மத்தியில் பி.ஜே.பி வந்தாலும் வந்தது இந்த இந்துத்துவா ஆட்களின் தொல்லை தாங்க முடியவில்லை. ரோட்டில் இளவயது ஆணும் பெண்ணும் சேர்ந்து நடந்து போனாலே அடிக்கிறார்கள். இப்போது லேட்டஸ்ட்டாக சிக்கியிருப்பவர் அமீர்கான்.
சமீபத்தில் இவர் நடித்த பி.கே என்கிற ஹிந்திப் படம் வெளியானது. காமெடிப் படமான அதில் ஒரு வேற்றுகிரக வாசியாக அமீர்கான் வருகிறார். படத்தில் ஒரு பாகிஸ்தானிய இளைஞரும், வட இந்தியப் பெண்ணும் காதலிப்பார்கள்.
படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று கலெக்ஷன் வர ஆரம்பித்த நேரம் பஜ்ரங்தள் இதற்கு எதிர்ப்புக் குரல் எழுப்பியது. எப்படி? கோர்ட்டில் கேஸ் போட்டா? இல்லை இயக்குனர்களுக்கு படத்தில் இந்து மதத்தினரை புண்படுத்தும் காட்சி இருக்கிறது அதை நீக்குங்கள் என்று கோரிக்கை விடுத்தா? இல்லை. நேராக தியேட்டர்களை புகுந்து நொறுக்கிவிட்டார்கள்.
படத்தில் போலிச் சாமியார்களை காமெடியாகச் சித்தரித்தது ஒரு காரணம். இரண்டாவது காரணம் பாகிஸ்தான் பையனும், இந்தியப் பெண்ணும் காதலித்து திருமணம் செய்வது. இதை ‘லவ் ஜிகாதி’ என இந்துத்துவ அமைப்பினர் அழைக்கின்றனர்.
போலிச்சாமியார்கள் வருடம் ஒரு நாலுபேராவது கைதாகி பேப்பரில் சந்தி சிரிப்பது நடப்பதும் அதை எத்தனையோ சினிமாக்களில் நையாண்டி செய்திருப்பதையும் நாம் பார்த்திருக்கிறோம். இப்போது பி.ஜே.பி.யின் ஆட்சியல்லவா, எனவே இப்போது படத்துக்கு பஜ்ரங் தள்ளும் சென்சார் போர்டாக விரும்புகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷோயப் மாலிக்கும் சானியா மிர்ஸாவும் செய்த திருமணம் லவ் ஜிகாதியா?
தமிழ்நாட்டில் கூட இப்படித்தான் விவேக் ஒரு படத்தில் வெங்கடாஜலபதி போன்று தெரிவதாக ஒரு பக்தை கற்பனை செய்வாள் என்று காமெடியாக ஒரு காட்சி வந்தது. அதற்கு இங்குள்ள ராமகோபாலன் அன் கோவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அது இறைவனை இழிவு செய்யும் காட்சியல்ல என்று தெளிவாக உணர்த்த தமிழ் ரசிகர்கள் படத்தை வெற்றிகரமாக ஓடச்செய்தனர்.
அமீர்கான் முஸ்லீமாக இருந்தாலும் படத்தின் இயக்குனர் ராஜ் ஹிரானி இந்துவாக இருப்பது ஒரு ஆறுதல். அமீர்கானும், ராஜ் ஹிரானியும் படத்தில் அப்படி மதத்தையோ, கடவுளையோ புண்படுத்தும் காட்சிகள் இல்லை எனவும், போலி மதகுருக்கள் என்னும் மனிதர்களை மட்டுமே காட்டியிருப்பதாகவும் தங்கள் நிலையை தெளிவாக விளக்கியிருக்கிறார்கள்.
பி.கே.வை உடனே பார்க்கவேண்டுமே!!