‘’வழக்கு எண் 18/9’ படத்தின் கதையை இரண்டு வருடங்களாக மனதில் அசைபோட்டுக்கொண்டே இருக்கிறேன். அவசர அவசரமாக படம் எடுத்து, சினிமாவில் சம்பாதித்துதான் சாப்பிட வேண்டிய நிலையில்
நான் இல்லை. என் மனைவி ஒரு தனியார் கல்லூரியில் ஆங்கில பேராசிரியையாக வேலை பார்க்கிறார். டியூசன் எடுத்தாவது எனக்கு கஞ்சி ஊத்துவார்.’’-
-ஒரு நேர்காணலில் இயக்குனர் பாலாஜி சக்திவேல்
ஞாபக சக்தி விஷயத்தில், என்னைப் பொறுத்தவரை, தமிழ்சினிமா ரசிகர்கள் காலகாலமாக பரிகசிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றுதான் சொல்வேன்.
படம் துவங்கிய பத்தாவது நிமிடத்திலிருந்து,’எலே, நீ மறந்திருப்படே’என்று எதற்கெடுத்தாலும் விடாமல் அவ்வளவு ரீ-கலெக்ஷன் ஷாட்கள் போடுவார்கள்.
ஒரு தியேட்டரிலும் ஓடாத படங்கள் திடீரென 100 வது நாள் போஸ்டரோடு நம்மைப்பார்த்து பல்லிளிக்கும்.
அப்படி போஸ்டர் ஒட்டப்பட்ட ஒரே காரணத்துக்காகவே, அந்த வருட டிசம்பர் இறுதி நாட்களில் வெளியாகிற தினத்தந்தி, மாலைமலர் கெஸட்களில், ‘இந்த ஆண்டு 100 நாட்கள் ஓடிய படங்களின் பட்டியலில்’ இடம் பிடித்து, பின்னர் அதுவே தமிழ்சினிமா சரித்திரமாக மாறும் கொடுமையும் நடந்துவிடும்.
மீண்டும் தமிழ்சினிமா ரசிகனின் ஞாபகசக்தி மேல் அபார நம்பிக்கை வைத்து ‘காதல்’ என்ற ஒரே ஒரு படத்தை மட்டும் இயக்கியுள்ள பாலாஜி சக்திவேல், தனது நண்பர் லிங்குசாமியின் தயாரிப்பில் இயக்கியுள்ள இரண்டாவது படம்’வழக்கு எண் 18/9.
படபோஸ்டர், பத்திரிகை, டி.வி. ட்ரைலர் விளம்பரங்களை வைத்தே இந்த முடிவுக்கு வந்தேன். இவ்வளவு நாளும், ‘சாமுராய்’ கல்லூரி’ போன்ற படங்களை இயக்கியவரும் இதே பாலாஜி சக்திவேல்தான் என்று எண்ணியிருந்த என் மூடக்கண்ணை திறந்த, தயாரிப்பாளர், இயக்குனர் ‘ரன்’ லிங்குசாமிக்கு நன்றி. சரி வெட்டிப்பஞ்சாயத்து எதுக்கு ? வழக்குக்கு வருவோம்.
தங்கள் சொந்த காரியமாகவோ, மற்றவர்களுக்காகவோ கோர்ட்வாசல்படி மிதிக்காத ஜீவராசிகள் இருக்க முடியாது. அப்படி கோர்டுக்கு வந்த ஒரு வழக்கை, பார்ப்பவர்களை உலுக்கும் விதத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் பாலாஜி சக்திவேல்.
ஒருகொடியில் இரு மலர்கள் மாதிரி, ஒரு கோர விபத்தின் இரு முகங்கள்தான் ’வழக்கு எண்’ படத்தின் கதை.
சேரியில் வசிக்கும் ஜோதி, முகத்தில் ஆசிட் அடிக்கப்பட்டு, உயிருக்குப்போராடும் நிலையில் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் இருக்கிறாள். அதைப்பற்றிய விசாரணையில் ஈடுபடும் போலீஸ், அவளைக்காதலித்ததாகச் சொல்லப்படும், ப்ளாட்ஃபார்ம் கடையில் வேலைபார்க்கும், ஸ்ரீயை விசாரிக்க ஆரம்பிப்பது முதல் பாதியாகவும், ஊர்மிளா வேலை பார்த்த, அபார்ட்மெண்ட் மாணவி மனீஷா, தானே வலிய போலீஸை தேடிவந்து, சம்பவத்தின் இன்னொரு முகத்தை சொல்ல ஆரம்பிப்பதுமாய் ஒரு பரபரப்பான சம்பவத்தை நேரில் பார்ப்பது போன்ற ஒரு உணர்வை படம் முழுக்க நம்மை ஒரு விதமான பதட்டத்தோடே பயணிக்க வைத்திருக்கிறார் பாலாஜி.
விஜய்மில்டனின் ஒளிப்பதிவும், பிரசன்னாவின் பின்னணி இசையும், அறிமுகம் கோபியின் படத்தொகுப்பும் படத்தை இன்னும் நேர்த்தியாக்குகின்றன.
சொல் புதிது, பொருள் புதிது போல், படத்தின் கதை புதிது. களம் புதிது. நடித்திருக்கும் முகங்கள் புதிது.
என்னதான் இங்கிலீஸ் புரஃபஷர் டியூசன் எடுத்தாவது கஞ்சி ஊத்துவார் என்றாலும், ரெகுலர் சினிமாவுக்கான பாடல்கள், காதல்காட்சிகள், காமெடி, காமநெடி எதுவுமின்றி மிகுந்த துணிச்சலாய் இந்த வழக்கை, ’சினிமா வழக்கை’ ஒழித்து பதிவு செய்ததற்காய் பாலாஜி சக்திவேலை எவ்வளவு எங்ஙணம் பாராட்டினாலும் தகும்.
படம் முழுக்கவே நாம் இதுவரை பார்த்தறியாத அறிமுகங்கள்தான் நிரம்பி வழிகிறார்கள்.
நாயகன் ஸ்ரீயில் துவங்கி முரளி,மிதுன்,ஊர்மிளா, மனீஷா ஆகிய அனைவருமே பாத்திரங்களாகவே மாறிவிட்டார்கள் என்று சொல்வது கண்டிப்பாக சம்பிரதாயமான வார்த்தைகள் அல்ல.
க்ளைமாக்ஸ் குறித்து இயக்குனருக்கு சின்னச்சின்ன குழப்பங்கள் இருந்திருக்கக்கூடும். பணவெறியிலும், ஜாதிவெறியிலும் விலைபோகும் போலீஸ்காரரை, ஊர்மிளா பதிலுக்கு ஆசிட் அடிக்காமல், இயலாமையில் பொங்கிக்கொண்டிருந்தாள்… என்று, சாசுவதம் என்னவோ அப்படியே விட்டிருந்தால், இது இன்னும் நல்லபடம் ஆகியிருக்குமோ என்று யோசிக்காமல் இருக்க முடியவில்லை.
படம் முடிந்து வெளியே வந்த போது இயக்குனர் பாலாஜி சக்திவேலை கட்டிப்பிடித்து பாராட்டவேண்டும்போல் இருந்தது .அவரது உருவத்தை கட்டிப்பிடிக்க என்னைப்போல் மூன்று பேர் தேவை என்பதால் வெறுமனே கைகொடுத்து வாழ்த்தி விடைபெற்றேன்.
வழக்கு எண் தமிழ் சினிமாவின் கிழக்கு.