சில கொலைகள் நடக்கும் அதற்கு முன்னோர் சாபம் உட்பட வெவ்வேறு காரணங்கள் சொல்லப்படும்.அவற்றைத் தாண்டி அதில் என்ன உண்மை ஒளிந்திருக்கிறது? என்று கண்டுபிடிப்பார்கள் என்கிற அறிந்த கதைக்களத்தில்,நடக்கப் போவதை சொல்லும் ‘தி டார்க் ஹெவன்’ என்கிற ஒரு புத்தகம்,அதைத் தொடர்ந்து வரும் கிராமத்தின் மர்மம் மற்றும் தொடர் கொலைகள் என விறுவிறுப்பான திரைக்கதையுடன் வந்திருக்கும் படம் தி டார்க் ஹெவன்.இருண்ட சொர்க்கம் என்கிற பொருளின் ஆங்கிலச் சொல்.

கொலைகள் குறித்து விசாரிக்கும் காவலதிகாரியாக கதாநாயகன் சித்து வருகிறார்.அவருக்கு இது அறிமுகப்படம்.முதல்படத்திலேயே பல்வேறு உணர்ச்சிகளை வெளிப்படுத்தக்கூடிய கனமான வேடம்.அதில்,தேர்ந்த நடிகர்போல் நடித்திருக்கிறார்.காவல்துறையின் கம்பீரம் தனிமனித உணர்வுகள் ஆகிய இரண்டையும் கலந்த உடல்மொழியைச் சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

நாயகனின் மனைவியாக நடித்திருக்கும் தர்ஷிகாவும் நன்று.அவருடைய இருப்பு மகிழ்வூட்டும்படி இருக்கிறது.மறைவு திடுக்கிட வைக்கிறது.அவை ஒட்டுமொத்தப் படத்துக்கும் பலமாக அமைந்திருக்கிறது.மலை கிராமத்துப் பெண்ணாக நடித்திருக்கும் ரித்விகா,வழக்கம்போல் சிறப்பாக நடித்திருக்கிறார்.

காவலராக நடித்திருக்கும் பிரதீப்,வேல ராமமூர்த்தி,நிழல்கள் ரவி,ஜெயக்குமார்,அருள் டி.சங்கர்,சத்தியா,சாப்ளின் பாலு உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் தங்களது பணிகளைச் செய்து இயக்குநரின் எண்ணத்துக்கு உறுதுணையாக இருக்கிறார்கள்.

பரந்து விரிந்து செல்லாமல் ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள்ளேயே சுழலும் திரைக்கதை என்றாலும் அந்த உணர்வு பார்வையாளர்களுக்கு வந்துவிடாதபடி காட்சிப்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் மணிகண்டன் பி.கே.

இந்தப்படத்தின் காட்சிகளை,அதில் காட்டப்படும் பயங்களை உயர்த்திக்காட்ட வேண்டுமெனில், பின்னணி இசை மிகமுக்கியம் என்று உணர்ந்து உழைத்து படத்துக்கு திகில் கூட்டியிருக்கிறார் இசையமைப்பாளர் சக்தி பாலாஜி.

படத்தொகுப்பாளர் ராஜா ஆறுமுகம்,பல விசயங்களை அறிமுகப்படுத்தி அவற்றை விறுவிறுப்பாகக் கொண்டு செல்ல முயன்றிருக்கிறார்.

தொடர்ந்து நடக்கும் கொலைகளுக்குக் காரணம் முன்னோரின் சாபமா? இந்நாள் மனிதர்களின் திட்டமிட்ட செயலா? என்கிற கேள்விகளையும்,படிப்பவர்களின் வாழ்க்கையைப் புட்டுப்புட்டு வைக்கும் புத்தகம் எனும் வியப்பையும் இரண்டறக் கலந்து கதை திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் பாலாஜி.காவலதிகாரி,வேலையாக மட்டும் செய்தால் போதாதென அவருக்கும் தனிப்பட்ட இழப்பைக் கொடுப்பது உணர்வுப்பூர்வமான ஒன்று.அதை இவரும் கையாண்டிருக்கிறார்.

இந்தக் கதையை வைத்துக்கொண்டு எங்கும் போரடித்துவிடக்கூடாது என்கிற விழிப்புணர்வுடன் படத்தைக் கொடுத்திருக்கிறார்.திகில் மர்மப் படங்களின் பிரியர்கள் இரசித்துப்பார்க்கும்படி அமைந்திருப்பது இப்படத்தின் பலம்.

– இளையவன்