அரசகுடும்பத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து.அவரிடம் இருக்கும் விலைமதிப்பற்ற கிரீடம் கோயில்திருவிழாவின்போது மக்களுக்குக் காட்டப்படும்.மாரிமுத்துவின் மகள் இனியா. அவருக்கும் ஒரு சாமானியரான யோகிபாபுவுக்கும் காதல். அதற்கு எதிர்ப்பு. யோகிபாபு கொல்லப்படுகிறார்.அதேநேரம் அந்த கிரீடமும் காணாமல் போகிறது. அதன்பின் என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதுதான் தூக்குதுரை படம்.

கதைப்படி சில காட்சிகளிலேயே கொல்லப்பட்டுவிடுகிறார் யோகிபாபு.அதன்பின் அவரைப் பயன்படுத்த இயக்குநர் கடைபிடித்திருக்கும் உத்தி படத்தை வேறொரு தளத்துக்குக் கொண்டு சென்றுவிடுகிறது.

அரசகுடும்பத்து வாரிசு என்பதற்கேற்ற வனப்புடன் இருக்கிறார் இனியா. அவருக்கும் திரைக்கதையில் குறைவான இடம்தான். ஆனால் வரும் காட்சிகளில் வரவேற்புப் பெறுகிறார்.

நான்கடவுள் இராசேந்திரன் தலைமையிலான மகேஷ், பாலசரவணன், செண்ட்ராயன் ஆகியோர்தான் படத்தைத் தொடங்கி வழிநடத்தி முடித்துவைக்கவும் செய்கிறார்கள்.

இவர்களில் புதுமுகம் மகேஷ் கதாபாத்திரத்துக்கேற்ற தன் நடிப்பால் கவனம் ஈர்க்கிறார்.நான்கடவுள் இராசேந்திரன், பாலசரவணன், செண்ட்ராயன் ஆகியோர் சிரிக்க வைப்பதற்கென்றே படைக்கப்பட்டிருக்கிறார்கள். சில இடங்களில் சிரிக்கவும் வைக்கிறார்கள்.

மறைந்த நடிகர் மாரிமுத்து,நமோ நாராயணன் ஆகியோர் வேடங்களும் அவர்களுக்குள் நடக்கும் போட்டியும்தாம் படத்தை நகர்த்த உதவுகிறது.

ரவிவர்மா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். படப்பிடிப்பு நடத்த குறைவான இடங்களே அவருக்குக் கொடுத்திருக்கிறார்கள். அதற்குள் குறைவின்றிப் பணிபுரிய முனைந்திருக்கிறார்.

காதல்கதையாகத் தொடங்கி பேய்க்கதையாக மாறும் திரைக்கதைக்கு இசையால் பலம் சேர்க்க முயன்றிருக்கிறார் இசையமைப்பாளர் கே.எஸ்.மனோஜ்.

எழுதி இயக்கியிருக்கும் டெனிஸ் மஞ்சுநாத், உருவுகண்டு எள்ளாமை வேண்டும் என்கிற கருத்தைச் சொல்வதற்கான கதையில், காதல், திருடர்கள் வாழ்வு, சகோதர மோதல் ஆகியனவற்றோடு ஒரு பேயையும் வைத்து திரைக்கதை எழுதியுள்ளார்.

அவர் எண்ணம் நல்லதுதான் அதைச் செயலாக்கிய விதம் நிறைவாக இல்லை.

– இளையவன்

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.