத்தொகுப்பும் நிறைவு.
இயக்குநர் இராம்குமார் பாலகிருஷ்ணனுக்கு இது முதல்படம்.மனிதர்களைக் காட்சிப்படுத்துவது எளிது, மனித உணர்வுகளைக் காட்ட முயல்வது கடினம். அனுபவ இயக்குநர்களே தடுமாறிவிடும் திரைக்கதையைக் கையிலெடுத்துத் தடம்மாறாமல் கொடுத்திருக்கிறார். அங்கங்கே அதிர வைத்தாலும் அதன் எல்லை எதார்த்தமானது.
ஒவ்வொருவரும் தங்களை அந்தப் பாத்திரங்களில் பொருத்திப் பார்ப்பார்கள் என்பதே இதன் வெற்றி.
– முத்து