சினிமாவில் எப்போதும் தீராத புதிர்களாக இருப்பவை நடிக நடிகையர்களின் சம்பளமும், அவர்களுக்கு ஆகும் வியாபாரம் குறித்த செய்திகளும் தான்.
வாங்கும் சம்பளத்துக்கு மனசார வரிகட்டும் வழக்கம் பெரும்பாலானவர்களிடம் இல்லாததால் உண்மையான சம்பளத்தை ஒருவரும் வெளியே சொல்வதில்லை. பணம் வாங்கும் நட்சத்திரங்கள் தான் இப்படி என்றால், அவர்களுக்கு படியளக்கும் முதலாளிகளோ, பணம் வந்த ரூட், போகும் ரூட் இரண்டையுமே பரம ரகஸியமாக வைத்துக்கொள்ளுகிறார்கள்.
சில தினங்களுக்கு முன்பு, ‘சகுனி’ வியாபாரத்தின் மூலம் கார்த்தி அஜீத்தை
நெருங்கிவிட்டார் என்று கிளப்பப்பட்ட வதந்தி வந்த வேகத்திலேயே அதோ கதி ஆன நிலையில், இப்போது அஜீத்தின் மார்க்கெட்டை டம்மி பண்ணும் அஸ்திரமாக சூர்யாவை கையிலெடுத்திருக்கிறார்கள்.
சமீபத்தில் ஆடியோ ரிலீஸ் செய்யப்பட்ட அஜீத்தின் ‘பில்லா 2’ படத்தின் ஒட்டுமொத்த உரிமையை ஆஸ்கார் ரவிச்சந்திரன் ரூ26 கோடிக்கு வாங்கியதாகச்சொல்லப்பட்டது.
இதையடுத்து, சூர்யாவின் ‘மாற்றான்’ படத்தை ஈராஸ் நிறுவனம் ரூ 41 கோடிக்கு வாங்கியிருப்பதாக செய்திகள் நடமாடுகின்றன.
சம்பள விவகாரத்தைப் பொறுத்தவரை, சூர்யா 8 கோடியும், அஜீத் 12 கோடியும் வாங்குவதாகச் சொல்லப்படுகிறது.
8கோடி சம்பளம் வாங்குபவரின் படம் 41 கோடிக்கும், 12 கோடி சம்பளம் வாங்குபவரின் படம் 26 கோடிக்கும் வியாபாரம் ஆகும் மர்மத்தை, சினிமாவை கரைத்துக்குடித்த புள்ளிகள் யாராவது பொது ஜனங்களுக்கு வெளக்குவார்களா?