மனோபாலாவின் புரொடக்ஷன் ஹவுஸ் தயாரித்து லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் வெளியீட்டில் ( யாருக்கு லாபம்?) வந்திருக்கிறது இந்த சதுரங்க வேட்டை. சில நிஜ ப்ராடு சம்பவங்களின் அடிப்படையில் இதை உருவாக்கியிருக்கிறார் ( புது?) இயக்குனர் வினோத்.
பணம் சம்பாதிப்பது ரொம்ப ஈசி.. உங்களைப் போலவே பணம் சம்பாதிக்கிற பேராசையுள்ள ஆளை நீங்க ஏமாத்துனா போதும் என்கிற வரிகளுடன் ஆரம்பிக்கிறது படம். ஹீரோ காந்தி பாபு(நட்ராஜ்), முதலில் டபுள் டெக்கர் எனப்படும் மண்ணுளிப் பாம்பு பலகோடி ரூபாய் போகும் என்று ஆட்களை நம்பவைத்து வியாபாரம் செய்து ஏமாற்றுகிறார்.
அடுத்ததாக எம்.எல்.எம் மார்க்கெட்டிங், அப்புறம் ஈமு கோழிகள், பாதிவிலையில் பவுன், அமெரிக்க ஏரித் தண்ணீர், ரைஸ் புல்லிங் கலசம் என்று விதவிதமான ஏமாற்று வேலைகளைச் செய்து ஏமாற்றுகிறார். இவை எல்லாமே நிஜத்தில் நம் தமிழ்நாட்டிலேயே நடந்த ஏமாற்று வேலைகள். பின்பு நம் ஹீரோ போலீஸில் பிடிபடுகிறார்.
அதிலிருந்து கோர்ட் கேஸ் என்று போய் அவற்றிலிருந்து ஹீரோ தப்பி வருவதற்குள் இடைவேளை வந்துவிடுகிறது. இடைவேளைக்குப் பின் தனது பழைய எதிரிகளால் துரத்தப்படும் சக்தி வாழ்க்கையின் எல்லைக்கே ஓடுகிறார். மரணத்தின் விளிம்பிற்குச் செல்லும் அவரை அவரது பழைய காதலி காப்பாற்றிவிட, நட்ராஜ் மனது மாறி நல்லவனாக வாழ ஆரம்பிக்க, விதி அவரை விடுவதாயில்லை. பழைய எதிரிகள் மீண்டும் குறுக்கிட்டு அவரை பழையபடி ஏமாற்று வாழ்க்கைக்கு இழுத்துச் செல்கிறார்கள். அதிலிருந்து அவர் மீண்டாரா ? நல்ல பாதைக்குப் போனாரா? இல்லையா ? என்பது தான் முடிவு.
படத்தில் முதலிடம் பிடிக்கும் விஷயங்கள் திரைக்கதையும், வசனங்களும் இயக்குனர் இயக்கியிருக்கும் விதமும் தான். திரைக்கதையும் வசனங்களும் பளிச்சிடுகின்றன. எப்படி ஏமாற்றுகிறார் சக்தி என்று ஆவலைத் தூண்டும் விதமாகவே காட்சிகள் செல்கின்றன. ஏனென்றால் இதில் ஏமாற்றுபவன் ஹீரோவாக இருப்பதாலும், ஏமாறுபவர்களிடம் ‘மற்றவர்களை விட குறுகிய காலத்தில் தான் பணம் சம்பாதிக்கவேண்டும்’ என்கிற பேராசையும் இருப்பதாலும் ஐயையோ இப்படி ஏமாற்றுகிறாரே என்று யாருக்கும் தோன்றுவதில்லை. நடிப்பு வாங்குவதிலும் இயக்குனர் தேறிவிடுகிறார். நாயகியை கொல்வதற்கு வீட்டிலியே வைக்கப்படும் அடியாள் மனம் மாறுவது இயல்பாக சொல்லப்பட்டிருக்கிறது.
ஹீரோ நட்ராஜ் மட்டும் மேனேஜ்மண்ட் கோட்டாவில் நுழைந்தவர் போலவே தெரிவதால்(நட்ராஜ் ஒளிப்பதிவாளராம்) நடிப்பும் மேனேஜ்மண்ட் கோட்டா அளவிற்கே அவரிடமிருந்து வெளிப்பட்டிருக்கிறது. பின்னி பெடலெடுக்கவேண்டிய ஸ்கோப் இருந்தும் மூன்றாம் வகுப்புப் பையன் போல ஏதோ பாஸ்மார்க்கிற்கு நடித்திருக்கிறார். இது மட்டும் ஒரு ஸ்டார் (தனுஷ்?) செய்த படமாக இருந்திருந்தால் இது மாபெரும் வெற்றிப்படமாக ஆகியிருக்க நிறைய வாய்ப்பிருக்கிறது. இருந்தும் நட்ராஜ்ன் சுமாரான நடிப்பிலும் கூட படம் பாஸாகிவிடுகிறது. ஹீரோவின் ப்ளாஷ்பேக்கை கார்ட்டூன் வடிவில் சொன்னது ஹாலிவுட் படங்களில் வந்த உத்தி என்றாலும் ரசிக்கக்கூடியதே.
நாயகி இஷாரா நடிப்பில் சுமார் தான்., வில்லன்கள், நண்பர்கள் எல்லோரும் ஓ.கே.வாக கடமையை செய்திருக்கிறார்கள். மக்கள் எல்லா விவரங்களும் தெரிந்தவர்களாகவே இருந்தும் பேராசையால் எப்படியெல்லாம் ஏமாறுகிறார்கள் என்பதை வெளிக்கொண்டு வந்திருக்கும் இயக்குனரைப் பாராட்டலாம். பல விஷயங்களில் ஏமாற்றுவதன் நுணுக்கத்தை பார்வையாளர்கள் புரிந்துகொள்ள இயலாமல் மேம்போக்காகவே இயக்குனர் சொல்லிச் செல்கிறார்.
படத்தின் எடிட்டர் ராஜசேகரும், இயக்குனரும் சரியாக இணைந்து உழைத்திருக்கிறார்கள். படத்தின் பல விஷயங்களை எளிதாகத் தாண்டிச் செல்கிறது எடிட்டிங். ஒளிப்பதிவாளர் தனது வேலையை சரியாகச் செய்திருக்கிறார். இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் ஒரு பாடலை தேற்றுகிறார். பிண்ணணி இசையில் பரவாயில்லை. படத்திற்கு வலுசேர்க்கிறார்.
படத்தில் இன்னும் கொஞ்சம் வசனங்களும், காட்சிகளும் முழுமையடையாமல் தோன்றுகின்றன. சடாரென்று காதலிக்கு தான் ஏன் ஏமாற்றுகிறேன் என்று விளக்கும் காட்சியில் முழுமையில்லை. பல இடங்களில் ஹீரோயின் மற்றும் ஹீரோவின் நடிப்பு இயல்பாக இல்லாததால் மனதில் ஒன்ற மறுக்கிறது. கம்யூனிசம் பற்றிய இயக்குனரின் விளக்கத்திலிருந்து அவர் கம்யூனிச சிந்தனைகளை எளிமையாகப் புரிந்திருக்கிறார் அல்லது சரியாகச் சொல்ல முடியவில்லை என்று எடுத்துக் கொள்ளலாம்.
மொத்தத்தில் சதுரங்க வேட்டையில் ஆட்டம் டிராவாகவாவது ஆகுமேயன்றி தோல்வியில்லை. போய் விளையாடிவிட்டு வரலாம்.