எம்.எஸ்.சுப்புலட்சுமியை சுரண்டிக் கொழுத்த சமூகத்தைப் பற்றி பயோபிக் பேசுமா?
========
எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கை ‘எம்.எஸ்’ என்ற பெயரிலேயே திரைப்படமாகிறது. ராஷ்மிகா மந்தனா என்ற இளம் நடிகை எம்.எஸ்.சுப்புலட்சுமியாக நடிக்கிறார் என்பது செய்தி.
இதற்கு முன் பல முயற்சிகள் நடந்து அது கைவிடப்பட்டிருக்கிறது. காரணம் மேலோட்டமாக பார்க்கும்போது ‘பாரத ரத்னா’ போர்த்தப்பட்டு பளபளப்பாக இருக்கும் எம்.எஸ்சின் வாழ்க்கை நிஜத்தில் அப்படியாக இருந்திருக்கவில்லை.
பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒரு பெண்ணையும், அவள் திறமையையும், அவள் வாழ்க்கையையும் மொத்தமாக உறிஞ்சிக் குடித்த ஒரு சமூகத்தை பற்றி படத்தில் பேச வேண்டியது இருக்கும்.
சுப்புலட்சுமியின் பாடல்கள், திரைப்படங்கள், விருதுகள் பற்றி பேசினால் அது வெறும் டாக்குமெண்டரியாகத்தான் இருக்கும். ஆனால் அவரின் உண்மையான வாழ்க்கை பற்றி பேசினால் நான்கு பாக திரைப்படத்திற்கான கண்டெண்டுகள் இருக்கிறது. அந்த உண்மைகளை படம் பேசுமா? என்பது பெரிய கேள்விக்குறிதான்.
மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி என்கிற எம்.எஸ்.சுப்புலட்சுமி முன்பு ‘தேவதாசிகுலம்’ என்றும் பிற்காலத்தில் ‘இசைவேளாளர் குலம்’ என்றும் அழைக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர். கோவில்களில் பாடுவதும், ஆடுவதும், இசை கருவிகள் வாசிப்பதுமே அவர்கள் குலத் தொழில்.
அந்த குலத்தில் பிறந்த சண்முகவடிவு வீணை இசை கலைஞர். மகள் சுப்புலட்சுமிக்கு நன்றாக பாட வருவதை அறிந்த அவர், அவள் வளர வேண்டும் எனறால் இசை கம்பெனிகள் இருந்த சென்னைதான் சரி என்று சென்னைக்கு அழைத்து வந்தார். வந்த இடத்தில் மியூசிக் அகாடமியில் திடீர் மேடை கிடைத்து பாடியதும், பின்னர் புகழ்பெற்று வளர்ந்ததும் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.
சுப்புலட்சுமியின் இசை குழுவில் பிடில் வாசிக்க சதாசிவம் என்கிற பார்ப்பணர் வந்து சேர்ந்தார். அவர்தான் சுப்புலட்சுமியின் தலையெழுத்தை மாற்றி எழுதியவர். அவருக்கு உதவியாளர் போலவும், மானேஜர் போலவும் இருந்து கொண்டு எம்எஸ்சின் வாழ்க்கையை டிசைன் பண்ணத் தொடங்கினார்.
பாடவந்த எம்எஸ் சினிமாவில் நடிக்கவும் தொடங்கினார். அன்றைய பெரிய இயக்குநர் கே.சுப்ரமணியம் இயக்கிய ‘சனாதனம்’ படத்தில் நடித்தார். ஒரு வயதானவருக்கு மனைவியான இளம்பெண்ணின் கதை அது. பிற்காலத்தில் எம்எஸ்சின் நிஜ வாழ்க்கையும் அப்படித்தான் ஆனது.
சினிமா நடிகை ஆனதும் சுப்புலட்சுமியின் கனவுகள் விரியத் தொடங்கியது. சுதந்திரத்தை விரும்பியது. ஆனால் சதாசிவ அய்யரிடமிருந்து அது கிடைக்கவில்லை.
‘சகுந்தலை’ என்ற படத்தில் நடித்தபோது உடன் நடித்த ஜி.என்.பாலசுப்ரமணியம் என்ற நடிகரை காதலித்தார். அவருக்கு நிறைய காதல் கடிதங்களை எழுதினார். இதனால் எம்எஸ் தன் கைவிட்டு போய்விடுவாரோ என்று பயந்த சதாசிவ அய்யர் முதல் மனைவி இறந்த கையோடு சுப்புலட்சுமியை திருநீர்மலைக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்து கொண்டார்.
உதவியாளர், மானேஜராக இருந்தவர் இப்போது முதலாளி ஆனார். எம்எஸ் என்ன பாட வேண்டும் என்பதில் தொடங்கி எந்த மேடையில் பாட வேண்டும் என்பது வரை சதாசிவ அய்யர் தீர்மானித்தார்.
பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த எம்எஸ் மீது பிராமண பிம்பத்தை கட்டமைத்தார். சமூகத்தை பாடியிருக்க வேண்டிய சுப்புலட்சுமியை இறைவனை மட்டுமே பாட வைத்தார். தன் சமூக விடுதலைக்காக பாடி இருக்க வேண்டியவரை. பிராமணர்களை மகிழ்விக்க பாட வைத்தார்.
தனக்காக ஒரு பத்திரிகை தொடங்க வேண்டும் என்பதற்காகவே ‘சாவித்ரி’ என்ற படத்தில் எம்எஸ்சை நடிக்க வைத்தார். எம்.எஸ்.சம்பாதித்த பணத்தை எல்லாம் கோவில்களுக்கும், மடாலயங்களுக்கும் மடை மாற்றி விட்டார்.
‘மீரா’தான் கடைசி படம் என்றும் அவரே தீர்மானித்தார். அந்த படத்தின் மூலம் வடநாட்டு தலைவர்களின் நட்பை சம்பாதித்தார். அதனை தனது சுயலாபத்திற்காக பயன்படுத்திக் கொண்டார்.
எம்.எஸ்.சுப்புலட்சுமி உயர்ஜாதி பெண்ணாக மாற்றப்பட்டார், விருதுகளால் அலங்கரிக்கப்பட்டார். இசை கடவுளாக போற்றப்பட்டார்.
ஆனால் ஒரு தனி மனுஷியாக தன் சுதந்திரத்தை இழந்தார். தான் விரும்பிய வாழ்க்கையை இழந்தார். தன் அடையாளத்தை இழந்தார்.
அதன் காரணமாக ஆரம்ப காலத்தில் உற்சாக பிரவாகமெடுத்த அவரது இசை பிற்காலத்தில் மனதை பிழியும் சோகமாகவே வெளிப்பட்டது.
இவற்றையெல்லாம் கண்டிப்பாக அவரின் பயோபிக் படம் பேசாது.
பிராமண சமூகம் அவரை பேணி பாதுகாத்து அவரது இசையை உலகிற்கு தந்ததாகத்தான் பேசும்.