ஆண், பெண் இணைந்து வேலை செய்யும் அலுவலகத்தில் ஆண்களால் பெண்கள் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாவது பற்றி விதம் விதமாக நியூஸ்கள் கேள்விப்படுகிறோம். பல வழக்குகள் கூட வந்திருக்கின்றன. ஆனால் அலுவலகத்தில் ஆண்கள் சக ஊழியைகளால் பாலியல் தொல்லைக்கு ஆளாவதும் நடக்கிறது என்று சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் வெளிவந்த ஆய்வு தெரிவிக்கிறது.
பெண்களால் பாலியல் தொல்லைக்கு உள்ளாகும் ஆண்கள் அதுபற்றி மேலிடத்தில் புகார் செய்ய பயப்படுகிறார்கள். அவ்வாறு அவர்கள் புகார் செய்தாலும் “நீ ரொம்ப குடுத்து வெச்சவன்பா” அல்லது “சே.. எனக்கு சான்ஸ் இல்லாம போச்சே” என்கிற ரீதியில் அவர்கள் கிண்டல் செய்யப்படுகிறார்களாம்.
முன்னாள் லெப்டினன்ட் ரீட்டா கங்வானி சொல்கிறார்.. “உண்மைதான். பணிபுரியும் இடத்தில் ஆண்கள் தனது பெண் மேலதிகாரியாலோ அல்லது உடன் பணிபுரியும் பெண்ணாலோ பாலியல் தொல்லைக்கு ஆளாவது நடக்கிறது. ஆண்களே எல்லாவற்றிலும் எல்லாவற்றையும் ஆட்சி செய்த காலத்திலிருந்து இப்போது பெண்களும் எல்லா விஷயங்களிலும் ஆண்களுக்கு சமமாக நிற்கும் நிலைக்கு வந்திருக்கிறோம். எனவே பெண்களும் பெருமைக்காகவோ அல்லது தனது அதிகாரத்தை நிரூபிப்பதற்காகவோ இதில் ஈடுபடுகிறார்களேயன்றி வெறும் காமத்திற்காக மட்டும் என்று கருதிவிடக் கூடாது. ”
ஆனால் பெரும்பாலானாவர்கள் “ஆண்களுக்கு இதெல்லாம் ஒரு மேட்டரா” என்பது போலத் தான் பார்க்கிறார்கள். ஐடியா நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரியும் பல்லவி கூறுகிறார் “பெண்களுக்கு இமேஜ் ரொம்ப முக்கியமானது. இது போன்ற நடத்தைகளில் ஈடுபடும் பெண் பற்றிய தகவலானது உடனடியாக ஆபீஸ் முழுதும் பரவக்கூடியது. பெண்கள் தங்களது இமேஜை குறைத்துக் கொள்ள எப்போதுமே விரும்புவதில்லை. அதனால் பெண்கள் ஆண்களுக்கு பாலியல் தொல்லை தருவது அவ்வளவு சாதாரணமாக நடந்து விட வாய்ப்பே இல்லை”.
“இது போன்ற அலுவலகத்தில் ஏற்படும் உறவுகளை பெண்கள் ஒரு மனரீதியான ஆதரவுத் தேடலாகவோ, மன அழுத்தத்திற்கான வடிகாலாகவோ தான் கருதுகிறார்கள்” என்கிறார் ரீட்டா கங்வானி. பரதீஷ் அகர்வால் என்கிற ஆண் சாப்ட்வேர் தொழிலாளரை கேட்டபோது “நான் இதுவரைக்கும் பெண்களால் பாலியல் தொல்லைக்கு ஆளாகவில்லை. ஆனால் அப்படி ஆளானால் நன்றாயிருக்கும்” என்று கண்ணடிக்கிறார்.
பாலியல் தொந்தரவு தரும் பெண்ணை ஏதோ ஒரு விதத்தில் அந்த ஆணுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில் ஆண் அந்த பாலியல் தொந்தரவை விரும்பி ஏற்று உடன்படுகிறார். அதே சமயம் அந்தப் பெண்ணை அவருக்கு எந்த விதத்திலும் பிடிக்கவே இல்லை எனும்போது உண்மையிலேயே அது நரக வேதனையை தரக்கூடியதாக அந்த ஆண் உணர்வார் என்கிறார்கள் உளவியலாளர்கள்.